தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது. இம்மலருக்கு பொதுமக்களிடமிருந்தும், மாணவ-மாணவியரிடமிருந்தும் ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி - 19.10.2011 தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து நடப்பாண்டை வெள்ளி விழா ஆண்டாகக் கொண்டாடிட தூத்துக்குடி மாவட்ட நலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, 25.03.2012 அன்று வெள்ளி விழா துவக்க நிகழ்ச்சி, தூத்துக்குடி துறைமுகக் கடற்கரையில் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதுவரையில் வெள்ளி விழா கொண்டாட்டங்களை சிறந்த முறையில் நடத்திட, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்படவுள்ள சிறப்பு மலரை வடிவமைக்கவென மலர்க்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மலரில்,
தூத்துக்குடி மாவட்டத்தின் பூகோள அமைப்பு,
சமுதாய அமைப்பு,
கடற்கரை தொடர்பான வரலாற்றுச் சிறப்புகள் அடங்கிய தகவல்கள்,
நீராதார தகவல்கள்,
முத்துநகர் பற்றிய சரித்திர ஆவண ஆதாரங்கள்,
முத்து மற்றும் சங்கு குளித்தல் பற்றிய தகவல்கள்,
தூத்துக்குடி மாவட்ட மக்களின் பண்பாட்டு நாகரிக தகவல்கள்,
தொல்பொருள் ஆய்வு பற்றிய குறிப்புகள்,
பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் பற்றிய தகவல்கள்,
நமது மாவட்டத்தில் வெளிநாட்டவர்கள் வாழ்ந்தது பற்றிய முக்கிய விபரங்கள்,
உலகளவில் பிரசித்தி பெற்ற மாவட்ட வல்லுநர்கள் பற்றிய தகவல்கள்,
சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்,
நினைவகங்கள் தொடர்பான விபரங்கள்,
பாரம்பரிய கலைகள், இசைவாணர்கள் பற்றிய தகவல்கள்,
பாரம்பரிய நாட்டியக் கலைகள் பற்றிய தகவல் தொகுப்புகள்,
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த முக்கிய கோயில்கள், தர்காக்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், ஜெயின் கோயில்கள் குறித்த தகவல்கள்,
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்கள்,
அரிய மண் வகைகள் பற்றிய தகவல்கள்,
மீன்பிடி வல்லங்கள் - மானினங்கள் - தாவரவினங்கள் - உயிர்வாழினங்கள் பற்றிய தகவல்கள்,
இயற்கை வளங்களான பவளப் பாறைகள் - ஆறுகள் - அணைக்கட்டுகள் பற்றிய தகவல்கள்,
1986ஆம் ஆண்டிற்கு முன் - பின் தூத்துக்குடி துறைமுகம் பற்றிய தகவல்கள்,
உப்பு - தீப்பெட்டி - பட்டாசு தயாரிப்பு ஆலைகள் பற்றிய தகவல்கள்,
தூய்மையான முத்து நகராக மாற்றுவதற்கான ப்ளாஸ்டிக் ஒழிப்பு - மழை நீர் சேகரிப்பு - மரம் செடி கொடிகள் வளர்த்தல் - நீராதாரத்தைப் பாதுகாத்தல் - திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக உள்ள தகவல்கள் குறித்த கட்டுரைகள், பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரிடமிருந்து, 31.05.2012 தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.
இக்கட்டுரைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ அனுப்பி வைக்கலாம்.
மேலும் இக்கட்டுரைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் collrtut@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். சிறந்த 3 படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகள் மற்றும் சன்மானங்கள் அளிக்கப்படும்.
மேலும், இம்மலரை வெளியிடுவதற்கு பொதுமக்கள் தங்கள் நன்கொடைகளையும் அளிக்கலாம். இம்மலரில் தங்களுடைய நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கான விளம்பரத்தை வெளியிட விரும்புவோர் விபரங்களை அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |