சவுதி அரேபியா ஜித்தா - காயல் நற்பணி மன்றத்தின் 27 வது பொதுக்குழு மற்றும் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா சவுதியில் வெளி அரங்கில் முதன்முறையாக ஜித்தாவிற்கு அருகாமையில் அமைந்துள்ள மிக பெரியதோர் ஒய்வு இல்லத்தில் கடந்த 06-04-2012 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்ற இனிய இந்நிகழ்வு பற்றிய முழுமையான தகவலினை அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
வரவேற்பு:
முன்னதாக அறிவித்த படி காலை 7;30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா, ஷரபியா,ஆர்யாஸ் உணவகம் முன் வருகை தர அங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேருந்தில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர், மன்ற நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தத்தமது வாகனங்களில் முற்கூட்டியே வந்து சேர்ந்தனர். மக்கா உறுப்பினர்களால் எற்பாடு செய்திருந்த பேருந்து மூலம் சகோ. பொறியாளர் ,செய்யது பஷீர் தலைமையில் முன்னேரே தாங்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்கள். யான்பு மற்றும் மதினாவில் இருந்தும் ஏராளமான உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர். வருகை தந்த அனைவர்களையும் நிகழ்ச்சி ஏற்பட்டுகுழுவினர்,சகோ.குளம். அஹ்மத் மொஹிதீன், சகோ. சட்னி. செய்யது மீரான், சகோ.பிரபு. நூர்தீன் நெய்னா,ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
காலைஉணவு சிற்றுண்டி:
வருகை தந்த அனைவருக்கும் சுவைமிக்க காலைஉணவு பசியாற இட்லி, வடை சாம்பார் மற்றும் நம் தேசிய கொடியின் மூவர்ணத்திலும் சட்னிகள் பஃபே முறையில் பரிமாறப்பட்டு, தேயிலை மற்றும் காப்பியுடன் உபசரிக்கப்பட்டது. வந்திருந்த அனைவர்களும் தங்களுக்குள் உற்சாகமாக உரையாடி, நலம் விசாரித்துகொண்டிருந்தனர். மறுபுறம் அமைக்கபட்டிருந்த உறுப்பினர்கள் வருகை பதிவு மற்றும் சந்தா செலுத்தும் இடத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டது.
விளையாட்டு போட்டிகள் :
முதலாவதாக வெளி விளையாட்டு விசாலமான மைதானத்தில் போட்டிகள் ஆரம்பமானதும் துள்ளிக்குதித்து வந்து சிறுவர்கள்,சிறுமியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் சகோ.அரபி,முஹம்மது ஸுஐப், சகோ.ஒய்.எம்.முஹம்மது சாலிஹ், சகோ.சீனா.எஸ்.ஹெச்.மொஹுதூம்முஹம்மது,சகோ.சொளுக்கு,செய்யது முஹம்மது சாஹிப், சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.பொறியாளர்,ஜி.எம்.முஹம்மது சுலைமான் ஆகியோர் இம்மன்றத்தின் தலைவர் சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன் தலைமையில்சிறு சிறு குழுக்களாக போட்டியாளர்களை தேர்வு செய்து துவக்கி வைத்தார்.
ஓட்டபந்தையம்:
முதலாவதாக 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெரியவர்கள் சிறுவர்களாக மாறி போட்டியில் பங்குகொண்டனர். இதன் சிறப்பம்சமாக சகோ.மருத்துவர்,முஹம்மது ஜியாத் தனது இருபுதல்வர்களுடன் சேர்ந்து ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு இரு மகன்களுக்கு இணையாக ஓடினார். இப்போட்டியில் சகோ. வி.எம்.டி.முஹம்மதுஅலி முதலாவதாகவும்,மாணவர் முப்லிஹ் ஜியாத் இரண்டாவதாகவும் வந்து பரிசை தட்டி சென்றனர்.
பெனால்டி கிக்:
அடுத்ததாக கால்பந்து பெனால்டி கிக் போட்டி 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு வழமையான உற்சாகத்துடன் நடைபெற்றது. யான்பு , மக்கா, மதினா, ETA ஜித்தா, GULF ஜித்தா, ஜித்தா BISON , ஜித்தா STRICKERS என்று குழுக்களாக பெயரிட்டு கலந்து கொண்டனர். கால்பந்து போட்டி நமதூரில் ஐக்கியவிளையாட்டு சங்கத்திற்கு உரித்தான பின்னணி இசையுடன் மைதானத்தில் நடைபெற்ற போது காயல் மண்ணில் இருந்தது போன்ற எண்ணம் மனதில் ஏற்பட மகிழ்ச்சியுடன் உணரமுடிந்தது.போட்டியில் கலந்து கொண்ட பெரியவர்கள் காயல் தெருவில் விளையாடும் சிறார்களாக மாறி கள்ள விளையாட்டு அதுதான் நசுவினி ஆட்டம் ஆடமுற்பட்டது, உண்மையான காயல் விளையாட்டை கண்முன் கொண்டுவந்தது. போட்டியில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடியவர்களாக மாறினர். இறுதி போட்டியில் சகோதரர் மீரான் மூஸா சாஹிப் தலைமையிலான ஜித்தா- GULF அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்குகான போட்டி:
அதே வேளையில் மங்கையர்களுக்கு உள்ளரங்கில் இசை நாற்காலி மற்றும் சைகை மூலம் வார்த்தைகளை கண்டறியும் போட்டி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியை உம்மு ஃபஹீம் மூஸா ஏற்பாடு செய்து நடத்தினார். இப்போட்டியில் ஜித்தா சகோதரி உம்மு முப்லிஹ் ஜியாத் மற்றும் மக்கா சகோதரிகள் உம்மு ஸாபிர் ஸாலிஹ் உம்மு நஹாப் சீனாஷ், ஆகியோர் வெற்றி பெற்று பரிசு பெற்றனர்.
மழலையர்களுக்கான போட்டி அனைத்தையும் சகோ.அரபிமுஹம்மது ஸுஐப், கே.எஸ்.முஹம்மது நூஹு ,ஆகியோர் முன்னின்று அழகுற நடத்தினர்.மங்கையர் மற்றும் மழலைகள் மகிழ்ச்சி பெருக்கால் திளைத்தனர். பின் மதியம் 12 மணிக்கு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஜும்மா தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது.
காயல் களரி சாப்பாடு:
ஜும்மா தொழுகை முடிந்ததும், சுவைமிகுந்த காயல் மண்ணுக்கு சொந்தமான களரி சாப்பாடு பரிமாறப்பட்டு முதலில் பெண்கள்,மழலைகள் பந்தியும், பின்பு ஆண்கள் பந்தியுமாக நடைபெற்றது. காயல் களறி கறி, புளியாணம், கத்தரிக்கா, மணம் மீண்டும் காயல் மண்ணுக்கு அனைவரையும் இழுத்துவந்தது. சுவைமிக்க களரி சாப்பாடு . சகோ,கத்தீப் லெப்பைத்தம்பி தலைமையில் சிறப்புற தயார் செய்யப்பட்டது. உணவு ஏற்பாடு பரிமாறுதல் சகோ.சட்னி,செய்யது மீரான்,சகோ.வங்காளம் முஹம்மது அனுசுதீன்,சகோ.ஷாமீரான் சாஹிப், சகோ. சட்னி முஹம்மது உமர், சகோ.கத்தீப் உமர் அப்துல் காதர், ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்தனர்.
ஏழு கல் போட்டி:
உண்டு மகிழ்ந்த உற்சாகத்துடன் 2:00 மணிக்கு மீண்டும் களைகட்டியது விளையாட்டு. காயல் தெருக்களின் பாரம்பரிய விளையாட்டான ஏழுக்கல் (நங்கூரி பந்து)விளையாட்டு போட்டி நடைபெற்றது. கல்லை அடுக்குவதும், பந்தால் அடிபடுவதுமாக முடிவில்லா இவ்விளையாட்டு சகோ.ஷாமீரான் சாஹிப், சகோ. எஸ்.எ.ஷேக் அப்துல்லாஹ் சாஹிப் ஆகியோரின் நகைச்சுவை கலந்த வர்ணனையுடன் மிக அழகாக நடந்தேறியது.
