நெல்லை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து, காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் நடத்தும் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழான மருத்துவ இலவச முகாம் 08.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு கே.எம்.டி. மருத்துவமனை துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். ஹாஜி எம்.ஏ,ஜரூக், ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காக்கும் கரங்கள் அமைப்பின் ஆலோசகர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காக்கும் கரங்கள் அமைப்பின் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
துளிர் அறக்கட்டளை மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்க செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை வாழ்த்துரை வழங்கினார். காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் நன்றி கூறினார்.
பின்னர் துவங்கிய மருத்துவ முகாமில், நெல்லை ஷிஃபா மருத்துவமனையின் டாக்டர் ரகுபதி, டாக்டர் மங்கையர்க்கரசி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
இம்முகாமில் காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 55 பேர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர். குறிப்பாக, ஏற்கனவே மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு - பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் இம்முகாமில் அதிகளவில் கலந்துகொண்டனர்.
அவர்களுள் 20 பேர், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முகாம் ஏற்பாட்டை காயல்பட்டினம் அரிமா சங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர். |