தமது அயராத வேலைப்பளுவுக்கிடையில், உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் ஓரிடத்தில் கூடும் குடும்ப சங்கம நிகழ்ச்சியை இனி ஆண்டுக்கு இருமுறை நடத்த சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கருணையுள்ள அல்லாஹ்வின் நல்லருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் மன்றத்தின் அலுவலகத்தில், 13.04.2012 வெள்ளிக்கிழமையன்று 19.50 மணிக்கு, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் தலைமையில் நடைபெற்றது.
புதிய செயற்குழுவிற்கு வரவேற்பு:
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான எம்.ஆர்.ரஷீத் ஜமான், நடப்பு பருவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள புதிய செயற்குழு உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்றார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் சமர்ப்பித்ததோடு, ரியாத், ஜித்தா, தம்மாம், சிங்கப்பூர் காயல் நல மன்றங்கள் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் இணைந்து செயலாற்றிட முன்வருமாறு - இதுவரை இத்திட்டத்திலிணையாத அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
2012ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்த மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, அடுத்த (இரண்டாம்) காலாண்டிற்கான உறுப்பினர் சந்தா தொகைகளை வழமை போல உறுப்பினர்கள் குறித்த காலத்தில் வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், இரண்டாம் காலாண்டிற்கான நிதி மதிப்பீட்டறிக்கையை அவர் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
அப்போது, முறையான நிதி மதிப்பீட்டறிக்கையின் படி மன்றத்தின் முதல் காலாண்டு செயல்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டமையையும், இரண்டாம் காலாண்டிற்கான நிதி மதிப்பீட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையும் பாராட்டிப் பேசிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், இனி வருங்காலங்களிலும் இதுபோன்ற செயற்பாடு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, இதற்காக ஒத்துழைத்த அனைத்துறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
ஆண்டுக்கிருமுறை குடும்ப சங்கம நிகழ்ச்சி:
பின்னர், மன்றத்தின் சார்பில் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த பின்னூட்டம் கேட்டறியப்பட்டது.
பி.எஸ்.எம்.அப்துல் காதிர், கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இனி ஒவ்வோராண்டும் இதுபோன்ற குடும்ப சங்கம நிகழ்ச்சியை - இதே போன்ற குடில்களில் ஆண்டுக்கு இருமுறை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்தை அங்கீகரித்து கருத்து தெரிவித்த உறுப்பினர்கள், தமது அயராத வேலைப்பளுவடங்கிய தினசரி நடைமுறைகளிலிருந்து மாறுபட்டு 6 மாதங்களுக்கொருமுறையேனும் இதுபோன்று சங்கமிப்பது மிகவும் அவசியம் என்று கருத்து தெரிவித்தனர்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
பின்னர், காயல்பட்டினத்தில் - பொருளாதார நலிவுற்றுள்ள நிராதரவான குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட வினியோகம் இம்மாதம் 29ஆம் தேதியன்று வழங்கப்படும் என்றும், இதற்காக அனுசரணையளித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானமியற்றப்பட்டது.
இக்ராஃவுக்கு ரூ.25,000:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் 2012ஆம் ஆண்டு நிர்வாகச் செலவினங்களுக்காக ரூபாய் 25,000 தொகை வழங்க இக்கூட்டம் ஒப்புதலளித்தது.
விசாரணையறிக்கை:
பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக உதவித்தொகை கோரி மன்றத்தால் பெறப்பட்டிருந்த விண்ணப்பங்களை விசாரித்த பி.எஸ்.எம்.அப்துல் காதிர், வி.எம்.எம்.அப்துல்லாஹ் ஆகியோரடங்கிய குழு, அதுகுறித்த முழு தகவலறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்தது. அவ்வறிக்கையின்படி, ஒப்புதல் குழு பரிசீலித்து, 21.04.2012 அன்று இறுதி முடிவெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
அவசர உதவி:
பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட அவசர விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை வகைக்காக ரூ.10,000 தொகையும், வணிகம் செய்வதற்கான நிதியுதவியாக ரூ.9,000 தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஜாமிஆவின் மீலாத் விழா:
இம்மாதம் 28ஆம் தேதியன்று, பெடோக் விளையாட்டரங்கில் - சிங்கப்பூர் ஜாமிஆ சார்பில் நடத்தப்படவுள்ள மீலாதுன் நபி விழாவில் பங்கேற்க மன்றம் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதுகுறித்த தனி விபரங்கள், விரைவில் தனிச்செய்தியாக அனைத்துறுப்பினர்களின் பார்வைக்கும் அளிக்கப்படும் என்றும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்:
திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் பிரிவின் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதியன்று 10.00 மணி முதல் 13.00 மணி வரை நடத்தப்படவுள்ள தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் (Entrepreneurship Seminar) அனைத்துறுப்பினர்களும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், 21.15 மணிக்கு, எம்.ஜே.செய்யித் அப்துர்ரஹ்மான் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|