மின்சாரம் தாக்கியதில் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். விபரம் பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞான புரம் - கல்விளை பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் இசக்கி முத்து. இவருக்கு வயது 24.
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்த இவர், மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆத்தூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் பேச்சிமுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இதுகுறித்து ஆத்தூர் காவல்நிலையத்தில் வினவுகையில், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்ந்தபூமங்கலத்திலுள்ள அலுவலர் குடியிருப்பில் அமைந்துள்ள மின் கம்பத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகவும், அவரது உடல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இறந்தவரின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் திரண்டிருந்தனர்.
|