தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய மின் கட்டணம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கியது.
புதிய கட்டண விகிதம் பற்றிய விவரம்:
வீடுகளில் 2 மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் 1 ரூபாய் 10 பைசா ஆகும்.
மேலும் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் இருமாத நிலைக்கட்டணமாக 20 ரூபாய் செலுத்த வேண்டும்.
200 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் யூனிட்டுக்கு 1 ரூபாய் 80 காசு ஆகும்.
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான 300 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 50 பைசா வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 500 யூனிட் வரை பயன்படுத்துவோரிடம் இருமாத நிலைக்கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும்.
500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201 முதல் 500 யூனிட் வரையிலான அடுத்த 300 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும், 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.75 வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இருமாத நிலைக்கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும்.
100 யூனிட் வரை பயன்படுத்தும் வியாபார நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 4 ரூபாய் 30 காசு கட்டணமாக வசூலிக்கப்படும். 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு 7 ரூபாய் வீதமும் கட்டணம் வசூலிக்கப்படும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
உள்ளாட்சி மன்றங்களுக்கான (நகராட்சிகள், பஞ்சாயத்துகள்) கட்டணம் யூனிட்டுக்கு ரூபாய் 5.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5 ஆகும். தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
வழிபாட்டு தலங்களை பொறுத்த மட்டில், 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.2.50 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். 120 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் வீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூபாய் 5.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருமாத நிலைக்கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.50 வீதமும், 501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் கிடையாது. அதாவது 500 யூனிட் வரை இலவச மின்சாரம். 501 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் யூனிட்டுக்கு 4 ரூபாய் ஆகும். இருமாத நிலைக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
இந்த மின்சார கட்டண உயர்வு நாளை (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. 31.3.2013 வரை இந்த கட்டண உயர்வு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் கே. வேணுகோபால், எஸ். நகுல்சாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
மின்வாரியம் மொத்தம் ரூ.9,742 கோடிக்கு கட்டண உயர்வு கேட்டது. நாங்கள் ரூ.7,874 கோடிக்கு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். அரசு வழங்கக்கூடிய மானிய விவரங்களை பிப்ரவரி 4-ந் தேதி வழங்கியது. இதனையும் கழித்தே மின் கட்டணம் அறிவிக்கப்படுகிறது. விவசாயம், குடிசைகள் போன்றவைகளுக்கு இலவச மின்சாரம் தொடருகிறது. அவற்றுக்கு அரசு மானியம் வழங்கி விடுகிறது.
மொத்தத்தில் 37 சதவீதம் அளவுக்கு மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. மொத்தமாக உயரழுத்த மின் நுகர்வோர் மூலம் ரூ.2,600 கோடியும், தாழ்வழுத்த நுகர்வோர் மூலம் ரூ.5,300 கோடியும் கூடுதலாக கிடைக்கும். இதில் தாழ்வழுத்த வீட்டு இணைப்பு நுகர்வோர் மூலம் மட்டும் ரூ.1,700 கோடி கூடுதலாக கிடைக்கும்.
அரசு வழங்கும் மானியம் எல்லாம் சேர்த்தால் மொத்தம் ரூ.29,347 கோடி மின்வாரியத்திற்கு கூடுதலாக கிடைக்கும். இந்த வருடம் மின்வாரியத்தின் வருமானமும், செலவுகளும் சரியாக இருக்கும். எனவே இந்த ஆண்டு மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படாது. 2013-14-ம் நிதி ஆண்டுக்கான மின்கட்டண நிர்ணயத்திற்கான மனுக்கள் வருகிற நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
|