பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5
செப்டம்பர் மாதம் (2011) நடந்த டெண்டர் - யை தொடர்ந்து, தெரு விளக்குகளை பராமரிக்க நூற்றுக்கணக்கான குழல் விளக்குகள் (Tube
Lights) உட்பட பல பொருட்கள் - இவ்வாண்டு மார்ச் 31 வரை தேவையான அளவுக்கு - நகர்மன்றத்திற்கு வந்து சேர்ந்தது.
இருப்பினும் - புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற ஒரு சில வாரங்களிலேயே - போதிய அளவில் உதிரி பாகங்கள் இல்லை என புகார்கள் வர துவங்கின.
தெரு விளக்குகளை சரி செய்ய - மின்சார வாரிய ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லை என்றும், ஆகவே தனியாரிடம் - தெருவிளக்கு பராமரிப்பு
வழங்கப்பட வேண்டும் என்றும் சில உறுப்பினர்கள் கருத்து கூறியுள்ளனர்.
செயற்கையான தட்டுப்பாடு நிலை உருவாக்கப்படுவதை உணர்ந்த நகர்மன்றத் தலைவரும், உறுப்பினர்களும் - செப்டம்பர் மாதம் கொள்முதல்
செய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த விவரம் பெறாமல் புதிதாக எந்த கொள்முதலும் செய்யக்கூடாது என்றும்,
நகராட்சிக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் மின்பொருட்களின் அளவு துல்லியமாக தெரியாதவரை - அவசர கோலத்தில் தனியாரிடம், தெருவிளக்குகள்
பராமரிப்பை வழங்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர். மார்ச் 29 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் -
இது குறித்து காரசாரமான விவாதமும் நடைபெற்றது.
2011 - 2012 நிதியாண்டு நிறைவுற்ற நிலையில் - அவசர தேவை என கூறப்பட்ட பொருட்களை, ரூபாய் 20,000 மதிப்பில் மட்டும், உடனடியாக
வாங்க நகர்மன்றத் தலைவர் தற்போது அனுமதி வழங்கியுள்ளார் என தெரிகிறது.
2011 - 2012 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சி கொள்முதல் செய்த தெரு விளக்குகளுக்கு தேவையான உதிரிபொருட்களின் மதிப்பு ரூபாய் 4
லட்சம். அதாவது செப்டம்பர் 2011 இல் விடப்பட்ட டெண்டர் மூலம் பெறப்பட்ட பொருட்கள் தான் - அந்த முழு நிதியாண்டிலும் மின்பொருட்களுக்கு
நகராட்சி செய்த செலவு.
இதற்கு முந்தைய நிதியாண்டுகளிலும் - இந்த அளவில் தான் பொருட்கள் வாங்கப்பட்டதா என பார்ப்பதற்கு முன் காயல்பட்டினம் நகராட்சிக்கு ஓர்
ஆண்டில் தேவைப்படும் மின்பொருட்கள் அளவினை பார்க்கலாம்.
காயல்பட்டினம் நகராட்சியில் 1152 - 40W - குழல் விளக்குகள், 269 - 250W - சோடியம் விளக்குகள், 108 - 100W - CFL விளக்குகள் மற்றும் 6
உயர்மின் கோபுரங்கள் உள்ளன. 6 உயர்மின் கோபுரங்களில் - 39 - 400 MW விளக்குகளும், 12 - 250 MW விளக்குகளும் உள்ளன.
தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களும் - ஓர் ஆண்டுக்கு மேல் செயல்படும். சில
பொருட்கள் மூன்றாண்டுகள் வரைக்கூட செயல்படும். உதாரணமாக - ஒரு தரமான குழல் விளக்கு 5000 மணி நேரம் வரை எரியும். தினமும் 12
மணி நேரம் எரிகிறது என்றால் - தாரளமாக ஓர் ஆண்டுக்கு மேல் (416 நாட்கள்) எரியும். இதனை கருத்தில் கொண்டு - ஒவ்வொரு ஆண்டும் -
காயல்பட்டினம் நகராட்சியில் மின்பொருட்கள் செலவு எவ்வளவு இருக்கவேண்டும் என காணலாம்.
