இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டத்தில், நகராட்சி பழைய கட்டிடத்தை இடித்தகற்றி, புதிய கட்டிடம் கட்ட தீர்மானமியற்றப்பட்டுள்ளது. கூட்ட விபரங்கள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம், 17.04.2012 அன்று காலை 10.30 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில், நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் முன்வைக்கப்பட்டன:-
நகராட்சிக்கு புதிதாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கான செலவு மதிப்பீடு குறித்து வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடைசியாக அறிவிக்கப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டமை குறித்து 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு விளக்கம் கேட்டார். அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, ஏலம் குறித்த அறிவிப்பு - அரசு சட்ட விதிகளின்படி குறித்த கால அவகாசத்தில் அறிவிக்கப்படவில்லை என்று கூறி தான் ஆட்சேபித்ததாகவும், அதற்குப் பிறகு, ஆணையர் ஏலத்தை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஏலத்தை நிறுத்தியதைக் காரணங்காட்டி சிலர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தான் அறிவதாக 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவிக்க, “அது அவரவர் உரிமை... வழக்கு போட்டால் பார்த்துக்கொள்ளலாம்” என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
“இப்படி இலகுவாகச் சொல்லிவிட்டு நழுவி விடக்கூடாது... கடைசியில் நகராட்சி அதிகாரிகளும், அலுவலர்களும்தான் வழக்குக்காக அலைகின்றனர்... உங்களால் அலைய முடியுமா?” என்று உறுப்பினர் சுகு கேள்வியெழுப்ப, நகராட்சி மூலம் முறையான அனுமதி தந்தால் ஒரு வழக்கென்ன, அனைத்து வழக்குகளையும் சந்திக்க ஆயத்தமாக உள்ளதாக உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எவை என நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் கேள்வியெழுப்பினர்.
அரசுப்பதிவு செய்யப்பட்ட - காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் இதுகுறித்து ஏற்கனவே மன்றத்திற்கு கடிதம் அளித்துள்ளதாகவும், இப்பணியை மேற்கொள்ள - நகரின் அனைத்துப்பகுதி மக்களை உள்ளடக்கிய அவ்வமைப்பையே தேர்ந்தெடுக்கலாம் என்றும் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தெரிவித்தார்.
அது அவசியமற்றது என்றும், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையை அணுகி இப்பணிகளை மேற்கொள்ளச் செய்யலாம் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆட்சேபித்தார்.
ஏற்கனவே பழைய மன்றத்தின்போது சிலர் இப்பணிகளுக்கு நியமிக்கப்பட்டதாகவும், ஊர் மக்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும், எனவே, நமதூரில் ஆள் இருக்க வேறிடங்களில் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கடற்கரையில் தூய்மைப்பணி செய்தபோது, அப்பணியை காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கமே ஒருங்கிணைத்ததாகவும், பொதுமக்கள் அதற்கு முழு ஆதரவளித்ததாகவும், அவையனைத்தையும் தான் நேரில் அவதானித்ததாகவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
“நமதூரைச் சார்ந்தவர்கள் என்றால் இப்பணியை ஒப்படைப்பதில் ஆட்சேபணையில்லை” என இறுதியில் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
இப்பொருள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஒன்றுமில்லாத குடிசை வீடுகளுக்கு 200 ரூபாய் வரை தீர்வைக் கட்டணம் வருவதாகவும், பல மாடிகளைக் கொண்ட வீடுகளுக்கு அதை விட மிகவும் சொற்பத் தொகையே தீர்வைக்கட்டணமாகக் கேட்கப்படுவதாகவும், எனவே மறு அளவீட்டின் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்யலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
அப்போது கருத்து தெரிவித்த ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி, கணினி மென்பொருள் மூலமே இக்கட்டணங்கள் வரையறுக்கப்படுவதாகவும், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கட்டிடங்கள், தொழிற்சாலைப் பகுதி, வணிகப் பகுதி, குடியிருப்புப் பகுதி என 3 மண்டலங்களாக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே தீர்வைக்கட்டணங்களை நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
விவாதங்களுக்குப் பின், முறையீடு பெறப்படும் பகுதிகளில் மட்டும் அளவீடு செய்து தீர்வைக் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யலாமென்றும், அனைத்து வீடுகளையும் அளவீடு செய்வதென்பது தற்கால சூழலில் நடைமுறை சாத்தியமற்றது என்றும் உறுப்பினர்கள் ஒருமித்து கருத்து தெரிவித்தனர்.
