சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், 31.03.2012 அன்று நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்தின் 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை, அதன் செயலாளர் மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை பின்வருமாறு:-
காயல் நல மன்றம் - சிங்கப்பூர்
2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கடந்த 2011ஆம் ஆண்டில் நம் மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை தங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்...
ஜனவரி 2011:
(01) ரியாத் காயல் நற்பணி மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட - ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டத்தில் இணைய செயற்குழு ஒப்புதலளித்தது. இத்திட்டத்தில் இணைந்துள்ள மன்றங்கள் தாம் வழங்கிய மருத்துவ உதவிகளைப் பெற்ற பயனாளிகள் குறித்த தகவல்களை தமக்கிடையில் பரிமாறிக்கொள்வதே இதன் நோக்கம்.
(02) காயல்பட்டினத்தில் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (Cancer Fact Finding Committee - CFFC)வின் செயல்திட்டங்களுக்காக KWAS சார்பில் ரூ.10,000 பங்களிப்பு செய்யப்பட்டது.
பிப்ரவரி 2011:
(03) மருத்துவ உதவிகளுக்காக ரூ.71,500 மன்ற செயற்குழுவால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மார்ச் 2011:
(04) சிங்கப்பூர் ஜாமிஆ சார்பில் சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி நிகழ்ச்சியில் KWAS பங்கேற்றது.
(05) இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கான பங்களிப்பை ரூ.25,000 என்ற அளவில் KWAS அதிகரித்தது.
(06) மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் தி்ட்டத்தின் கீழ் காயல்பட்டினத்தைச் சார்ந்த 39 பயனாளிகளுக்கு 27.03.2011 அன்று - ரூ.39,000 மதிப்பில் சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டது.
(07) மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் முதன்முதலாக Fairy Point Chaletஇல் நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் இக்கூட்ட நிகழ்வுகளை பெரிதும் அனுபவித்து மகிழ்ந்ததுடன், இதுபோன்ற ஒன்றுகூடல் அடிக்கடி நடத்தப்பட வேண்டுமென தமது ஆவலைத் தெரிவித்தனர்.
அடுத்த இரண்டாண்டு பருவத்திற்கான புதிய நிர்வாகக் குழு இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. KWAS அமைப்பின் நிறுவனர் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தனது பொறுப்புக் காலத்தில் முழு ஒத்துழைப்பளித்த மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஆர்.ரஷீத் ஜமான் தலைமையிலான நிர்வாகக் குழுவிற்கு தனது மனப்பூர்வமான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதாக வாக்களித்தார். புதிய நிர்வாகக் குழு சிறந்த முறையில் நகர்நலப் பணிகளாற்றிட அவர் தனது வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்டார்.
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மற்றும் டாக்டர் முஹம்மத் லெப்பை ஆகியோர் மன்றத்தின் ஆலோசகர்களாக செயல்பட இக்கூட்டத்தில் இசைவு தெரிவித்தனர்.
ஏப்ரல் 2011:
(08) மன்றத்தின் உறுப்பினர் மாதாந்திர சந்தா தொகையை, 10 சிங்கப்பூர் டாலர் என செயற்குழு நிர்ணயித்தது. எனினும், மன்ற உறுப்பினர்கள் தமது தகுதி மற்றும் தன்னார்வத்தின் அடிப்படையில் நகர்நலப் பணிகளுக்காக கூடுதல் தொகையளிக்க முன்வருமாறு ஊக்கப்படுத்தப்பட்டனர்.
(09) தேவையுடைய காயலர் ஒருவரின் வீட்டு புனர்நிர்மாணப் பணிகளுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.30,000 நிதியொதுக்கப்பட்டது.
(10) KWASஇன் இக்ராஃவிற்கான ஒருங்கிணைப்பாளராக மன்ற உறுப்பினர் டபிள்யு.கே.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டார். மன்றத்தின் 40 உறுப்பினர்கள் தங்களை இக்ராஃ உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டனர்.
(11) வீடு புனர்நிர்மாணப் பணி குறித்த செயல்திட்டமொன்றை உறுப்பினர் சாளை நவாஸ் முன்வைத்தார்.
மே 2011:
(12) கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வூட்டும் முகாம் - காயல்பட்டினத்தைச் சார்ந்த டாக்டர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களைக் கொண்டு சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. முகாமின்போது மன்ற உறுப்பினர்கள் பலர் எழுப்பிய கண் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார். இம்முகாமை மன்ற உறுப்பினர்கள் நலனுக்காக நடத்திய டாக்டருக்கு நன்றிகள்.
(13) உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்காக, ஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, காதிர் ஸாஹிப் அஸ்ஹர் ஆகியோரடங்கிய சிறப்புக்குழு ஒன்றை செயற்குழு நியமித்தது. இக்குழு - விண்ணப்பதாரர்களை விசாரித்து அறிக்கையை செயற்குழுவிடம் சமர்ப்பித்தது.
(14) மன்றத்தின் உண்டியல் மூலம் நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நன்கொடைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 06.05.2011 அன்று உண்டியல் திறக்கப்பட்டது. இத்திறப்பில், ரூ.1,50,000 நிதி சேகரிக்கப்பட்டது.
(15) CFFCயால் தொகுக்கப்பட்ட அறிக்கை சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில், மன்றத் தலைவர் மற்றும் ஆலோசகரால் சமர்ப்பிக்கப்பட்டது.
(16) திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் துணை முதல்வருடன் சந்திப்பு நடத்தப்பட்டது. இச்சந்திப்பையடுத்து, இக்கல்லூரியில் சேர விரும்பும் காயல்பட்டினம் மாணவர்கள் KWASஐ தொடர்புகொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர்.
(17) எம் மன்ற உறுப்பினர் அஸார் அவர்களின் இளைய சகோதரர் ஏ.எச்.அமானுல்லாஹ் - ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வுில் தூத்துக்குடி மவாட்ட அளவில் முதலிடம் பெற்றதையடுத்து மன்றம் பெருமிதப்பட்டதுடன், மாணவர் அமானுல்லாஹ்வின் சாதனையைப் பாராட்டியது.
(18) சிங்கப்பூர் ஜாமிஆவால் நடத்தப்பட்ட மீலாதுன் நபி நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்காக நன்றி தெரிவித்து ஜாமிஆவால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் KWAS பங்கேற்றது.
ஜூன் 2011:
(19) மன்ற உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் முறைப்படி சேகரிக்கப்பட்டது. இன்னும் பலர் உறுப்பினர் படிவத்தில் கைச்சான்றிட வேண்டியுள்ளது.
(20) இக்ராஃ கல்விச் சங்கத்தை - அதன் சுழற்சி முறை நிர்வாகத்தின் கீழ் துவக்கமாக தலைமையேற்று நிர்வகித்திட வாய்ப்பளித்தமைக்காக, இக்ராஃவிற்கு KWAS நன்றி தெரிவித்தது. தனது தலைமைப் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிட முழு ஒத்துழைப்பளித்த மன்ற அங்கத்தினர் யாவரையும் மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மனதாரப் பாராட்டி, நன்றி தெரிவித்தார்.
(21) 2010-2012 கல்வியாண்டில் KWAS மூலம் சுமார் 35 அணுசரனையாளர்கள், இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அணுசரணையளித்தனர். இக்ராஃவின் நடப்பு நிர்வாகத்தில், KWASஇன் நடப்பு தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் - துணைத்தலைவர்களுள் ஒருவராக சேவையாற்றி வருகிறார்.
(22) காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் மூலம் - நகரிலுள்ள ஏழை-எளிய மாணவ-மாணவியருக்கு இலவசமாக பாடக் குறிப்பேடுகள் வினியோகிக்கப்பட்டது.
(23) இக்ராஃவின் வாழ்நாள் சாதனை மாணவருக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15,000 தொகை KWAS சார்பில் பங்களிப்பு செய்யப்பட்டது.
(24) இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டிற்கு ஒத்துழைப்பளிக்கப்பட்டது.
(25) 25.06.2011 அன்று, மன்ற உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி - சிங்கப்பூர் Sentosa - Palwan Beachஇல் நடத்தப்பட்டது. மகளிர் தமதில்லங்களிலிருந்து கொண்டு வந்த பல வகையான உணவுப் பதார்த்தங்களை ஒன்றாக வைத்து, அனைவரும் பகிர்ந்துண்டனர். மகளிருக்கு நன்றி.
(26) சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட குருதிக்கொடை வழங்கும் முகாமில் KWAS பங்கேற்றது.
ஜூலை 2011:
(27) இக்ராஃவின் பணிப்பளுவைக் குறைக்கும் பொருட்டு, KWASக்கான இக்ராஃ பிரதிநிதியை நியமிக்க செயற்குழு பரிந்துரைத்தது.
(28) மன்ற உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை மன்றத்திடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
(29) பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை சேகரித்து, காயல்பட்டினத்திலுள்ள தேவைப்படும் மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் அதன் தலைவர் மஹ்மூத் லெப்பை அவர்களால் அவை வினியோகிக்கப்பட்டது. இச்சேவையை செய்தமைக்காக அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
(30) அவசர மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு - அவ்வகைக்காக ரூ.45,000 செயற்குழுவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
(31) மும்மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில் வென்ற ஹாஃபிழ் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, ஹாமிதிய்யா முதல்வருக்கு சேவைச்செம்மல் விருது வழங்கப்பட்டதைப் பாராட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியின்போது ஊக்கப்பரிசு அளிக்கப்பட்டதோடு, வரும் ஆண்டு முதல் நகரில் திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்து - பட்டம் பெறும் மாணவ-மாணவியருக்கு KWAS மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
(32) திருக்குர்ஆன் மனனத்தை நிறைவு செய்யும் ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கான ஊக்கப்பரிசுத் திட்டம் முறைப்படி துவக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2011:
(33) ரமழானை முன்னிடடு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த 41 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டது. இதற்கான மொத்த செலவுத் தொகை ரூ.85,000 ஆகும். இவ்வகைக்காக அணுசரனையளித்த உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
(34) சிங்கப்பூரிலுள்ள இந்திய முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான FIM சார்பில், சிங்கப்பூர் பெங்கூலன் பள்ளியில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் KWAS பங்கேற்றது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் மேதகு எஸ்.ஆர்.நாதன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
(35) வீடு புனர்நிர்மாணப் பணிக்காக ரூ.1,50,000 நிதி செயற்குழுவால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
(36) ஹாஃபிழ் மாணவ-மாணவியர் ஊக்கத் தொகை வகைக்காக ஒரு மாணவருக்கு ரூ.2,500 தொகை நிர்ணயிக்கப்பட்டது.
