காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை), இயற்கைப் பேரிடரைச் சந்திக்க வாய்ப்புள்ள மக்களுக்கு மாற்றிடத்தில் குடியிருப்புகள்
கட்டிக்கொடுக்கும் VRCC திட்டத்தின் கீழ் 169 தொகுப்பு வீடுகள் கட்ட ஒப்புதலளிக்கப்பட்டு, கட்டுமானப்
பணிகளும் அக்டோபர் 2010 இல் துவங்கின.
தொகுப்பு வீடுகள் கட்டப்படும் காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தைச் சார்ந்த அப்பகுதி, CRZ
எல்லை வரையறைக்குள் வருவதாகவும், எனவே அப்பகுதியில் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறும் கோரி, முன்னால் காயல்பட்டினம்
நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் சார்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொகுப்பு வீடுகள் கட்டப்படும் அவ்விடம் CRZ எல்லை வரையறைக்குள் வருகிறதா என்பதை District Coastal
Zone Management Authority (DCZMA) உடன் இணைந்து அளந்து பார்த்து, 2011 மார்ச் 04ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தங்கவேல்
ராஜேஷ் கமிஷனுக்கு உத்தரவிட்டதோடு, அதுவரை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடையும்
விதித்தது.
அதன் தொடர்ச்சியாக, 16.06.2011 அன்று மதியம் 02.30 மணிக்கு குடியிருப்பு கட்டுமானப் பணிகள்
நடைபெறுமிடத்தை கடல் மட்டத்திலிருந்து அளந்தறியும் பொருட்டு கமிஷனர் தங்கவேல் ராஜேஷ், வழக்குறைஞர்கள் சுவாமி அய்யா, அரசு
வழக்குறைஞர் சாமுவேல் ராஜேந்திரன் ஆகியோர் கட்டுமானப் பகுதிக்கு வந்து அளந்து பார்த்தனர்.
CRZ பகுதி 1 எனில் 500 மீட்டருக்கும் மேல், CRZ பகுதி 3 எனில் 200 மீட்டருக்கும் மேல், கடல் மட்டத்திலிருந்து (High Tide Line) இடைவெளி
இருக்க வேண்டும் என சட்டம் இருக்க, இந்த அளவீட்டின் படி இக்கட்டுமானங்களுக்கும், கடல் மட்டத்திற்கும் இடையில் 140 மீட்டர் மட்டுமே
இடைவெளி இருந்ததாகத் தெரிகிறது.
இப்பிரச்சனையின் நிலை குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் (திருநெல்வேலி கிளை) இவ்வாண்டு ஜனவரி மாதம் வினவப்பட்ட கேள்விக்கு பதில்
அளித்துள்ள தலைமை பொறியாளர் எட்வின்சம் - இத்திட்டம் குறித்த ஒப்புதல், District Coastal Zone Management Authority (DCZMA) மூலம்
பெறப்பட்டு விட்டதாகவும் - தற்போது State Coastal Zone Management Authority (SCZMA) ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அப்பதிலை தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் - இத்திட்டம் குறித்து DCZMA விடம் சமர்ப்பித்த விண்ணப்ப நகலை காயல்பட்டணம்.காம் கோரியிருந்தது. அந்த நகல்கள் தற்போது - குடிசை மாற்று வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய கட்டுமானப்பணிகள் நடக்கும் இடம் (சர்வே எண்கள் 358/2B, 358/2C மற்றும் 360/2B) - திருத்தியமைக்கப்பட்ட (2nd Revision) Coastal Zone Management Plan - Sheet 27 படி - இப்போது CRZ 2 பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் பிப்ரவரி 2, 2011 இல் எழுதிய கடிதத்தில் (பார்க்கவும் கீழே) - கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடம் (சர்வே எண்கள் 358/2B, 358/2C மற்றும் 360/2B) ) CRZ - பகுதி 1 க்குள் வருவதால் District Coastal Zone Management Authority (DCZMA) உடைய ஒப்புதல் பெறும்படி கூறியிருந்தார். விதிகள் படி CRZ 1 பகுதியில் 500 மீட்டர் வரை நடைபெறும் இதுபோன்ற கட்டுமானப்பணிகளுக்கு DCZMA அனுமதி கிடைக்காது.
ஆனால் CRZ 2 விதிகள்படி கடல் அலைகளில் இருந்து தூரம் கணக்கிடப்படுவதில்லை. மாறாக - முன்னரே, கடலோரமாக ஏதேனும் குடியிருப்போ, சாலையோ இருந்தால் - அந்த கட்டுமானத்தில் இருந்து, நிலம் நோக்கி (landward side) புது கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கலாம். இந்த அடிப்படையிலேயே DCZMA ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது.
நகர்மன்றம் பெயரில் முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் போட்ட வழக்கில் - இரு விஷயங்கள் முக்கியமான வாதங்களாக வைக்கப்பட்டிருந்தது. ஒன்று, நகராட்சி உத்தரவு இல்லாமல் கட்டுமானப்பணிகளை துவங்கியது. இரண்டு, CRZ விதிமுறைகள் மீறல்.
இதில் முதல் விசயத்தில் - அரசு தரப்பு, இதுபோன்ற திட்டங்களுக்கு நகராட்சியின் அனுமதி தேவையில்லை என வாதிட்டது. இரண்டாம் விஷயமான CRZ விதி மீறல் குறித்தே அரசின் தரப்பில் வாதங்கள் வலுவில்லாமல் இருந்தது.
ஆனால் நகர் ஊரமைப்பு இயக்ககம் (Directorate of Town and Country Planning) சமீபத்தில் (இது குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில்) சர்ச்சைக்குரிய நிலங்கள் CRZ பகுதி 2 இல் அமைந்திருப்பதாக திருத்தம் செய்துள்ளதால் இவ்வழக்கு புதிய பரிமாணம் எடுத்துள்ளது.
தற்போது மாநில அளவிலான கரையோரப்பராமரிப்பு குழுவின் ஒப்புதலுக்காக (SCZMA) இத்திட்டம் காத்திருக்கிறது. நவம்பர் 2011 க்கு பிறகு SCZMA குழு இதுவரை கூடவில்லை. |