காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவருக்கு இன்று தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி மன்ற அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவருக்கான பிரத்தியேக அறை பழுதடைந்த நிலையில் உள்ளது. தனது அறை பழுதடைந்த நிலையிலிருந்த காரணத்தால், நகர்மன்றத்தின் நடப்பு தலைவர் ஐ.ஆபிதா தனது நகர்மன்றப் பணிகளை, நகர்மன்ற கூட்டரங்கில் இருந்தவாறு கவனித்து வந்தார். நகர்மன்றத் தலைவர் அறை பழுது குறித்து காயல்பட்டணம்.காம் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது.
நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அண்மையில் சென்னை சென்றிருந்தப்போது - நகர்மன்றத் தலைவரின் அறை - குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் உரையாடல் நடந்ததாக தெரிகிறது. உடனடியாக நகர்மன்றத் தலைவருக்கு அறை ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகள் - காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகளுக்கு - அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இதுவரை நகராட்சி ஆணையர் பயன்படுத்தி வந்த அறை இன்று முதல் நகர்மன்றத் தலைவருக்கு ஒதுக்கித் தரப்பட்டது. நகராட்சி ஆணையருக்கு, ஹெட் க்ளெர்க் பணியாற்றிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அறை ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, இன்று மதியம் முதல் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அந்த அறையில் தனது நகர்மன்றப் பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளார். புதிய அறைக்கு இடமாற்றமாகியுள்ள தலைவரிடம், நகர்மன்ற உறுப்பினர்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
சுமார் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த காயல்பட்டினம் நகராட்சி அலுவலகக் கட்டிடத்தை இடித்தகற்றி, புதிய கட்டிடம் கட்ட இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது. (கூட்டம் குறித்த விரிவான தகவல்கள் தனிச்செய்தியில் இடம்பெறும்.)
[செய்தி திருத்தப்பட்டது @7:45 pm/17-4-2012] |