பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில், 09.04.2012 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில், பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை. இருப்பினும், இந்நோய் பரவாமல் தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நோய் பரவாமல் தடுக்க,
*** பன்றிக் காய்ச்சல் வந்தவர்களிடம் நெருங்கிப் பழகக் கூடாது...
*** இந்நோய் வந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது...
*** அவர்களிடம் பழக நேரிட்டால் முகத்திரை அணிந்துகொள்ள வேண்டும்...
*** 1 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நின்று பேச வேண்டும்...
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், உடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடுகின்ற விமான நிலையம், இரயில் நிலையம், கோயில் வளாகங்கள், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதிகள் போன்ற இடங்களில் சுகாதார ஆய்வாளர் மூலமாக கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும், மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து இடங்களிலும், பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க விழிப்புணர்வு தொடர்பான தகவல் பலகைகள் ஆங்காங்கே வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறினார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ) நல்லத்தம்பி ஞான திவாகரன், சுகாதார துணை இயக்குநர் - சுகாதாரப் பணிகள் உமா, மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் ராமைய்யா, தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திர இரத்தினம், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், கோவில்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். |