(37) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் நடைபெற்றது.
செப்டம்பர் 2011:
(38) ரமழான் மாதத்தில், மன்ற உறுப்பினர்களிடமிருந்து ஜகாத் நிதியாக ரூ.1,50,000 தொகை சேகரிக்கப்பட்டது.
(39) செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2012 வரையிலான பருவத்திற்கான KWASஇன் உள்ளூர் பிரதிநிதியாக சகோதரர் கே.எம்.டி.சுலைமான் நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் 2011:
(40) “உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை” வழங்கும் திட்டம் - மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் அவர்களால், சிங்கப்பூர் Changi Fairy Point Chaletஇல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டது.
இதுபோன்ற கூட்டங்களை முன்னிறுத்திய ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்பது - மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தமது மன அழுத்தத்தைப் போக்கிடும் வகையில் அமைந்துள்ளது.
புதிதாக மணமுடித்த உறுப்பினர்களான முஹம்மத் அப்துல் காதிர், செய்யித் லெப்பை ஆகியோர் இக்கூட்டத்தின் ஒரு பகுதி செலவினத்திற்குப் பங்களிப்பு செய்தனர்.
(41) சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் நிர்வாகக் கமிட்டி செயலராக சகோதரர் ரஷீத் ஜமான் நியமிக்கப்பட்டார்.
(42) காயல்பட்டினம் நகரிலுள்ள இமாம் - பிலால்கள் நலனுக்காக, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பால் முன்வைக்கப்பட்ட திட்டத்தில் இணைய செயற்குழு ஒப்புதலளித்தது.
நவம்பர் 2011:
(43) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த 45 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி செய்யப்பட்டது. இவ்வகைக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.46,000 ஆகும். பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களில் தலா அரை கிலோ இறைச்சியும் வினியோகிக்கப்பட்டது.
இச்செயல்திட்டத்தை நிறைவேற்றித் தந்த மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி அவர்களுக்கும், சகோதரர் மஹ்மூத் லெப்பை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
(44) அவசர மருத்துவ உதவி வகைக்காக ரூ.1,13,000 தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
(45) உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,20,000 தொகை சேகரிக்கப்பட்டது.
(46) அனைத்துறுப்பினர்களின் ஏகமனதான இசைவையடுத்து, “உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை” திட்டத்தை நடைமுறைப்படுத்த KWAS இசைவு தெரிவித்தது. இத்தி்ட்டத்தின் நடைமுறைகள் குறித்து விளக்கிப் பேசிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள், உறுப்பினர்கள் இத்திட்டத்தில் அவசியம் பங்களிக்குமாறு ஊக்கப்படுத்தினார்.
டிசம்பர் 2011:
(47) மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை அனைத்துலக காயல் நல மன்றங்களுடனும் பரிமாறிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
(48) மன்றத்தின் சார்பில் அளிக்கப்படும் உதவித்தொகையில், மருத்துவ தேவைக்காக ரூ.20,000 தொகையும், கல்வி வகைக்காக ரூ.15,000 தொகையும் அதிகபட்ச உதவித்தொகையாக செயற்குழுவால் நிர்ணயிக்கப்பட்டது.
(49) 28,000 சிங்கப்பூர் டாலர் தொகை மதிப்பீட்டில், 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலை முன்னறிக்கை தயாரிக்கப்பட்டு, செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
(50) இக்ராஃவின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போதான பரிசளிப்பு வகைக்காக (ப்ளஸ் 2 வாழ்நாள் சாதனை மதிப்பெண் வகைக்கு ரூ.20,000/- பத்தாம் வகுப்பு நகரளவில் இரண்டாமிடம் பெறுபவருககு ரூ.5,000/- தொகை என்ற அடிப்படையில்) ரூ.25,000 நிதியளிக்க செயற்குழு தீர்மானித்தது.
இவை, 2011ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆண்டறிக்கையாகும். மன்றத்தின் நகர்நலச் சேவைத் திட்டங்களுக்காக, 2011ஆம் ஆண்டு பருவம் முழுவதிலும் உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஒத்துழைத்தமைக்காக மன்றத் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் நம் யாவருக்கும் நிறைவான நற்கூலிகளை வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை அமைந்துள்ளது. |