நுகர்பொருள் குறித்து நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதும், நுகர்வோருக்கு அரசு அளித்துள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியிலுள்ள புனித மரியன்னை கல்லூரியில், உலக நுகர்வோர் தின விழா, 30.03.2012 அன்று, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி விழாப் பேரூரையாற்றினார். அவர் தனதுரையில் தெரிவித்ததாவது:-
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து எந்த பொருட்களை வாங்கினாலும் அதனுடைய தரம், அப்பொருட்களை தயாரித்த நாள், உபயோகப்படுத்துகின்ற காலம் போன்றவற்றை தெரிந்து கொண்ட பின்னரே பொருட்களை வாங்க வேண்டும்.
சாதாரண மக்கள் ஏதேனும் பொருட்களை வாங்கும்போது தரம், உற்பத்தி நாள் போன்றவை சரியில்லை என்றால் அதை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இது குறித்து நுகர்வோர் வழக்கு தொடர உரிமை உண்டு. இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றது. எனவே, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இதுபோன்ற நுகர்வோர் விழிப்புணர்வு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் விழிப்புணர்வு தொடர்பாக தெரிந்து கொண்ட கருத்துகளைக் வெளியில் எல்லோரிடமும் சொல்ல வேண்டும்.
பொதுமக்கள், நுகர்வோர் ஆகியவர்களிடமிருந்து இது தொடர்பாக புகார்கள் வரப்பெற்றால் அதிகாரிகள் உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தங்களது கடமைகளை சரியாக செய்தால் உரிமைகளை பெற முடியும்.
இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதுரையில் தெரிவித்தார்.
இவ்விழாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி புனித இஞ்ஞாசியர் மேல்நிலைப்பள்ளிக்கு முதல் பரிசும், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரிக்கு இரண்டாம் பரிசும், தூத்துக்குடி புனித அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அ.பஷிர், செயல் இயக்குநர் எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஆ.சங்கர், நியமன அலுவலர் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை டாக்டர் எம்.ஜெகதீஷ் சந்திரபோஸ், இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மு.முருகன், தொழிலாளர் ஆய்வாளர் சு.விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொன். மாணிக்கம், வருவாய் கோட்டாட்சியர் க.லதா மற்றும் பள்ளி, கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். |