பைலேரியாஸிஸ் என்றழைக்கப்படும் யானைக்கால் நோய் ஒழிப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் முக்கிய அறிக்கை ஒன்றை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:-
யானைக்கால் நோய் ஒழிப்பு மற்றும் டி.இ.சி. மாத்திரை வாங்கும் தினம்: 29.04.2012
தமிழ்நாட்டில் 29.04.2012 அன்று யானைக்கால் நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்நோய் கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அன்றைய தினம் இந்நோய் தடுப்பு மாத்திரையான டி.இ.சி. உட்கொள்ள வழங்கப்படவுள்ளது.
பைலேரியாஸிஸ் என்ற யானைக்கால் அல்லது மந்தக்கால் நோயானது உலகில் 12 கோடி மக்களைத் தாக்கியுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில், ஆழ்வார்திருநகரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதியில் 8,112 மக்கள் தொகையில் 30 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோய், குயிலக்ஸ் என்ற பெண் கொசுக்கள் மூலம் பரவி வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும். தோல் சிவந்து காணப்படும். அரையாப்பு பகுதிகளில் நிணநீர் கட்டி கால் வீங்கும். வருடங்கள் செல்லச் செல்ல கால் வீங்கி யானைக்கால் போன்று தோன்றும். விதைகளும், மார்பகங்களும் பெரிய அளவில் வீங்கும்.
இந்நோய் வந்துவிட்டால் முற்றிலும் அதை ஒழித்துவிட முடியாது. ஆனால் நோயாளிக்கு தொடர்ந்து டி.இ.சி. (டை எதில் கார்பமசின் சிட்ரேட்) மாத்திரைகள் கொடுத்து வந்தால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். இந்நோய் உள்ள பகுதியில் வாழும் அனைத்து மக்களும் ஆண்டிற்கு ஒருமுறை என தொடர்ந்து 7 ஆண்டுகள் வயதுக்கு ஏற்றார்போல் டி.இ.சி. மாத்திரை உட்கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் நோய் தடுப்பு முறையாகும்.
தமிழ்நாட்டில் 1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை இம்மருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்துள்ளது. நமது மாவட்டத்தில் முதன்முறையாக கடந்த 2007ஆம் ஆண்டும், அடுத்து 2009, 2010ஆம் ஆண்டுகளிலும் ஆழ்வார்திருநகரி பகுதியில் டி.இ.சி. மாத்திரை வழங்கப்பட்டது.
இந்த வருடம் 2012இல், 8112 மக்கள் தொகையில் 2 வயதுக்குக் கீழ் - 60 வயதுக்கு மேல் உள்ளோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தவிர மொத்தம் 6,613 பேருக்கு டி.இ.சி. மாத்திரை வழங்கப்படவுள்ளது. டி.இ.சி. மாத்திரை பாதுகாப்பானது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இம்மாத்திரையை உணவிற்குப் பின்புதான் உட்கொள்ள வேண்டும்.
மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அளவு:
250 மக்கள் தொகைக்கு மாத்திரை வழங்குபவர் (Drug distributer) என்ற விகிதத்தில் 33 பொது சுகாதார ஊழியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆழ்வார்திருநகரி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று, வயது வாரியாக டி.இ.சி. மாத்திரைகள் மற்றும் அதனுடன் கிருமி மாத்திரையான அல்பண்டாசோல் சேர்த்து, 29.04.2012 ஞாயிற்றுக்கிழமையன்று வழங்குவர்.
மேலும், 30.04.2012 மற்றும் 02.05.2012 ஆகிய இரு தினங்களில், தங்கள் பகுதியில் விடுபட்ட நபர்களுக்கும் மாத்திரைகளை வழங்குவர். இதனைக் கண்காணிக்க ஒரு மருத்துவக் குழுவும், மேற்பார்வையாளர்களும் வட்டார அளவில் செயல்படவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித் துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறை மற்றும் இந்திய மருத்துவக் கழகம் ஆகியன ஒருங்கிணைந்து பங்கேற்கின்றன.
அன்றைய தேதியில் ஆழ்வார்திருநகரி பொதுமக்கள் அனைவரும், பொது சுகாதாரத்துறையின் சார்பாக வழங்கப்படும் - மிகவும் பாதுகாப்பான டி.இ.சி. மாத்திரையை தவறாது உட்கொண்டு நோயற்ற வாழ்வு வாழ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினத்திலும் இந்த யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |