திடீர் சோதனையில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் 305 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.38,000 தண்டத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்ய இயலாத ப்ளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது தொடர்பாக மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், முறையான நடைமுறைகளை கடைபிடிக்காத விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரிடம் இருந்து 305 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு அபராத தொகையாக ரூ.38,000 வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உள்ளாட்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், கோவில்பட்டி நகரசபை அலுவலர்கள் மற்றும் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் ஆகியோரடங்கிய குழுவினர், ப்ளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யும் கற்பக விநாயகர் ப்ளாஸ்டிக்ஸ், ஸ்ரீ விஷ்ணு சுதர்சன் பாலிமர்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா பாலிமர்ஸ், தாமரை ப்ளாஸ்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது 40 மைக்ரான் அளவுக்கு குறைவான தடிமன் கொண்ட கேரி பைகள் தயாரிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
மேற்படி நிறுவனங்கள் மீது, ப்ளாஸ்டிக் கழிவு (நிர்வாகம் மற்றும் பயன்படுத்துதல் விதிகள்) 2011-ஐ மீறியது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே தூத்துக்குடி மாவட்ட மக்களின் நன்மைக்காகவும், வருங்கால சந்ததியினரின் நலனுக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மாவட்ட நிர்வாகத்தின் இம்முயற்சிக்கு பொதுமக்கள், வணிகர்கள், தயாரிப்பாளர்கள், பல்வேறுதரப்பட்ட விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |