காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கருகில் இயங்கி வரும் அரசு பொது நூலக கட்டிட விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிதியாதாரத்தைத் திரட்டுவதற்கும், கட்டிட விரிவாக்கம் தொடர்பாக முறையான செயல்திட்டம் வகுப்பதற்குமென “காயல்பட்டினம் கல்வி மேம்பாட்டு திட்டக் குழு” என்ற பெயரில் தனிக்குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் 15.04.2012 அன்று நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நூலக புரவலர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்வது குறித்த செயல்திட்ட விளக்கத்தை ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.
இந்நூலக கட்டிட விரிவாக்கத்திற்கு 14 லட்சம் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்துவதால், செலவுத் தொகையில் பாதி தொகையான ரூபாய் 7 லட்சத்தை அரசு வழங்கும் எனவும், எஞ்சிய 7 லட்சம் தொகைக்கு பொதுமக்கள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இவ்வாறாக திரட்டப்படும் 14 லட்சம் ரூபாயைக் கொண்டு, நமது விருப்பப்படி நாமே நூலக கட்டிடத்தை வடிவமைத்துக் கட்டிட இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் நிதியாதாரத்தைத் திரட்டுவது குறித்து நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது. நிறைவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தனிக்குழு:
காயல்பட்டினம் அரசு பொது நூலக கட்டிட விரிவாக்கப் பணியை செயல்படுத்துவதற்காக காயல்பட்டினம் கல்வி மேம்பாட்டுக் குழு என்ற பெயரில் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், நூலக புரவலருமான ஐ.ஆபிதா தலைமையில் தனிக்குழு அமைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நகர்மன்ற அங்கத்தினருக்கு நன்றி:
தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் அரசு பொது நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்வதற்கு முறையான ஏற்பாடுகளை சுய ஆர்வத்துடன் செய்து தந்தமைக்காக நூலக புரவலரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதாவுக்கும், அவருக்கு ஒத்துழைத்த நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நன்கொடையளித்தோருக்கு நன்றி:
நூலக கட்டிட விரிவாக்கப் பணிக்காக தன் பங்களிப்பாக ரூபாய் ஒரூ லட்சம் தருவதாக வாக்களித்துள்ள பொறியாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் மற்றும் ரூபாய் பத்தாயிரம் தருவதாக வாக்களித்துள்ள ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் ஆகியோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
ரிஸ்வான் சங்கத்திற்கு நன்றி:
நூலக கட்டிட விரிவாக்கப் பணிகள் நடைபெறும் காலங்களில் நூலகத்தின் அனைத்து நூற்களையும் பாதுகாப்பதற்கும், வாசக சாலைக்கும் - காயல்பட்டினம் புதுப்பள்ளி மஹல்லாவைச் சார்ந்த ரிஸ்வான் சங்கத்தில் தற்காலிகமாக இடவசதி செய்து தருவதாக உறுதியளித்துள்ள அதன் நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
நிதி சேகரிப்பு:
நூலக கட்டிட விரிவாக்கப் பணிக்குத் தேவைப்படும் ரூபாய் 7 லட்சம் தொகையை பின்வருமாறு பல வழிகளில் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டது:-
நகர பிரமுகர்களிடம் நிதி சேகரித்தல்:
பொறுப்பு:- ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஹாஜி ஏ.லுக்மான், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாலமுருகன், ஆசிரியர்களான சுலைமான், மு.அப்துல் ரசாக் ஆகியோர்.
வெளியூர் - வெளிநாட்டு பிரமுகர்களிடம் நிதி சேகரிப்பு:
பொறுப்பு:- ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா.
புறநகரின் அனைத்து சமய மக்களிடம் நிதி சேகரிப்பு:
பொறுப்பு:- பாலமுருகன்.
பள்ளி மாணவர்கள் மூலம் குறுநிதி சேகரிப்பு:
பொறுப்பு:- ஆசிரியர்களான மு.அப்துல் ரசாக், சுலைமான், எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா.
நன்கொடை ஒப்புகை சீட்டு (பில் புக்) தயாரித்தல்:
பொறுப்பு:- பாலமுருகன்.
கட்டிடப் பணி மேற்பார்வை:
நூலக விரிவாக்கக் கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட,
ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன்,
எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா,
மாஸ்டர் ஷாஹுல் ஹமீத்,
செய்யித் இப்றாஹீம்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்படுகிறது.
நூலக விழிப்புணர்வு:
நகர பொதுமக்களிடம் - குறிப்பாக மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு, அது சார்ந்த துறைகளின் உதவியுடன் நூலக விழிப்புணர்வு செயல்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்திடுவது குறித்து நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் தெரிவித்த ஆலோசனையை இக்கூட்டம் ஒருமனதாக அங்கீகரிக்கிறது.
சிவில் சர்வீஸ் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு:
அரசு வேலைகளைப் பெற்றுத் தரும் சிவில் சர்வீஸ் படிப்புகள் குறித்து மாணவ-மாணவியருக்கு போதிய விழிப்புணர்வூட்ட செயல்திட்டம் வகுத்து செயல்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |