நகராட்சி நிர்வாகத்துறையின் ஜூன் 30, 2007 தேதியிட்ட சுற்றரிக்கைப்படி - நகராட்சி மூலம் அறிவிக்கப்படும் அனைத்து டெண்டர்கள் குறித்த விபரங்களும் சம்பந்தப்பட்ட நகராட்சியின் இணையதளத்திலும், நகராட்சிகளுக்கான பொதுவான டெண்டர்கள் குறித்த இணையதளத்திலும் வெளியிடப்பட வேண்டும்.
மேலும் நகராட்சி நிர்வாகத்துறையின் ஜூலை 22, 2011 தேதியிட்ட சுற்றரிக்கைப்படி - நகராட்சி மூலம் அறிவிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலான டெண்டர்கள் - மாவட்ட/மாநில/தேசிய டெண்டர் இதழ்களிலும், தினசரி பத்திரிக்கைகளிலும் வெளியிடப்படவேண்டும்.
காயல்பட்டினம் நகராட்சி சார்பாக 40 லட்ச ரூபாய் மதிப்பிலான துப்புரவு பணிகளுக்கு (திடக்கழிவு மேலாண்மை) தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர் எதிர்வரும் ஏப்ரல் 9 அன்று நிறைவடைகிறது.
அரசு விதிகள்படி டெண்டர் நிறைவுபெறவுள்ள 15 தினங்களுக்கு முன்னரே - சம்பந்தப்பட்ட நகராட்சியின் இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் டெண்டர் விபரங்கள் வெளியிடப்படவேண்டும்.
உதாரணமாக 10 லட்ச ரூபாய் மதிப்புக்கு கூடுதலான டெண்டர்கள் (ரூபாய் 50 லட்சம் வரை) இரு தமிழ் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் 5 லட்சத்திற்கு கூடுதலான மதிப்புக்கொண்ட டெண்டர்கள் (ரூபாய் 25 லட்சம் வரை) மாவட்ட டெண்டர் இதழ்களில் அறிவிக்கப்படவேண்டும். 25 லட்சத்திற்கு கூடுதலான மதிப்புகொண்ட டெண்டர்கள் மாநில டெண்டர் இதழ்களில் அறிவிக்கப்படவேண்டும்.
மேலும் 10 லட்சத்திற்கு மேலே பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் டெண்டர்கள் அனைத்தும் ஈ-டெண்டர் மூலமே நடத்தப்படவேண்டும்.
விதிகள் இவ்வாறு இருக்க - காயல்பட்டினம் நகராட்சி மூலம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் மதிப்பிலான டெண்டர் - நகராட்சிகளுக்கு பொதுவான இணையதளம் (municipality.tn.gov.in/tenders) மூலம் மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அரசு விதிகள்படி - தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொதுவான டெண்டர் இணையதளத்திலோ (மேலே: tenders.tn.gov.in), காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்திலோ (municipality.tn.gov.in/kayalpattinam), மாவட்ட டெண்டர் இதழிலோ, மாநில அளவிலான இரு தமிழ் நாளிதழ்கள் மூலமோ - விளம்பரம் செய்யப்படவில்லை. மேலும் 10 லட்சத்திற்கு மேலே கொள்முதல் செய்யப்படும் இந்த டெண்டர் - விதிமுறைகள்படி ஈ-டெண்டர் முறையிலும் (கீழே: tntenders.gov.in) பெறப்படவில்லை.
இது குறித்து காயலப்ட்டணம்.காம் - நகர்மன்ற ஆணையர் வீ.எஸ். சுப்புலட்சுமியிடம் ஞாயிறு அன்று வினவியது. பதில் கூறிய ஆணையர் - அரசு டெண்டர் இணையதளத்தில் (http://www.tenders.tn.gov.in) டெண்டர் விபரத்தை வெளியிட தான் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
ஏப்ரல் 10 அன்று திறக்கப்படவேண்டிய டெண்டர் - 15 தினங்களுக்கு முன்னரே (மார்ச் 26) அரசு டெண்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆணையரிடம் உரையாடிய பின் காயல்பட்டணம்.காம் - http://www.tenders.tn.gov.in (அனைத்து அரசு துறை டெண்டர்கள்) மற்றும் http://tntenders.gov.in (இ-டெண்டர்கள் இணையதளம்) ஆகியவற்றில் (ஏப்ரல் 2 அன்று) டெண்டர் விபரங்களை மீண்டும் தேடியது. இதுவரை டெண்டர் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
மேலும் - அரசு விதிகள்படி, டெண்டரில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு போதிய அவகாசம் கொடுத்து, இரண்டு தமிழ் நாளிதழ்களிலும் - 15 தினங்களுக்கு முன்னர் - வெளியிடப்படவேண்டும். டெண்டர் முடிய ஒரு வாரமே உள்ள நிலையில் நாளை (ஏப்ரல் 3 அன்று) - ஒரு நாளிதழில் விளம்பரம் வெளிவரும் - என நகர்மன்ற ஓவர்சீயர் (பணி மேற்பார்வையாளர்) செல்வமணி தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் டெண்டர் விபரங்களை வெளியிட விதிகள் இல்லை என மேலும் ஓவர்சீயர் தெரிவித்தார். ஆனால் ஜூன் 30, 2007 தேதியிட்ட - நகராட்சி நிர்வாகத்துறை சுற்றறிக்கை - ஒரு நகராட்சியின் பிரத்தியேக இணையதளத்திலும் - டெண்டர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என தெளிவாக கூறுகிறது.
“… host all tender notices with bid documents for the works costing more than Rs.1.0 lakhs … in the websites of the Government, CMA’s office and the ULBs from 1.07.2007…”
அந்த சுற்றறிக்கையை முழுமையாக காண இங்கு அழுத்தவும். |