சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், ரூபாய் 80,000 தொகையில் நலத்திட்ட உதவிகள், தாய்லாந்து காயல் நல மன்றத்துடன் (தக்வா) இணைந்து - நகர இமாம்-பிலால்களுக்கான ரமழான் ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களை நிறைவேற்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தாயகம் திரும்பும் மன்ற ஆலோசர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணையினால் எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 30-வது செயற்குழு கூட்டம் மற்றும் சவுதியில் இருந்து 28 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி, பணி விடை பெற்றுச்செல்லும் எமது மன்ற ஆலோசகர் ஹாஜி பிரபு செய்குனா ஆலிம் மஹ்லரி அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும், கடந்த 12.04.2012 வியாழன் பின்னேரம் இஷா தொழுகைக்கு பின் ஹாஜி N.M .இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
தம்மாம் காயல் மன்ற செயலாளர் ஹாஜி S.A. ரபீக் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஹாஜி S.M. முஹம்மத் லெப்பை அவர்களால் இறைமறை வசனங்கள் ஓதி துவங்கப்பட்டது.
காயல் மாநகர் நல பணிகள் பற்றி அலசி ஆராய்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 1 - கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
நமதூர் காயல் மாநகரில் கேன்சர் விழிப்புணர்வு முகாம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நோன்புப்பெருநாள் விடுமுறையில் நடத்த முயற்சி செய்வது என்றும், இது பற்றிய விரிவான நிகழ்வுகள் அடுத்து வரும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும், இது சம்பந்தமாக பணிகளை மேற்கொள்ள ஹாஜி M .E .L . நுஸ்கி, ஹாஜி கூஸ் அபூபக்கர், ஹாஜி முஹம்மத் நூஹு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தீர்மானம் 2 - வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு பொருளுதவி:
நமது ஊரில் எதிர் வரும் புனித ரமலான் மாதத்தில் வறுமையில் வாடும் பிறரிடம் கை ஏந்தாத, அதே சமயத்தில் நாமாக விரும்பி கொடுத்தால் மற்றுமே பெற்றுக்கொள்ளகூடிய குடும்பத்தினர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இது வகைக்கு அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் பங்களிப்பது என்றும் நமது மன்ற அனைத்து உறுப்பினர்களும் விரும்பினால் பங்களிப்பு வழங்கலாம் என்றும் இது சம்பந்தமாக சிறப்பான முறையில் இத்திட்டத்தை சிறப்புடன் செயல் படுத்தி வரும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்துடன் கலந்து ஆலோசிக்க N.M.இஸ்மாயில், ஹாஜி V.M.A.அமீன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தீர்மானம் 3 - பள்ளிவாசல் இமாம் மற்றும் பிலால்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்:
எதிர்வரும் புனித ரமலான் மாதத்தில் காயல் மாநகர அனைத்து பள்ளிவாசல் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தாய்லாந்த் காயல் நற்பணிமன்றம் முடிவு செய்து இது விசயத்தில் இணைந்து செயல்படுமாறு விடுத்த அன்பான வேண்டுகோளை ஏற்று நமது பங்காளிப்பையும் வழங்குவது எனவும், இது விசயமாக தாய்லாந்த் காயல் நற்பணி மன்றத்திடம் ஆலோசிக்க ஹாஜி M .S .நயீமுல்லாஹ், ஹாஜி சம்சுதீன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தீர்மானம் 4 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் ஏழை எளிய மக்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நன்மையை நாடி எளியவர் துயர் துடைக்கும் சீரிய பணிக்கு தாரளமாக உதவிய அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்களையும், துஆக்களையும் இம்மன்றம் தெரிவிக்கிறது.
(அ) நான்கு நபர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 65,000/- வழங்கவும்
(ஆ) நபர் ஒருவருக்கு சிறு தொழில் (தையல் மெசின்) வகைக்கு ரூபாய் 15,000/- வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் எம் மன்ற ஆலோசகர் ஹாஜி பிரபு செய்குனா ஆலிம் மஹ்லரி அவர்களுக்கு வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சியில், அவர்கள் எம் மன்றத்திற்கு ஆற்றிய சேவைகளை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் எடுத்து கூறி வாழ்த்தி துஆ செய்தார்கள். நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கி சிறந்த ஆலோசகர்களாக திகழ்ந்ததை நன்றியோடு பலரும் நினைவு கூர்ந்தார்கள். எமது மன்றத்தின் சார்பில் நினைவு பரிசினை தம்மாம் காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி S .A .ரபீக் அவர்கள் வழங்கினார்கள்.
ஹாஜி M .E .L .நுஸ்கி அவர்கள் நன்றி கூற, செய்குனா ஆலிம் மஹ்லரி அவர்களால் துஆ இறைஞ்சப்பட்டு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்து கூறப்பட்டு நனி சிறப்புடன் நிறைவு பெற்றது .அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.M.முஹம்மத் லெப்பை,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா.
[செய்தி திருத்தப்பட்டது @ 00:10/25.04.2012] |