காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார மையம் (URBAN PRIMARY HEALTH CENTRE) அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஏப்ரல் 15, 2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணைப்படி - தமிழகத்தின் 60 நகராட்சிகளில் சுகாதார மையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மையங்கள் - National Rural Health Mission - திட்டத்தின் கீழ் செயல்புரியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் 2011 - 2012 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் - இந்த 60 மையங்கள், தமிழக அரசின் - Directorate of Public Health and Preventive Medicine அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. மேலும் - புதியதாக மாநிலம் முழுவதும் 75 சிறிய நகர்புற ஊர்களில், ஆரம்ப சுகாதார மையங்களை அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
Directorate of Public Health and Preventive Medicine பரிந்துரைத்துள்ள 75 ஊர்களில் காயல்பட்டினமும் ஒன்று. துவக்கமாக - தற்காலிக அடிப்படையில் செயல்புரிய நகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றினை Directorate of Public Health and Preventive Medicine அலுவலர்கள் கேட்டிருந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தோதுவான கட்டிடம் தற்போது நகராட்சியிடம் இல்லாததால், நகரில் - வாடகை இன்றி கட்டிடம் தர முன் வரும் ஆர்வலர்களை அணுகும்படி, அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அலுவலர்களின் கோரிக்கையை நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும் /
பகுதிகளுக்கும் அனுப்பியுள்ளேன். ஆரம்ப சுகாதார நிலையம் அமைய - வாடகையின்றி - கட்டிடம் தர விரும்புவோர் உடனடியாக தகவல் தரும்படி கேட்டுகொள்கிறேன்.
மேலும் - காயல்பட்டினத்தில் நிரந்தரமாக ஆரம்ப சுகாதார மையம் அமைய - அதற்குரிய நிலமும் கேட்டு Directorate of Public Health and Preventive Medicine அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நவீன கருவிகளுடன் சகல வசதிகளை கொண்டும், தொலைநோக்கு அடிப்படையிலும் ஆரம்ப சுகாதார மையம் அமைய - 50 சென்ட் முதல் 100 ௦சென்ட் வரையிலான நிலம் தேவைப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நிலம் தர முன் வருவோரும் - விரைவில் அதுகுறித்த தகவலை தரும்படி கேட்டுகொள்கிறேன்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் ஆர்வம் தெரிவிக்கும் பட்சத்தில் - இடம் தர விருப்பம் தெரிவித்துள்ளவர்களுடனும், Directorate of Public Health and Preventive Medicine அலுவலர்களுடனும், கலந்த்தாலோசித்த பிறகு, நகரில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க சரியான இடம் குறித்த இறுதி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு தனது அறிக்கையில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்துள்ளார். |