உள்ளத்திற்குவகையூட்டும் விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு நிகழ்வுகளுடன் நிறைவுற்றுள்ளது, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள். உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டத்தின் கீழ் ரூ.1,65,000 சேகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் (AGM) மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், 31.03.2012 அன்று, சிங்கப்பூர் Fairy Point Chalet 1இல் நடைபெற்றது.
முன்னேற்பாடுகள்:
துவக்கமாக, 15.30 மணிக்கு, உணவு தயாரிப்புக் குழு கூட்ட நிகழ்விடத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் 16.30 மணிக்கு நிகழ்விடம் வந்தடைந்தனர்.
17.00 மணிக்கு அஸ்ர் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ இத்தொழுகையை வழிநடத்தினார்.
சிற்றுண்டியுபசரிப்பு:
தொழுகை நிறைவுற்றதும், அனைவருக்கும் தேனீர், காயல் மிக்ஸ்சர், லட்டு ஆகிய பதார்த்தங்களுடன் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் இரவுணவு ஏற்பாடுகளும், கூட்ட ஏற்பாடுகளும் அதனதன் பொறுப்பாளர்களைக் கொண்டு மறுபுறத்தில் வேகமாக நடைபெற்றன.
பின்னர், உறுப்பினர்கள் இயற்கையழகை ரசித்தவாறும், டென்னிஸ் பந்தைக் கொண்டு க்ரிக்கெட் விளையாடியும் மகிழ்ந்தனர்.
மழலையர் போட்டி:
அதனைத் தொடர்ந்து, மழலையர் பங்கேற்ற பலூன் உடைக்கும் போட்டி நடைபெற்றது. மழலையர் உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
குச்சிப் போட்டி:
பின்னர், ஆடவருக்கான - குச்சியைக் கொண்டு சாப்பிடும் Chopstick Eating போட்டி நடைபெற்றது. மறுபுறத்தில் பெண்கள் பகுதியிலும் இதே போட்டி நடத்தப்பட்டது.
உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை:
இக்கூட்டத்தின் முக்கிய அம்சம் - உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களால் அறிமுகப்படுத்தப்படட் இத்திட்டத்தின் கீழ் தமது ஒருநாள் ஊதியத்தை நகர்நலனுக்காக நன்கொடையாக வழங்கிட உறுப்பினர்கள் - 02.03.2012 அன்றே மனதளவில் எண்ணம் (நிய்யத்) வைத்துக்கொண்டனர்.
அதனடிப்படையில், 19.00 மணிக்கு உறுப்பினர்கள் இத்திட்டத்தின் கீழான தமது நன்கொடைத் தொகையை மூடப்பட்ட உறையில் வைத்து, அதற்கென வைக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் தன்னார்வத்துடன் செலுத்தினர்.
இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட மொத்த தொகை, கூட்டத்தின் நிறைவில் அதற்கான பொறுப்பாளர்களால் அறிவிக்கப்படும் என்றும், இத்தொகை - காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மறுபுறத்தில் இரவுணவு ஏற்பாடுகள் குறித்த நேரத்தில் தயாரிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர், மஃரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்:
19.45 மணிக்கு வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் தலைமையில் முறைப்படி துவங்கியது. இக்கூட்டத்தில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் அவர்களும் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
தலைவர் உரை:
ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான எம்.ஆர்.ரஷீத் ஜமான், சிறப்பழைப்பாளர்களையும், கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துறுப்பினர்களையும் முறைப்படி வரவேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில் புதிதாக அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை” திட்டம் குறித்து விவரித்துப் பேசிய அவர், கடந்த 2011ஆம் ஆண்டு உறுப்பினர்கள் அளித்த மனப்பூர்வமான ஒத்துழைப்பை பெரிதும் பாராட்டுவதாகவும், நடப்பாண்டில் இன்னும் சிறந்த ஒத்துழைப்பை வழங்குமாறும், புதிய உறுப்பினர்கள் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுமாறும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
ஆலோசகர் உரை:
அவரைத் தொடர்ந்து, மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உரையாற்றினார்.
மன்றத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், செயலர் மொகுதூம் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பிலான - புதிய நிர்வாகத்தின் நகர்நல செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்த அவர், இச்செயல்பாடுகள் தொய்வின்றித் தொடர்ந்திட - அடுத்த பருவத்திற்கான தலைமை மற்றும் நிர்வாகக் குழுவை இப்போதிலிருந்தே அடையாளங்கண்டுகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
செயலரின் ஆண்டறிக்கை:
பின்னர், 2011ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் விரிவான ஆண்டறிக்கையை மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் சமர்ப்பித்தார். (ஆண்டறிக்கையை தனிச்செய்தியில் காண்க!)
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாக இந்தியாவிலிருந்து வருகை தந்து பங்கேற்றுள்ள இக்ராஃ நிர்வாகி மற்றும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஆகியோரின் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தமைக்காக உறுப்பினர் சாளை நவாஸ் மற்றும் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வாழ்த்துரை:
பின்னர், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ உரையாற்றினார்.
நற்பணிகளுக்கு நன்கொடையளிப்பதன் சிறப்பு குறித்து விளக்கிப் பேசிய அவர், மன்றத்தின் சார்பில் காயல்பட்டினத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது என்றும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை” திட்டத்தால், மன்றத்தின் நிதியாதாரம் பெருகும் என்று தெரிவித்தார். மன்றத்தின் நகர்நல செயல்பாடுகள் சிறப்புற, கூட்டுப்பணி (Team Work) மிகவும் அவசியம் என்றும், அது இம்மன்றத்தில் நன்றாக உள்ளதென்றும் தெரிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், கடந்த 2011ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை - தேவையான ஸ்லைட் (Slide) தொகுப்புடன் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, தேவையான விசாரனைகளுக்கு விளக்கம் பெற்ற பின்னர் உறுப்பினர்கள் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தனர்.
கடந்த ஆண்டுகளை விட 2011ஆம் ஆண்டில் இறையருளால் - மன்ற உறுப்பினர்களின் மனப்பூர்வமான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புகளுடன் கூடுதலான தொகையில் நகர்நலப் பணிகளாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்காக மன்றத்தின் அனைத்துறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டில், நகர்நலப் பணிகளுக்காக மன்றத்தால் செலவிடப்பட்ட மொத்த தொகை - இந்திய ரூபாய் 11,83,000 என்று தெரிவித்த அவர், நகரின் ஏழை - எளிய மக்களது பலதரப்பட்ட மருத்துவ - கல்வி - மனிதாபிமானத் தேவைகளுக்காக அத்தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சிறப்பழைப்பாளர் தர்வேஷ் உரை:
பின்னர், கூட்டத்தின் சிறப்பழைப்பாளரான - இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-
சிங்கை காயல் நல மன்றத்தின் இந்த ஒன்றுகூடல் மற்றும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பேற்படுத்தித் தந்த KWAS நிர்வாகத்திற்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மன்றத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை இணையதள செய்திகள் வாயிலாகவும், உறுப்பிர்கள் கூறவும் கேள்விப்பட்டுள்ளேன். இதுபோன்ற அருமையான நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தால் கலந்துகொள்ளலாம் என நான் சகோதரர் சாளை நவாஸ் மற்றும் சிங்கை மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் ஆகியோரிடம் யதார்த்தமாகத் தெரிவிக்க, “நீங்க சரின்னு சொல்லுங்க... அதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிடும்” என்று, உடனடியாக விசா, டிக்கெட் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வைத்துவிட்டனர். பாளையம் ஹஸன் ஹாஜி அவர்கள் இதர ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டார்கள்.
சிங்கை காயல் நல மன்றத்தின் இந்த அதிவேக முயற்சிகள், ஏற்பாடுகள் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியையும் - அதே நேரத்தில் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துலக காயல் நல மன்றங்களும், தத்தம் பகுதிகளில் இருந்தவாறு நகர்நலச் சேவைகளை நிறைவாகச் செய்து வருவது வேறெந்த ஊரிலும் காண முடியாத சிறப்பம்சமாகும். அந்த வரிசையில், சிங்கப்பூர் காயல் நல மன்றம் நகர்நலச் சேவையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்துள்ளது.
உறுப்பினர்களிடம் உண்டியல் மூலம் நிதி சேகரிப்பு, அத்தியாவசிய சமையல் பொருளுதவி, உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டம் ஆகியன இம்மன்றத்தின் தனிச்சிறப்புத் திட்டங்களாகும்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டத்தின் கீழ் அண்மையில் அனுப்பித் தரப்பட்ட பயனாளிகள் பட்டியலைப் பார்வையிட்டேன்... உண்மையிலேயே மிகவும் தகுதியான மக்களுக்குத்தான் இவை சேர்க்கப்பட்டுள்ளது... ஆம், அனைவருமே வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள்... பிறரிடம் கேட்க பெரிதும் கூச்சப்படுபவாகள் பலர் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். பட்டினியாக வாழ்ந்தாலும் பரவாயில்லை... பிறரிடத்தில் எந்தச் சூழலிலும் எதையும் கேட்கக் கூடாது என்று மன உறுதியுடன் வாழும் மக்களை இனங்கண்டு, அவர்களுக்கு ரசகியமாக தர்மம் செய்வதை விட சிறப்பானதொன்று இருக்க முடியுமா? அதை இம்மன்றம் அழகுற செய்து வருகிறது.
இவற்றுடன், மருத்துவம் - கல்வி - கட்டிட நிதியுதவி என பல வகைகளில் இம்மன்றத்தின் உதவிக்கரம் நீண்டுகொண்டே இருக்கிறது.
கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டும் வழங்கப்பட்ட உதவித்தொகை சுமார் 11 லட்சம் ரூபாய் என்றும், கடந்த ஐந்தாண்டுகளில் இம்மன்றத்தால் வழங்கப்பட்டுள்ள மொத்த உதவித்தொகை 26 லட்சம் ரூபாய் என்றும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு சாதாரண விஷயமல்ல! மிகக் குறுகிய காலத்தில் இம்மன்றம் பெற்றுள்ள அசுர வளர்ச்சியையே இது உணர்த்துகிறது.
இதற்கெல்லாம் காரணம், சிறந்த வழிகாட்டல், திறமையான நிர்வாகம், உறுப்பினர்களின் கூட்டு முயற்சியே. ஹாஜி பாளையம் ஹஸன் அவர்களின் வழிகாட்டலில், மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், செயலர் மொகுதூம் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை மற்றும் இதர நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தற்காலத்தில் செயல்பட்டு வரும் விதம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறது. உறுப்பினர்களின் பேராதரவும், நிறைவான ஒற்றுமையும்தான் இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.
இந்த அதீத செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில், இம்மன்றம் தற்போதைய நிலையைக் காட்டிலும் அதிகளவில் ஏழைகளுக்கு உதவிட இயலும் என்பதில் சந்தேகமில்லை.
உங்களிடையேயுள்ள இந்த ஒற்றுமை என்றென்றும் நீடித்திருக்க வேண்டும்... அடுத்த பருவத்திற்கான நிர்வாகத்திற்கு உறுப்பினர்கள் இப்போதே உங்களை ஆயத்தம் செய்துகொள்ளுங்கள்!
