23.04.2012 அன்று இரவு சுமார் ஒன்பது மணியளவில், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவிலுள்ள தொலைபேசிக் கம்பம் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பிளம்புடன் காட்சியளித்தது. தொலைபேசி கம்பத்தின் மீது உரசியவாறு இருந்த மின் வினியோகக் கம்பியிலிருந்து மின் கசிந்து, அது அறுந்துவிழும் நிலையிலிருந்தது. டெஸ்டர் கருவி கொண்டு சோதித்துப் பார்த்ததில், அத்தொலைபேசி கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது கண்டறியப்பட்டது.
சில மணித்துளிகளில் அவ்விடத்தில் திரண்ட பெரியவர்கள், பொதுமக்கள் யாரும் அக்கம்பத்திற்கருகில் செல்லாதவாறு தடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவ்விடம் வந்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினரும், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உடனடியாக காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிகழ்வை விளக்கினார்.
அதனையடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், அப்பகுதியில் மின் வினியோகத்தைத் தடை செய்து, தீப்பிளம்புடன் காட்சியளித்த மின் வினியோகக் கம்பியை தொலைபேசி கம்பத்தில் படாதவாறு அகற்றிக் கட்டினர்.
உரிய நேரத்தில் நடவடிக்கையெடுக்கப்பட்டதால், அவ்விடத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன். |