இந்தோனேஷியா நாட்டின் அசே மாநிலத்திற்கருகில் கடலுக்கடியில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து இந்தியா உள்ளிட்ட சுற்றுப்புற நாடுகளில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இன்று மாலை 05.00 மணி முதல் 07.00 மணிக்குள் ஆழிப்பேரலை (சுனாமி) எதிர்பார்க்கப்படுவதால், கடலோரப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாறிச் செல்லுமாறு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, காயல்பட்டினம் கடற்கரைப் பகுதிக்கு வந்த திருச்செந்தூர் வட்டாட்சியர், கடலோரப் பகுதியிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார். எனினும், பொதுமக்களில் ஒரு சாரார் கடலோரத்தை விட்டும் அகன்று செல்லாமல் இருந்ததையடுத்து, சில மணித்துளிகளில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி, கிராம நிர்வாக அதிகாரி மைக்கேல் அந்தோணி பெனடிக்ட் ஆகியோரும், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையில் காவல்துறையினரும் காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்து பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர், கடற்கரை நுழைவாயிலிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் கயிறு கட்டி தடுப்பு அமைத்தனர். இரவு 07.00 மணி வரை கடற்கரைக்குச் செல்ல யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இதனால், கடற்கரையில் அன்றாடம் கறிகஞ்சி, சுண்டல், சுக்கு காஃபி உள்ளிட்ட பதார்த்தங்களை விற்பனை செய்யும் வணிகர்கள் தாம் தயாரித்த பொருட்களை கடற்கரைக்குள் சென்று விற்கவியலாமல், சொளுக்கார் தெரு முனையில் சாலையோரத்தில் கடை விரித்து வணிகத்தைத் துவக்கினர்.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம், கடையக்குடி பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் யாரும் இன்று மாலையில் கடலுக்குச் செல்லாமல் தமது குடியிருப்புகளிலேயே தங்கியிருந்தனர். சுனாமி எச்சரிக்கை குறித்த செய்தியையறியாமல் புன்னக்காயலிலிருந்து காயல்பட்டினம் கடற்பரப்பில் மீன் பிடிக்க வந்த மீனவர்களுக்கு கற்புடையார் பள்ளி வட்டத்தைச் சார்ந்த மீனவர்கள் தகவல் தெரிவித்து அவர்களை திரும்பிச் செல்லுமாறு கூறியதையடுத்து, அவர்களும் தமதூருக்குத் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு சற்று நேரத்திற்கு முன் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நேரத்தில் காயல்பட்டினம் கடற்பரப்பில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் இல்லை. |