ஏப்ரல் 07ஆம் தேதியன்று உலக சுகாதார தினமாகும். இதனை முன்னிட்டு, அறிவுத்திறன் குன்றிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இப்பள்ளியின் பயிற்றுநர்களின் வழிகாட்டலின்படி, மாணவர்கள் தூய்மைப்பணியிலீடுபட்டனர்.
துளிர் பள்ளியின் பெற்றோர் மன்றத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி, “சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கையில்) பாதி” என்ற தலைப்பின் கீழ், சுத்தம் - சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சுற்றப்புறத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் பேணிப்பாதுகாத்திட தங்களாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிப்பதாக இப்பள்ளியின் மாணவ-மாணவியர், பயிற்றுநர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், துளிர் பள்ளியின் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் கலந்துகொண்டு, தூய்மைப்பணியிலீடுபட்ட துளிர் மாணவ-மாணவியர், அவர்களை வழிநடத்திய பயிற்றுநர்களைப் பாராட்டிப் பேசியதோடு, ஒரு மனிதனின் தூய்மை வீட்டைக் காக்கும்... ஒரு வீட்டின் தூய்மை சுற்றுப்புறத்தைக் காக்கும்... சுற்றுப்புறத்தின் தூய்மை நாட்டையே காக்கும் என்றும், இதனை மனதிற்கொண்டு அனைவரும் செயலாற்றிட வேண்டுமென்றும் தனதுரையில் தெரிவித்தார்.
|