இப்பொருள் குறித்து சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் சில விளக்கங்கள் கேட்க வேண்டுமென 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார். அது ஏற்கப்பட்டதையடுத்து, சில கேள்விகளை அவரிடம் எழுப்பி, அவரது விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
காலிமனைக்கு வரி வசூலிக்கும் திட்டம் எங்குமே இல்லை என்றும், சென்னை மாநகராட்சியில் தனக்குச் சொந்தமான காலி மனைக்குக் கூட தீர்வை எதுவும் கேட்கப்படவில்லை என்றும், இது தேவையற்ற ஒன்று என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
வீடு கட்ட வரைபட முன்னனுமதி (ப்ளான் அப்ரூவல்) பெறும்போது, கட்டப்படும் வீட்டிற்காக ஆவணங்களில் காண்பிக்கப்படும் நிலத்தில் வீடு கட்டியது போக எஞ்சிய நிலத்திற்கு மட்டுமே காலி மனை என்று வரி வசூலிக்கும் நடைமுறை இருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தாலே போதுமானது என்றும் உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
நகரின் தற்காலச் சூழலைப் பொருத்த வரை இவ்விஷயத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வர இயலாது என்றும், எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் சட்ட விதிகளை அமைத்துக் கொள்ளலாம் என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
விவாதம் எதுவுமின்றி, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத் துளிகள்...
தகவல் கொடுத்தது யார்?
கூட்டத்தின் துவக்கமே காரசாரமாக இருந்தது... இணையதளமொன்றில், நகர தெரு விளக்குகள் தொடர்பான தொகுப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், இச்செயல் கண்ணியமிக்க முன்னாள் நகர்மன்றத் தலைவரை அவமதிக்கும் செயல் என்றும் கூறி, இதற்கான தகவல்கள் எங்கிருந்து சென்றது என்றும் கேள்வியெழுப்பினார் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு.
அடுத்து பேசிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், அச்செய்தித் தொகுப்பை தான் முழுமையாகப் படித்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கணக்கிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதில் தவறான தகவல்கள் இருப்பின், அவ்விணையதளத்திடம்தான் கேட்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இறுதியில் கருத்து தெரிவித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இக்கூட்டம் தொடர்பான பொருள்கள் குறித்து மட்டும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்குமாறும், இதர விஷயங்கள் குறித்து அது தொடர்பானவர்களிடம் கேட்டறிந்துகொள்ளுமாறும் தெரிவித்தார்.
கிணற்றுக்கு மூடி:
பொருள் எண் 03 குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் தினமும் பலர் அலங்கோலமான உடைகளுடன் குளித்துக்கொண்டிருப்பதாகவும், எனவே அதை மூடியமைத்து பாதுகாத்திட வேண்டுமென்றும் கோரிக்கையெழுப்பினார் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன்.
அவரையடுத்து கருத்து தெரிவித்த 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, பேருந்து நிலைய வளாகத்தில் கட்டண கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளதைப் போல கட்டண குளியலறையும் அமைத்துவிட்டால், அதை குத்தகைக்கு எடுப்போர் இதுபோன்று குளிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
நிரூபித்தால் பதவி விலக தயார்!
நகராட்சிப் பகுதியில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளுக்குப் பகரமாக அவசர அடிப்படையில் வாங்கி வைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளில் சிலவற்றை, 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் முறையின்றி அவரது வார்டுக்கு எடுத்துச் சென்றதாக நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் குற்றஞ்சாட்டினார்.
