முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சை வகைகள், சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் அம்மருத்துவமனைகளில் நடைபெறவுள்ள சிறப்பு மருத்துவ முகாம்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
கிராமங்களில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கும் சிறப்பான - தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதல்வரின் உயரிய சிந்தனையில் உருவாக்கப்பட்டதே “மாண்புமிகு தமிழக முதல்வரின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்ட”மாகும்.
தகுதிகள்:
(1) குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும்.
(2) காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை அல்லது வருமான சான்றிதழ், ஆண்டு வருமானம் ரூ.72,000/- தொகைக்கு உட்பட்டதாக, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டிருத்தல் போதுமானது.
சிகிச்சையளிக்கப்படும் நோய்கள்:
இருதய நோய் சிகிச்சை, இருதய நெஞ்சக அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய் சிகிச்சை, மகளிர் நோய் சிகிச்சை, குழந்தைகளுக்கான நோய் சிகிச்சை, எலும்பு நோய் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, மூளை மற்றும் நரம்பு மண்டல சிகிச்சை, அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
*** காப்பீட்டுத் தொகை ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.1,00,000/- வீதம் 4 வருடத்திற்கு ரூ.4,00,000/- ஆகும்.
*** சிறுநீரக கோளாறு, இருதய வால்வு மாற்றம் போன்ற சிகிச்சைகளுக்கு ரூ.1,50,000/- வரை காப்பீட்டுத் தொகையாக அனுமதிக்கப்படும்.
*** மருத்துவ பரிசோதனைகளுக்கான செலவுகளும் இத்திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்படும்.
*** எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ மற்றும் ஆஞ்சியோகிராம் போன்ற மருத்துவ பரிசோதனைகளும் இத்திட்டத்தின் மூலமாக செய்யப்படும்.
*** சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) செய்யும் செலவும் இத்திட்டத்தில் சேர்த்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
*** நோயாளிகள் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் சேர்வதற்கு ஒரு நாள் முன்னதாகவும், உள்நோயாளியாக சிகிச்சை பெறும்பொழுதும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர் ஐந்து நாட்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள், தேவையான மருந்து - மாத்திரைகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
*** மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும்பொழுது நோயாளிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 436 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளையும் சேர்த்து கீழ்க்கண்ட 15 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது:-
(01) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - தூத்துக்குடி
(02) அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை - கோவில்பட்டி
(03) அரசு மருத்துவமனை - திருச்செந்தூர்
(04) ஏ.வி.எம். மருத்துவமனை - தூத்துக்குடி
(05) சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை - தூத்துக்குடி
(06) சிட்டி மருத்துவமனை - தூத்துக்குடி
(07) பாத்திமா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - புதுக்கோட்டை
(08) எடிசன் மருத்துவமனை - திருச்செந்தூர்
(09) பி.ஜி. மருத்துவமனை - திருச்செந்தூர்
(10) சுந்தரம் நல்லதம்பி மருத்துவமனை - ஆறுமுகநேரி
(11) சங்கர் மருத்துவமனை - ஆத்தூர்
(12) ஆர்த்தி மருத்துவமனை - கோவில்பட்டி
(13) வெங்கடேஷ்வரா மருத்துவமனை - கோவில்பட்டி
(14) சுபிக்ஷா பிரபு மருத்துவமனை - கோவில்பட்டி
(15) ஸ்ரீநிவாசா மருத்துவமனை - கோவில்பட்டி.
தூத்துக்குடி மாவட்டத்தில் 04.04.2012 தேதி வரை 420 நோயாளிகள் இத்திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளார்கள். இத்திட்டம், தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆலோசனையின்படி இத்திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் தனியார் மருத்துவமனைகளும் இலவசமாக சிகிச்சையளித்து அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளிலேயே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறும்.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வரின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து நல்வாழ்வு வாழ தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ் குமார் கேட்டுக்கொள்கிறார்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கு முன் 9 மருத்துவமனைகள் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்தது. தற்போது அது 15 மருத்துவமனைகளாக ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |