மின் தேவையினை பூர்த்தி செய்ய மரபுசாரா ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் முன்னிலையில் கடல் அலையின் உந்து சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியாக கோவில்பட்டியைச் சார்ந்த மரிய செல்வராஜ் என்பவரால் மாதிரி இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில், 30.03.2012 அன்று (நேற்று) செய்து காட்டப்பட்டது.
இம்முயற்சியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். மேலும், இம்மாதிரி இயந்திரத்தை விரிவு செய்து, வணிக நோக்கில் மின்சாரம் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின்னியல் துறை தலைவர் சாமுவேல் முத்துராஜ், வல்லநாடு இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மின்னியல் துறை தலைவர் இருதயராஜ் மற்றும் மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில்கள் விரிவாக்க மைய உதவி இயக்குநர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சோதனை முயற்சியை ஒருங்கிணைத்த தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஞானசேகர், திட்ட மேலாளர் பாக்கியம் மற்றும் உதவி பொறியாளர் திருமதி.சொர்ணலதா ஆகியோரும் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர். |