-- 40W குழல் விளக்கு - ஒரு யூனிட் விலை ரூபாய் 45 (சுமார்). 1152 குழல்விளக்குக்கு ரூபாய் 51,840
-- 250W சோடியம் பல்பு - ஒரு யூனிட் விலை ரூபாய் 435 (சுமார்). 269 சோடியம் பல்புக்கு ரூபாய் 117,015
-- 100W CFL பல்பு - ஒரு யூனிட் விலை ரூபாய் 900 (சுமார்). 108 CFL பல்புக்கு ரூபாய் 97,200
-- 250W Metal Halogen பல்பு - ஒரு யூனிட் விலை ரூபாய் 600 (சுமார்). 12 Metal Halogen பல்புக்கு ரூபாய் 7,200
-- 400W Metal Halogen பல்பு - ஒரு யூனிட் விலை ரூபாய் 1000 (சுமார்). 39 Metal Halogen பல்புக்கு ரூபாய் 39,200
ஆகவே ஆண்டுக்கு ஒரு முறை பல்புகள் மாற்றம் செய்யப்பட்டால் ஆகும் செலவு - சுமார் ரூபாய் 3,15,000. தரமானா பல்புகள் பயன்படுத்தப்பட்டால்
அவை ஓர் ஆண்டுக்கு கூடுதலாகவே வேலைசெய்யும் என்பதனையும் மறந்துவிடக்கூடாது.
பல்புகளை தவிர தெரு விளக்குகளுக்கு மின்சாதனங்கள் பல உண்டு. அவைகளில் முக்கியமான பொருட்களின் விலைகள் வருமாறு:-
-- காப்பர் சோக் - ஒரு யூனிட் விலை ரூபாய் 220 (சுமார்)
-- ஸ்டார்ட்டர் - ஒரு யூனிட் விலை ரூபாய் 8 (சுமார்)
-- Side Holder - ஒரு யூனிட் விலை ரூபாய் 7 (சுமார்)
-- சோடியம் சோக் - ஒரு யூனிட் விலை ரூபாய் 1700 (சுமார்)
-- சோடியம் Igniter - ஒரு யூனிட் விலை ரூபாய் 190 (சுமார்)
-- சோடியம் Condenser - ஒரு யூனிட் விலை ரூபாய் 250 (சுமார்)
-- Metal Halogen சோக் - ஒரு யூனிட் விலை ரூபாய் 2500 (சுமார்)
-- Metal Halogen Igniter - ஒரு யூனிட் விலை ரூபாய் 190 (சுமார்)
-- Metal Halogen Condenser - ஒரு யூனிட் விலை ரூபாய் 250 (சுமார்)
மேல் காணும் பொருட்களை - ஓர் ஆண்டில் எத்தனை முறை மாற்றம் செய்ய வேண்டி இருக்கும் என கணிப்பது கடினம். பொதுவாகவே - தரமான
நிறுவனங்களில் வாங்கப்படும் சோக் போன்ற பொருட்கள் ஓர் ஆண்டுக்கு மேல் வேலைசெய்யும். ஒவ்வொரு ஆண்டும் மாற்றம் செய்யவேண்டிய
சூழல் இருக்காது. பிற நகராட்சிகளின் பயன்பாட்டு மூலம் கணித்தால் - இது போன்ற பொருட்களுக்கு ஓர் ஆண்டுக்கு ஆகும் செலவு 5 லட்சத்தை
தாண்ட வாய்ப்பில்லை. எனவே காயல்பட்டினம் நகராட்சி ஒவ்வொரு ஆண்டும் தெரு விளக்குகளுக்கு மின்சாதனங்கள் கொள்முதல் செய்வது
கூடுதலாக 8 லட்ச ரூபாயை தாண்டக்கூடாது.
கடந்த சில ஆண்டுகளாக - மின் பொருள்களுக்கு காயல்பட்டினம் நகராட்சி எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதனை காணும் முன் -
காயல்பட்டினம் நகராட்சி போன்ற (அதே அளவிலான) பிற நகராட்சிகள் - தெருவிளக்குகளுக்கான உதிரிபாகங்களுக்கு ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு
செய்கிறார்கள் என்பதை வரும் பாகத்தில் காணலாம்.
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5
[தொடரும்] |