அதனை மறுத்துப் பேசிய உறுப்பினர் ஏ.லுக்மான், நகர்மன்ற உறுப்பினர்கள் தம் கைகளில் தெரு விளக்கு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் போக்கு சரியானதல்ல என தான் பொறுப்பேற்ற காலம் முதல் ஆட்சேபித்து வருவதாகவும், அவ்வாறிருக்கும் தனக்கு தெரு விளக்குகளை எடுத்துச் செல்ல எந்த அவசியமும் இல்லையென்றும் தெரிவித்தார். “நான் அவ்வாறு எடுத்துச் சென்றதாக நிரூபித்தால் பதவி விலக தயார்! இல்லையென்றால் நீங்கள் பதவி விலக தயாரா?” என்று அவர் துணைத்தலைவரை நோக்கி கேள்வியெழுப்பினார்.
அதனையடுத்து, துணைத்தலைவர் தான் முன்வைத்த குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
நடைபாதை வணிகர்களுக்கு முறையான அனுமதி:
பொருள் எண் 07 குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், நடைபாதையில் வணிகம் செய்வோருக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கட்டணமெதுவுமின்றி முறையான அனுமதி (லைசென்ஸ்) வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், முறையாக தொழில் வரி செலுத்தி கடை வைத்துள்ளவர்களுக்கு தங்கள் கடைகளுக்கு முன்புறம் ஒரு கூரை அமைக்கக் கூட தடை விதிக்கப்படும் அதே நேரத்தில் எந்தக் கட்டணமும் செலுத்தாதவர்களுக்கு இவ்வாறு செய்வதை ஏற்க இயலாது என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய நகர்மன்றத் தலைவர், நடைபாதையில் தள்ளுவண்டி மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்கள் போன்றோருக்கு அனுமதி வழங்குவது குறித்தே பேசப்படுவதாகத் தெரிவித்தார்.
குத்தகைப் பணம் செலுத்தாதோர் மீது நடவடிக்கை:
பல ஆண்டுகளாக ஆடறுப்புத் தொட்டிக்கு குத்தகைப் பணம் செலுத்தாமலிப்போர் மீது நகராட்சியின் நடவடிக்கை என்ன என்று 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் கேள்வியெழுப்பினார்.
அவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பிவிட்டு, அவர்களின் உரிமத்தை தள்ளுபடி செய்யலாம் என ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி தெரிவித்தார்.
பிரச்சினைகள் வரும்...
பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, “இதையெல்லாம் செய்தால் பிரச்சினை வரும்” என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, “இரண்டு நகர்மன்றத்தைப் பார்த்த தங்களைப் போன்ற தைரியசாலிகள் இருக்கையில், பிரச்சினைகள் குறித்து ஏன் பயப்பட வேண்டும்?” என்று கேட்டார்.
அடுத்து பேசிய உறுப்பினர் சுகு, “இதுபோன்ற நடவடிக்கைகள் எங்குமே வெற்றிகரமாக நடைபெற்றதில்லை” என்றார்.
அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், “எங்கு நடைபெற்றாலென்ன? நடைபெறாவிட்டால் என்ன? இங்கு நாம் நடத்திக்காட்டுவோம்...” என்றார்.
துவா செய்ங்க!
“இந்த நகராட்சியில் பணியாற்றப் பிடிக்காமல் பல அலுவலர்கள் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகப் போறாங்க... துவா செய்யுங்க” என்று நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார்.
அடுத்து பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், யாரும் வருகிறார்கள், போகிறார்கள் என்பதற்காக நாம் நேர்மையை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை...” என்று தெரிவித்தார்.
தடுக்காதீங்க!
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கூட்டரங்கிற்கு வெளிப்புறத்தில் பார்வையாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் கூட்டத்தைப் பார்வையிடாதவாறு கூட்டரங்கின் சாளரத்தை (ஜன்னல்) 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் அடிக்கடி மூடிக்கொண்டிருந்தார்.
ஒருமுறை அவ்வாறு செய்கையில், அவரை அவ்வாறு செய்யாதிருக்கக் கேட்டுக்கொண்ட 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, “பார்வையாளர்கள் கூட்டத்தைப் பார்வையிட சட்டத்தில் அனுமதியுண்டு” என்றார்.
இவ்வாறாக, கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. நகராட்சியின் அடுத்த கூட்டம் 26.04.2012 அன்று நடைபெறுமென இறுதியில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்தார். |