தமிழகத்தில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று துவங்கி, 23.04.2012 திங்கட்கிழமையுடன் நிறைவுறுகிறது.
சென்ற கல்வியாண்டில் 01ஆம், 06ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடைபெறும் முதல் பொதுத் தேர்வு இதுவாகும்.
நடப்பாண்டில், சுமார் 12.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இத்தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணிக்கு தேர்வு துவங்கி, நண்பகல் 12.45 வரை நடைபெறும்.
இத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு (புதிய பாடத்திட்டம்) 04ஆம் தேதி, தமிழ் முதல் தாள் தேர்வுயுடன் தொடங்கி, 23ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் முடிவடைகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10,312 பள்ளிக்கூடங்களில் இருந்து ஏறக்குறைய 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ-மாணவியர் இந்த தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துள்ளனர். இதில், 5 லட்சத்து 45 ஆயிரத்து 707 பேர் மாணவர்களும், 5 லட்சத்து 38 ஆயிரத்து 868 பேர் மாணவியரும் அடங்குவர். புதிய பாடத்திட்டத்தில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு 19 ஆயிரத்து 574 பேர் பதிவு செய்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை, 7 லட்சத்து 87 ஆயிரத்து 374 மாணவ-மாணவிகள் தமிழ் வழிக்கல்வியில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக, சென்னையில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 596 பள்ளிக்கூடங்களில் இருந்து 58,098 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். புதுச்சேரியில், 260 பள்ளிக்கூடங்களில் இருந்து, 18,116 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 47 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களும், முதல்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களும், புதிய பாடத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி.தேர்வுகளில், ஏப்ரல் 2012-க்கு முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்கள் அனைவரும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவார்கள்.
பழைய பாடத்திட்டத்தில் மொத்தம் 61,497 மாணவ-மாணவிகள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்துள்ளனர். மெட்ரிகுலேஷன் பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 04ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முடிவடைகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மெட்ரிக்குலேஷன் தேர்வை, தனித்தேர்வர்களாக தேர்வு எழுத மொத்தம் 3227 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலோ-இந்திய பாடத்திட்ட பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வு எழுத மொத்தம் 53 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்களாக 28 மாணவ-மாணவியர் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்கள் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம் முயன்றால், தேர்வு மையத்தை ரத்து செய்து, பள்ளிக்கூட அங்கீகாரத்தை ரத்து செய்திட, பள்ளிக்கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறைக்கைதிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்த 3 ஆண்டுகளாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, மாநிலம் முழுவதிலும் 52 சிறைக்கைதிகள் எஸ்.எஸ்.எல்..சி.தேர்வை, புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களில் எழுதுகிறார்கள். அதற்காக, சென்னை புழல் மத்திய சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |