காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் நான்காம் ஆண்டு விழா மற்றும் மூன்றாவது பட்டமளிப்பு விழா, கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில், காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் கட்டப்பட்டு வரும் கல்லூரியின் புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி மாணவி அஜ்ரா கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஆசிரியை ஜோஸ்பின் வில்மா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அல்அமீன் நர்ஸரி மற்றும் ப்ரைமரி பள்ளியின் ஜே.ஆர்.சி. அணி மாணவ-மாணவியர் இறை வாழ்த்துப் பாடல் பாடினர்.
கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜகுபர் ஹுஸைன் கல்லூரியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கமலாவதி மேனிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சுப்புலட்சுமி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர், கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.புகாரீ உறுதிமொழி வாசகங்களை முன்மொழிய, பட்டம் பெற்ற மாணவியர் அதனை வழிமொழிந்தனர்.
பின்னர், கல்லூரியின் செய்தி மடல் வெளியிடப்பட்டது. கல்லூரியின் ஆலோசகர் ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார் அதனை விழா தலைவர், எல்.கே.மேனிலைப் பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், அல்அமீன் நர்ஸரி பள்ளி செயலாளர் ஏ.சி.செய்துல்லாஹ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், கல்லூரி மாணவி ஜே.ஏ.நர்கிஸ் பானு, “பெண் கல்வியும், இஸ்லாமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். “கல்லூரியின் சிறப்புகள்” என்ற தலைப்பில், மாணவி டி.மகாலட்சுமி அகர வரிசையில் கவிதை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாணவியரிணைந்து கல்லூரி வாழ்த்துப்பா பாடினர்.
பின்னர், கல்லூரியின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் வட்டார அளவில் நடத்தப்பட்ட பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசுகளை சிறப்பு விருந்தினர், காயல்பட்டினம் நகர்மன்ற 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் ஆகியோர் வழங்கினர்.
கல்லூரி ஆசிரியை கோகிலா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. விழா ஏற்பாடுகளை கல்லூரியின் ஆலோசகர் ஷா நவாஸ், ஆசிரியர் மீரான் அலீ, அப்துல் ரசாக், ஆசிரியர் ஜுபைர் அலீ, ஆசிரியை முத்து லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல் & படம்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |