காயல்பட்டினம் அஞ்சலகத்தில் தங்கக்காசு விற்பனைப் பிரிவு 23.04.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் துவக்கி வைக்கப்பட்டது.
காயல்பட்டினம் அஞ்சலக வளாகத்தில் இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் டி.பாஸ்கரன் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி கோட்டத்தில், முத்தையாபுரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுள்ள அஞ்சலகங்களில் மட்டுமே தங்கக் காசு விற்பனைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும். ஐந்தாவதாக காயல்பட்டினம் அஞ்சலகத்தில் திறக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் தங்கக்காசு விற்பனையை அவர் துவக்கி வைத்தார். முதல் தங்கக் காசை அவர் வழங்க, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அதனைப் பெற்றுக்கொண்டார்.
அடுத்தடுத்த தங்கக் காசுகளை ஹாஜி எஸ்.எம்.கபீர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், ஐக்கியப் பேரவை தலைவருக்கு நிகழ்ச்சித் தலைவரும், நிகழ்ச்சித் தலைவருக்கு, ஐக்கியப் பேரவை தலைவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகரப் பிரமுகர்களுக்கு அஞ்சலக அதிகாரிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த, தூத்துக்குடி கோட்ட அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், காயல்பட்டினம் அஞ்சலக அஞ்சல் தலைமை அலுவலர் எட்வர்ட், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தூத்துக்குடி கோட்ட அஞ்சல் துறை வணிகப் பிரிவு தலைவர் திருஞானம் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. காயல்பட்டினம் அஞ்சலக அஞ்சல் துணை அலுவலர் ஏ.சந்திரசேகர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
அஞ்சலகத்தில் தங்கக்காசு விற்பனை குறித்து காயல்பட்டினம் அஞ்சலக தலைமை அலுவலர் எட்வர்ட் கருத்து தெரிவிக்கையில், 0.5, 1, 5, 8, 10, 20, 50 கிராம் எடைகளில் காயல்பட்டினம் அஞ்சலகத்தில், எந்த வேலை நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், 99.99 சுத்தத்துடன் ஆயத்தம் செய்யப்பட்டுள்ள 24 கேரட் ஸ்விஸ் கோல்ட் தங்கக் காசுகள் இவையென்பதால், தமது பொருளாதாரத்தை தங்கமாக சேமிக்க விரும்புவோர் காயல்பட்டினம் அஞ்சலகத்தில் தங்கக் காசுகளை வாங்கி சேமிக்கலாம் என்றார்.
காயல்பட்டினத்தைச் சார்ந்த வாடிக்கையாளர்கள் தங்கக் காசு வேண்டி அஞ்சலகத்தை நாடியபோதெல்லாம், இங்கு அந்த வசதியில்லாத காரணத்தால் தூத்துக்குடிக்கு அவர்களை அனுப்பி வைத்துக்கொண்டிருந்ததாகவும். அவர்களின் சிரமத்தைப் போக்கும் நோக்குடன் தொடர்ந்து முயற்சித்ததன் அடிப்படையில், தற்போது காயல்பட்டினம் அஞ்சலகத்திலேயே இப்பிரிவு துவக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். |