தமிழக அரசின் “அனைவருக்கும் கல்வி” திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயல்திட்டங்களை செயல்படுத்திட காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
துளிர் அறக்கட்டளை 1998ஆம் ஆண்டு வழக்குறைஞர் எச்.எம்.அஹ்மத் அவர்களால் துவங்கப்பட்டு, அதன் ஓரங்கமாக, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி 1999ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, மனவளர்ச்சி குன்றிய - மூளை முடக்குவாதம், ஆட்டிஸம் (புறவுலகச் சிந்தனையற்றோர்) உள்ளிட்ட பல்வேறு இயலாநிலைக் குழந்தைகளுக்கு - சிறப்பாசிரியர்கள், உடலியக்கப் பயிற்சியாளர்கள், தொழில்வழி சிகிச்சை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர்களால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்புப் பள்ளியில், தற்போது 75க்கும் மேற்பட்ட பல்வேறு இயலா நிலை சிறப்புக் குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு சிறப்பாக மாற்றுத் திறன் கொண்ட சிறாருக்கு பணியாற்றும் துளிர் அறக்கட்டளைக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஐசக் சுகிர்தராஜ் அவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், மாவட்டத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய செயல்பாடுகளை 2012 - 2013ஆம் கல்வியாண்டில் திறம்பட செயல்படுத்தும் பொறுப்பிலிருந்து பணியாற்றுவதற்கு துளிர் அறக்கட்டளைக்கு உத்தரவு தரப்பட்டுள்ளது.
இதன்படி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஏழு வட்டார வள மையங்களில் செயலாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டாரங்களின் 2,500க்கும் அதிகமான மனவளாச்சி குன்றிய - மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட - செவித்திறன், பேச்சுத்திறன் குன்றிய - பார்வைக் குறைபாடுடைய - கற்றல் குறைபாடுடைய மாற்றுத் திறன் சிறாரை அடையாளங்கண்டு, அவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த சிறப்புக் கல்வியாளர்கள், பேச்சுப் பயிற்றுநர்கள், உடலியக்கப் பயிற்றுநர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினரைக் கொண்டு சிறப்புப் பயிற்சிகள் வழங்கி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் 7 வட்டாரங்களில் 75க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தக் கல்வியாண்டின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் பிரிவின்கீழ் இந்த வட்டாரங்களில் பணியாற்றுவதற்கான ஊதியம், விடுப்பு, புதிய பணியமர்த்தல் மற்றும் மேற்பார்வை ஆகிய பணிகளை துளிர் அறக்கட்டளையே மேற்கொள்ளும். இத்திட்டத்திற்கான செயலினங்களுக்கு துளிர் அறக்கட்டளைக்கு அரசு நிர்வாகம் உதவிகள் வழங்கும்.
மேலும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உபகரணங்கள், உடலியக்கப் பயிற்சிக் கருவிகள், அவர்களுக்கான சிறப்பான கழிப்பறை, அவர்களின் பயிற்சியறைக்கு சாய்தளம் அமைத்தல், மறுவாழ்வு உபகரணங்கள் வழங்கல், இன்னபிற திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
இனி, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 7 வட்டாரங்களில் இந்தப் பணிகளை துளிர் அறக்கட்டளையே மேற்பார்வை செய்யும். இதற்கான திட்ட ஒருங்கிணைப்பாளராக, சித்தி ரம்ஸான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (13.04.2012) காலை 11.00 மணியளவில் துளிர் சிற்றரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துளிர் அறக்கட்டளையின் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை தலைமை தாங்கினார். துளிர் பெற்றோர் மன்றத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி முன்னிலை வகித்தார்.
துளிர் நிறுவனர் வழக்குறைஞர் எச்.எம்.அஹ்மத் - அனைவருக்கும் கல்வி திட்டத்தின் - மாற்றுத் திறனாளிகள் உள்ளடங்கியவர்களுக்கான 2012-13ஆம் ஆண்டின் செயல்திட்டங்களை விளக்கினார்.
கலந்துகொண்ட அனைவரிடமிருந்தும், தனித்தனியாக கருத்துக்களும், செயல்பாட்டு அறிக்கைகளும் கேட்டறியப்பட்டு, கணினியில் அவை பதிவு செய்யப்பட்டன. இறுதியாக, அனைத்து ஊழியர்களும் திறம்பட பணியாற்றுவதாக உறுதியளித்து விடைபெற்றனர்.
இவ்வாறு, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன். |