ஒவ்வொரு போட்டியின் ஓய்வின் போது ஆங்காங்கே கிரிக்கெட், கால்பந்து, பாட்மிட்டன் என வெளியரங்கிலும் கேரம் போர்டு உள்அரங்கிலும் தங்களுக்குள் குழு அமைத்து விளையாடியும், சிறுவர்கள் பெரியோர்கள் நீச்சல் குளங்களில் நீராடியும் மகிழ்ந்தனர்.
கயிறு இழுக்கும் போட்டி:
ஜித்தா அணி மட்டும் மக்கா அணி காயலர்களுக்கிடையில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் இரு அணியினரும் தங்கள் பலம் முழுவதும் வெளிக்கொணர்ந்து இழுத்ததில் மக்கா அணி முதலில் வென்றாலும், நம் காயல் மரபு சொல்படி நசுவியதில் அங்கே குழந்தைதனம் தெரிய, இறுதியாக மனம் இறங்கிய நடுவர் மீண்டும் வாய்ப்பு கொடுத்து பெஸ்ட் ஆப் த்ரீ முறையில் ஆடியதில் இறுதியாக ஜித்தா அணி வெற்றி கிரிடத்தை பறித்துசென்றது.
உள்ளரங்க போட்டி:
அசர் தொழுகைக்குப்பின் தேனீர் சுவையுடன் உள்ளரங்க போட்டி ஆரம்பமானது. முதலாவதாக வினாடி வினா ஆறு குழுக்கள் தேர்வு செய்து,பொது அறிவு, மார்க்க கேள்வி பதில் என இரண்டு சுற்றாகவும், காயல் வரலாறு மற்றும் கலாச்சாரம் சார்ந்த கேள்வி பதில் இறுதி சுற்றாகவும்கொண்டு விறுவிறுப்பாக நடந்தேறியது. இதில் சகோ. பொறியாளர்,செய்யது பஷீர்சகோ.குளம். அஹ்மத் மொஹிதீன், சகோ.செய்யிது இப்ராகிம் மற்றும் சகோ. எம்.எம். மூசா சாஹிப் மற்றும் எம்.ஐ. அப்துல் பாஸித் ஆகியோரை கொண்ட அணி விறுவிறுப்பான இறுதி போட்டியில் வெற்றிபெற்றது.
காயல் மரபு சொல் விளையாட்டு:
அடுத்ததாக, காயல் பிரத்யோக மற்றும் மரபு சொல் விளையாட்டு தொடங்கியது. 5 பேர்கொண்ட 6 அணிகள் போட்டியிட்டது. போட்டி நடத்தியவர்கள் ஆங்கிலத்தில் வார்த்தைகளை தொடுக்க அதற்கான பிரத்தியோக காயல் சொல்லை பதிலாக அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்போட்டி ஆரம்பமானது. பொழுதுபோக்காகவும், கேளிக்கையாகவும் நடந்த இந்த போட்டியில் அவந்தரை, வீதல்,காக்காநாட்டி, லேஞ்சி, லாட்சி,சல்லமை, அரிகண்டம், குளிந்தஒறைக்குது, எகனை, தப்பிபோடு, போன்ற காயலுக்கே உரிய வார்த்தைகள் விளையாடின. மதிப்பெண்கள்அளிக்கப்பெற்று இறுதியாக மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாத், சகோ.வங்காளம் முஹம்மது அனுசுதீன்,சகோ.ஷாமீரான் சாஹிப், எம்.எம். செய்கு அப்துல் காதர் மற்றும் பி.ஏ.ஜே. சேக் அப்துல் காதர் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியினை அருமையாக தயாரித்து நடத்தியவர்கள் சகோ.சீனா-எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது, சகோ.ஒய். எம் முஹம்மது ஸாலிஹ்.
