பள்ளிக்கூடங்களில் 10ஆம் வகுப்பு, 11, 12 ஆகிய மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு - அவர்களின் உயர்கல்வியை திட்டமிட்டு பயின்றிட வழிகாட்டு செயல்திட்டங்கள் வகுக்கப்படுமென ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீயில், அபூதபீ காயல் நல மன்றத்தின் இரண்டாம் செயற்குழுக் கூட்டம், 13.04.2012 அன்று மாலையில், மன்றத் தலைவ மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையில், மன்றத்தின் கவுரவ தலைவர் ஜனாப் இம்தியாஸ் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் ஹுஸைன் மக்கி மஹ்ழரீ இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓத கூட்டம் துவங்கியது.
கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட ஆக்கபூர்வாமான நல்ல பல கருத்துக்கள் இக்கூட்டத்தில் பரிமாறப்பட்டது.
வேலைவாய்ப்பு:
மன்றத்தின் செயல்திட்டங்களில் ஒன்றான வேலைவாய்ப்பை எமது மன்றத்தின் மூத்த உறுப்பினரான ஜனாப் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் அவர்கள் 6 வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுவதாக கூறி சேவையை ஆரம்பித்தார். அனைவரும் அவரை வெகுவாக பாராட்டியதுடன், இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும்படி மன்ற செயற்குழு அனைவரையும் கேட்டுக்கொண்டது.
நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் கொள்கை கோட்பாடுகளுடன் கூடிய சேவைகளை பிரதிபலிக்கும் முகமாக "மன்ற லோகோ" உருவாக்க இணைச்செயலாளர் ஜனாப் ஹபீப் ரஹ்மான் ஆர்க்கிடெக் அவர்களை இச்செயற்குழு அன்புடன் கேட்டுக்கொண்டது.
உயர்கல்வி வழிகாட்டு செயல்திட்டம்:
வரும் மே மாதத்தில் விடுமுறையில் தாயகம் செல்லும் நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து - பள்ளிக்கூடங்களில் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்வித்தகுதி, தமது முழு விருப்பத்துடன் எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஏற்றார்போல் கல்வியை தேர்ந்தெடுக்கும் முகமாக நிபுணர்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிக்காட்டும் நிகழ்ச்சிகளை தனித்தோ அல்லது பிற மன்றங்களுடன் இணைந்தோ செயல்படுத்திட திட்டம் தீட்டி, அதற்கென சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டது.
நகர்நல செயல்திட்டங்கள்:
மன்ற பொறுப்பாளர்களின் பொறுப்புகள் முறைப்படுத்தப்பட்டு, அதன்படியே பொறுப்பாளர்கள் செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டது. விடுமுறைக்கு செல்லும் நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து காயல் நகருக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களின் தள ஆய்வுகளையும் [GROUND STUDY] நகர்மன்ற தலைவர் I. ஆபிதா ஷேக், IQRA, K.M.T, Y.U.F, ஐக்கிய சமாதான பேரவை, காக்கும் கரங்கள், அல் அமீன் நற்பணி மன்றம், துளிர் பள்ளி மற்றும் இன்னபிற காயல் நல மன்ற பிரதிநிதிகள் போன்ற பொதுசேவை அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசித்தும் நமது மன்றத்தின் செயல்திட்டங்களை எடுத்துக்கூறியும் முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
அடுத்த செயற்குழு:
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் மே மாதம் 11ஆம் தேதியன்று அஸர் தொழுகைக்குப் பின், மன்றத்தின் கவுரவ தலைவர் ஜனாப் இம்தியாஸ் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெறும் என்று மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்தார்.
இறுதியாக ஹாபிஃழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அபூதபீ காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நல மன்றம்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம். |