சீரற்ற குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பின்மை, சுகாதாரப் பணியில் குறைபாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைகளுக்கு விரைந்து தீர்வு தரக்கோரி காயல்பட்டினம் 14ஆவது வார்டு பாஸ் நகர் பொதுமக்கள் நேற்று காலை 10.00 மணியளவில் உண்ணா நோன்பிருந்தனர்.
காந்தி மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலவைர் ஆர்.பாஸ்கர் தலைமை தாங்கினார். அதன் மாவட்ட செயலாளர் கே.அலாய்வாஸ் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.முருகேசன் வரவேற்றுப் பேசினார். முன்னாள் இராணுவ வீரர் என்.க்ரிஸ்டோஃபர் உண்ணா நோன்பின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். எம்.ஷாகுல் ஹமீத் உண்ணா நோன்பைத் துவக்கி வைத்தார்.
காந்தி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஜி.பி.எஸ்.கார்த்திக், அதன் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.சிவசுப்பிரமணியம், ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் எம்.ராமசுந்தரம், ஆழ்வார் திருநகரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் பி.பாலசுப்பிரமணியம், டி.சாந்தம், எம்.ரவி, ஆர்.முத்து கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆழ்வார் திருநகரி ஒன்றிய மாணவரணி செயலாளர் எம்.ராம்குமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் காயல்பட்டினம் பாஸ் நகர், எல்.ஆர்.நகர் பகுதிகளைச் சேர்ந்த - பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இப்பகுதியில் பொதுமக்கள் உண்ணா நோன்பிருப்பதைக் கேள்வியுற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, நண்பகல் 12.00 மணியளவில் அவ்விடம் சென்று அவர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை என்றும், தெரு விளக்குகள் பராமரிக்கப் படவில்லை என்றும், குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வாரம் ஒருமுறை மட்டுமே வருவதாகவும், அரைகுறையாக பணிகளை முடித்துவிட்டு விரைந்து சென்றுவிடுவதாகவும் அப்போது பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர், இதுபோன்ற போராட்டங்களை அறிவிப்பதற்கு முன் தனக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என்று கூறினார்.
அப்பகுதியில் மட்டுமின்றி, நகர் முழுக்க நிலவி வரும் குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நீண்ட காலமாக நிலவி வரும் இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நகர பொதுமக்கள் - அவர்கள் எந்தப் பகுதியைச் சார்ந்தவராயினும் அவர்களின் அடிப்படை வசதிகளுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் தான் மிகவும் கவனத்துடன் இருப்பதாகவும், முறையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்பும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையில் தேவையற்ற கால தாமதம் செய்யப்பட்டால், துறை நடவடிக்கைகளுக்காக மேலதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பொதுமக்களுடன் தானும் இணைந்து போராடப் போவதாகவும், எனவே உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நகர்மன்றத் தலைவரின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பாஸ் நகர் பொதுமக்கள் தங்கள் உண்ணா நோன்பை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். போராட்டத் தலைவர் ஆர்.பாஸ்கருக்கு நகர்மன்றத் தலைவர் குளிர்பானம் வழங்கி உண்ணா நோன்பு போராட்டத்தை முடித்து வைத்தார்.
இந்நிகழ்வின்போது, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, கே.ஜமால் ஆகியோர் உடனிருந்தனர். |