குட்டீஸ் போட்டிகள்:
இதே வேளையில் சிறுவர் சிறுமியர்க்கான பாட்டலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல் போன்ற போட்டிகள்வெளியரங்கில் தாய்மார்கள் முன்னிலையில் நடந்தது.
பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி முதலாவதாக வந்தது. ஒரு பக்கத்தில் வாளிகளில் தண்ணீர் இருக்கும், அதற்கு எதிர்பக்கம் சற்று தூரத்தில் பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். கைக்குவியலாக வாளியிலிருந்து தண்ணீர் எடுத்து எதிரே இருக்கும் பாட்டிலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிரப்பவேண்டும். முதலில் நிரப்பியவர் வெற்றி பெற்றவராவார். பெப்சி பாட்டிலில் தண்ணீர் நிரப்ப மழலைகள் மிகவும் சிரமப்பட்டதால் அவர்களுக்கு மட்டும் கிளாஸ் / டம்ளர் வைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது இது முதல்அணி. அடுத்த இரண்டு அணிகளும் பாட்டிலில் முறையே சுறுசுறுப்பாக தண்ணீர் நிரப்பி சாதித்தார்கள். இதில் ஒரு குழந்தை பாட்டிலில் தண்ணீர் நிறைய தாமதமாகிறது என்று பாட்டிலை கைய்யிலெடுத்துவந்து வாளியில்முக்கி தண்ணீர் நிரப்பி சென்றதே பார்க்காலாம். விடுவாரா நடுவர், பிடித்தே விட்டார் ஒரே அமுக்கு. எழுந்தது சிரிப்பொலி தாய்மார்கள் மத்தியில்.
அடுத்து, மியூசிகல்சேர் என்றழைக்கப்படும் இசைநாற்காலி போட்டி. இதுவும் மூன்று அணிகளாக பிரித்து போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒரு குழந்தை இறுதிவரை கண்ணை சிமிட்டாமல் சேரை பார்த்தவாறே ஓடியது அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. முதல் சுற்றில் வெளியேறிய மற்றொரு குழந்தை எப்படியும் சேரில் உட்கார்ந்தே தீர வேண்டும் என்ற முடிவோடு இரண்டாம் சுற்றுக்கும் விளையாட வந்து ஓடியது. அதை கவனித்த நடுவர் அக்குழந்தையை அப்படியே அலக்காக தூக்கிவிட்டார். ஐக்கிய விளையாட்டுச்ச்சங்கத்தில் அகில இந்திய கால்பந்து போட்டி நடக்கும் சமயம் உதைபந்து வீரர்கள் மைதானத்திற்குள் இறங்கும் போது USCக்கே உரித்தான பிரத்தியேக இசை ஒன்று ஒலிபரப்புவார்கள், அவ்விசை போடப்பட்டு இவ்விளையாட்டு நடத்தப்பட்டதால் அந்த இளமை காயல் USC ஞாபகம் நமது மனதில் நிழலாடியது.
முறுக்கு கடிக்கும் போட்டி. இதுவும் மூன்று அணிகளாக பிரித்து போட்டி நடத்தப்பட்டது. இது நீளமான கயிற்றில் முறுக்குகள் கட்டப்பட்டு குழந்தைகள் துள்ளி முறுக்கை கவ்வி கடிக்கும் உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் இரண்டு கைகளையும் பின்புறமாக கட்டிக்கொண்டு துள்ளி துள்ளி முறுக்கை கடிக்கவேண்டும். முதலில் கடிப்பவர் வெற்றி பெற்றவராவார். இதில் ஒரு குழந்தை துள்ளோ துள்ளென்று துள்ளி தொங்கும் முறுக்கை கடிக்க கடும் முயற்சி எடுத்து முறுக்கும் வாயினுள் பல முறை சென்று வந்துவிட்டது ஆனால் அக்குழந்தை இறுதிவரை முறுக்கை கடித்த பாடில்லை. காரணம் என்ன தெரியுமா? அக்குழந்தையின் முன் மேற்பற்கள் உடைந்து ஓட்டப்பல்லழகியாக இருந்தாதால்.
அடுத்து, பலூன் உடைக்கும் போட்டி. இப்போட்டி மிகுந்த கரகோசத்தோடும் சப்தத்தோடும் நடைபெற்றது. காரணம், போரில் எதிரியை அடித்து வீழ்த்துவது போன்று பலூனை அடித்து உடைக்க நம் குழந்தைகள் பட்டபாடில் எடுத்துக்கொண்ட கடும் முயற்சியில் அவர்களுக்கு இளைத்தேவிட்டது. குட்டி ஓய்வு கொடுத்து மீண்டும் விறுவிருப்பான பலூன் உடைக்கும் போர் நடைபெற்றது. பலூன் உடைபட மறுக்குது என்று ஒரு குழந்தை அந்த பலூனை படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. நகத்தால் கிழிக்குது, கையை மடக்கிக்கொண்டு BOXING குத்துது போதாக்குறைக்கு பல்லைக்கொண்டு பலூனை கடித்தே விட்டது போங்க. ம்ஹும். 'நான் உடைவனா' என்று அடம் பிடித்தது அந்த பலூன். 'சைனாக்காரன் இந்த பலூனை மட்டுந்தாம்பா உருப்படியா ஸ்ட்ராங்கா போட்டிருக்கான்...!' என்று யாரோ அன்று சொன்னது நம் காதில் விழுந்தது. அதாவது சைனாக்காரன் போட்ட பொருட்களிலேயே சீக்கிரம் உடையாமல் நீண்...........ட நேரம் இருக்கும் பொருள் பலூன்தானாம்.
மக்ரிப் தொழுகைக்காக இடைவேளை விட்டு மீண்டும் தொடர்ந்தது. சகோ. எம்.எம். மூசா சாஹிப், தம்புலா என்ற போட்டியினை தயாரித்து சிறப்புடன் நடத்த இதற்கான பரிசுகளை சகோ. கத்தீப் லெப்பை தம்பி, சகோ. ஷாஜஹான் மற்றும் சாபிர் சாலிஹ் ஆகியோர் பெற்று கொண்டனர். ,தொடர்ந்து சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் தயாரித்த பிரிந்து கிடக்கும் குடும்ப உறுப்பினர் பட நகல் சேர்க்கை என்ற ஒரு வித்தியாசமான போட்டியும் நடத்தினர்.இதில் சகோ. முஹம்மது அஷ்மாவில், கத்தீப் உமர் அப்துல் காதர், பொறியாளர் ஹாபிள். செய்கு ஆலம் மற்றும் கத்தீப் அப்துல் ரவூஃப் ஆகியோர் பரிசினை வென்றனர். இந்த இரு போட்டியிலும் ஆண்பெண், சிறார்கள் மூவரும் கலந்துகொண்டனர்.
காயல் சங்கமத்தின் இடைவிடாத உற்சாக விளையாட்டினால் நேரமின்மையை கருத்தில் கொண்டு சில அறிவிக்கபட்ட போட்டிகள் நடத்தமுடியவில்லை மேலும் பொதுக்குழு மிக சுருக்கமாக நடைபெற்றது.நிதிநிலை அறிக்கையை சகோ. எம்.எம்.எஸ்.ஷேக் அப்துல்காதர் அன்றையதினம் வசூலான அதிகமான சந்தா தொகைதனை எடுத்துரைத்தார். சகோ.சட்னி.எஸ்.எ.செய்யது மீரான் இதுவரை நாம் வழங்கிய மொத்த தொகையின் நிதி நிலை அறிக்கை பட்டியலின் நகலை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கினார்.
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும் ஆண்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின்குழந்தைகள் வந்து பரிசுகளை மிக குதூகலத்துடன் வாங்கி சென்றனர்.
இறுதியாக குலுக்கல் முறையில் பம்பர் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மெகா குலுக்கலில் அதிர்ஷ்டசாலியாக மக்கா CLOCK டவரில் உள்ள மூவன் பிக் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்கி உம்ரா கடமைதனை நிறைவேற்றும் அரியதோர் வாய்ப்பை சகோ.சக்கரபுள்ளை,எஸ்.எம்.முஹம்மதுபுகாரி(எட்டுக்கடைவீடு) பெற்றுக்கொண்டார். நம் அன்பு அழைப்பினை ஏற்று குடும்பத்துடன் வருகை தந்த சிறப்பு விருந்தினர் கீழக்கரை சகோ. முஹிய்யதீன் சீனி அலி அவர்களுடன் பொறியாளர் எஸ்.செய்யது பஷீர், மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாத்,
சகோ. எஸ்.எஸ். ஜாபர் சாதிக்,சகோ. எஸ்.எச்.ஹுமாயூன் கபீர்,சகோ. எ.எம்.அப்துன் நசீர் , யான்பு ,எம்.எ.முஹம்மது இபுராஹீம் மற்றும் மதீனா,எம். கே. முஹம்மது புகாரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
காயலர் சங்கமத்தின் இறுதியில் சகோ குளம் அஹமத் முஹியதீன் அழைப்பினை ஏற்று வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஜித்தா,மக்கா,மதீனா மற்றும் யான்பு சகோதரர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து மற்றும் இந்நிகழ்ச்சிக்கு நன்கொடை தந்தும்,அனுசரணை அளித்தும்,எல்லா வகைளும் உதவி செய்து ஒத்துழைத்து பாடுபட்ட நல்ல உள்ளங்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்.
காயலர்கள் அனைவரும் கவலைகள் மறந்து "ஓடி விளையாடு பாப்பாவாக" மாறிய இந்நாளை மறக்க முடியுமா? என்ற வினாவுடன் விசா, விமான டிக்கெட் இன்றி ஒரே நாளில் ஊர் சென்று திரும்பிய மன திருப்தியுடன் சந்தோசத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு,இன்ஷா அல்லாஹ் மீண்டும் இது போன்ற இனியதோர் நாள் வர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கலைந்து சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற வந்திருந்த ஹாஜி.கத்திப் அப்துல் ரவூப், ஹாஜி பி.எம்.எ.சி.ஷேக் நூர்தீன் மற்றும் கீழக்கரை சகோ.பொறியாளர், தாஹிர் ஹுசைன், சகோ.முஹம்மது அஸ்மாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அடுத்த செயற்குழு:
64 வது செயற்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் 11 -05 -2012 வெள்ளிக்கிழமை மாலை 06.0௦ மணியளவில் சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம் பாட்சி இல்லத்தில் வைத்து நடைபெறும்.
காயலர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பை சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ.சட்னி,செய்யது மீரான், சகோ. எம்.எம்.மூசாசாஹிப், சகோ.பிரபு எஸ்.ஜே.நூர்தீன்நெய்னா, சகோ.சொளுக்கு, செய்யது முஹம்மத் சாஹிப், சகோ.அரபி முஹம்மது ஸுஐப், சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மதுஆதம், சகோ.ஷாமீரான்சாஹிப், சகோ.சட்னி.எஸ்.எ.முஹம்மதுஉமர்ஒலி, சகோ,முஹம்மதுஅபூபக்கர் சித்தீக்,
சகோ பொறியாளர் முஹம்மது சுலைமான் இவர்கள் சிறப்புடன் செய்திருந்தனர். (அல்ஹம்துலில்லாஹ்!!!)
மேலதிக புகைப்படங்களைக் காண இங்கே அழுத்தவும்!
தகவல்:
சட்னி,செய்யது மீரான்,
எஸ்.ஹெச்.அப்துல் காதர்,
சீனா-எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது,
மற்றும் அரபி ஷுஅய்ப்
புகைப்பட உதவி:
சொளுக்கு எஸ்.எம்.ஐ. செய்யது முஹம்மது சாஹிப்,
எஸ்.எம். முஹம்மது உமர்,
என்.எஸ். ஹுசைன் ஹல்லாஜ்.
|