தமிழகத்தில் அண்மைக் காலமாக பன்றிக்காய்ச்சல் பரவல் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தமிழகத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் ஏஎச்1என்1 என்ற இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிருமியால் உருவாகக் கூடிய ஒரு தொற்றுநோய் வகையைச் சார்ந்தது.
நோயின் அறிகுறிகள்:
காய்ச்சல், தொண்டை வலி, இருமல், தும்மல், சோர்வு, கடுமையான உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், மூச்சு விடுதலில் சிரமங்கள்...
மிகுந்த கவனம் செலுத்தப் பட வேண்டியவர்கள்:
5 வயதுக்குட்பட்டவர்கள்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள்
கர்ப்பிணிப் பெண்கள்
நீண்ட கால உடல் நலக்குறைவு உள்ளவர்கள் (சர்க்கரை நோயாளிகள், இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள், இருதய நோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்)
மருத்துவ ஊழியர்கள்
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
நோய் பரவும் விதம்:
மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும்
காற்றோட்டமான இடங்களில் வசிக்க வேண்டும்
இந்நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்
நோய் கண்டவர்கள் மூக்கு மற்றும் வாயை மறைக்கும் விதமாக முகமூடி அணிய வேண்டும்
கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்த வரை இந்நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் யாரும் இல்லை. எனினும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 22,000 டாமிபுளூ மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது.
இந்நோய்க்கான அறிகுறிகள் யாருக்கேனும் காணப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற வந்தால், உடனடியாக அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தூத்துக்குடி துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அவர்களை அணுகி டாமிபுளூ மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இந்த நோயை உறுதி செய்யும் சளி பரிசோதனை திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி நுண்ணியல் துறையில் செய்யப்படுகிறது. இந்த சேவையையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |