காயல்பட்டினம் அரசு பொது நூலக கட்டிட விரிவாக்கப் பணிக்கு, தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ஆவன செய்து தந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து, காயல்பட்டினம் அரசு நூலக வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் அரசு பொது நூலக வாசகர் வட்டத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 15.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில், நூலக வளாகத்தில் நடைபெற்றது.
நூலக புரவலரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நூலக வாசகர் வட்ட தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலை வகித்தார்.
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வாசகர் வட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியருமான மு.அப்துல் ரசாக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட நூலகப் புரவலரும் நகர்மன்ற உறுப்பினருமான எம்.ஜஹாங்கீர் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்களான ஹாஜி ஏ.லுக்மான், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விருவரும் நூலகப் புரவலர்களாக இணைந்திட இக்கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தனர்.
கருத்துரை:
பின்னர், நூலக புரவலர்களான - காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர் எஸ்.எஃப்.முஹம்மத் முஹ்யித்தீன், சுலைமான், ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், எஸ்.கே.ஸாலிஹ், எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா, வாசகர் வட்ட உறுப்பினர் வி.எம்.பாலமுருகன், ஹாஜி எம்.என்.எல்.ரஃபீக் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தலைமையுரை:
பின்னர், கூட்டத் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா தலைமையுரையாற்றினார்.
கட்டிட விரிவாக்கப் பணிகள் குறித்த விளக்கவுரை:
அதனைத் தொடர்ந்து, நடைபெற்றுக் கொண்டிருக்கும் நூலக கட்டிடத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த செயல்திட்ட விளக்கத்தை, நூலக வாசகர் வட்ட தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.
பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
கட்டிட விரிவாக்கப் பணிக்குதவியோருக்கு நன்றி:
காயல்பட்டினம் அரசு பொது நூலக விரிவாக்க பணிகளுக்கு - தன்னிறைவு திட்டத்தின் கீழ் உதவும் - முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கும், தன்னிறைவு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டி விரிவாக்கம் செய்து தர, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒத்துழைத்து, நமதூர் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கும் நூலக புரவலரும் நகர்மன்ற தலைவருமான ஐ.ஆபிதா அவர்களுக்கும், நகர்மன்ற ஆணையர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
நூலகத்திற்கு மாற்றிடம் அளித்த ரிஸ்வான் சங்கத்திற்கு நன்றி:
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நூலக கட்டிட விரிவாக்கப் பணிகள் நிறைவுறும் வரை, காயல்பட்டினம் அரசு பொது நூலகம் தற்காலிகமாக இயங்குவதற்கு மனமுவந்து இடமளித்து, அனைத்து வசதிகளையும் செய்து தர இசைவு தெரிவித்துள்ள ரிஸ்வான் சங்க நிர்வாகத்தினருக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
மாணவ-மாணவியருக்கு நூலக விழிப்புணர்வு:
கோடை விடுமுறையில், மாணவ-மாணவியர் தமது பொன்னான நேரங்களை வீணான பொழுதுபோக்குகளில் கழிக்காமல், நூலகத்திற்கு வருகை தந்து, எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் வகையிலான பொது அறிவு மற்றும் பயனுள்ள புத்தகங்களைப் படிக்க வைக்க தேவைப்படும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது .
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நூலகர் அ.முஜீப் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நூலக வாசகர் வட்ட உறுப்பினர்களும், புரவலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|