நீங்கள் இங்கிருந்தவாறு நன்கொடைகளை அளித்து விடுகிறீர்கள்... அங்கே நமதூரில் அதனைப் பெற்றுச் செல்லும் ஏழைகள் துஆ செய்தவர்களாக கண்ணீருடன் விடைபெறும் காட்கிளை நாங்கள் அனுதினமும் கண்டுகொண்டிருக்கிறோம்... இந்த துஆக்களெல்லாம் உங்களுக்குத்தான் சேரும். இதுபோன்ற ஏழைகளின் துயர்துடைப்பில் கிடைக்கும் மனமகிழ்ச்சிக்கு எதுவுமே ஈடாக முடியாது.
நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் மீது சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு மிகுந்த அக்கறை உண்டு. அதனடிப்படையில் இன்றளவும் உதவிகளும், ஒத்துழைப்புகளும் நிறைவாக வழங்கி வருகிறது இம்மன்றம்.
இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்கள், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களில் பங்களிப்பு, உதவித்தொகை நேர்காணலை உடனுக்குடன் நடத்தியமை உள்ளிட்ட பல வகைகளி்ல் இம்மன்றம் இக்ராஃவிற்கு பெரும் துணையாக இருந்து வருகிறது.
தலைமைப் பொறுப்பில் இருந்தால்தான் சேவைகள் செய்ய வேண்டுமென்பதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தற்போது இம்மன்றம் இக்ராஃவின் தலைமைப் பொறுப்பிலில்லாத நிலையிலும், ஸ்காலர்ஷிப் வகைக்கு ஸ்பான்ஸர்களைப் பெற்றுத் தருவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக இம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் இது விஷயத்தில் தீவிர அக்கறை காட்டி வருவதை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்...
அவருக்கும், இக்ராஃவின் சுழற்சி முறை நிர்வாகத்தை துவக்கமாக தலைமைப் பொறுப்பேற்று அலங்கரித்த ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கும், அந்நேரத்தில் இம்மன்றத்தால் அனுப்பித் தரப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை உடனுக்குடன் செயலாற்றி பெற்றுத் தந்த சகோதரர் டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹரீஸ் அவர்களுக்கும், இதர இம்மன்றத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் இந்நேரத்தில் மனமார்ந்த நன்றிகளை இக்ராஃவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் உரையாற்றினார். இக்ராஃவின் சேவைத் திட்டங்கள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், கல்விச் சேவை மட்டுமின்றி - அவசியப்படும் இதர சேவைகளையும் செய்து வருவதாகவும், அனைத்துலக காயல் நல மன்றங்கள், பொதுநல ஆர்வலர்கள், கல்வியார்வலர்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்புடன் இத்தனை சிறப்பாக செயலாற்றி வரும் இக்ராஃவிற்கு சொந்தமாக ஓர் அலுவலகம் அமைத்திடும் முயற்சி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்கான தகவல்கள் தரப்படும்போது, இம்மன்றம் தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் செய்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
நிறைவாக, நகரில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு செயல்திட்டங்கள் குறித்து விவரித்த அவர், CFFC, KEPA மூலம் செய்யப்பட்டு வரும் நகர்நல செயல்திட்டங்களைப் பட்டியலிட்டார். மிகுந்த சிரமங்களுக்கிடையிலேயே இதுபோன்ற காரியங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், “எங்களால் இயன்றளவுக்கு உடல் உழைப்புகளை நிறைவாக வழங்கி வருகிறோம்... இனியும் வழங்க ஆயத்தமாக உள்ளோம்... ஆனால் இவற்றுக்கான பொருளாதார ஒத்துழைப்புகளை உங்களைப் போன்றவர்கள்தான் வழங்கி ஆதரிக்க வேண்டும்” என்று கூறி, சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்ந்து சிறப்புற செயல்பட அல்லாஹ் அருள் புரியட்டுமென பிரார்த்தித்து தனதுரையை நிறைவு செய்தார்.
மழலையர் மறையோதல் போட்டி:
பின்னர், மழலையர் பங்கேற்பில் அருள்மறை குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மழலையர் ஆர்வமுடன் பங்கேற்று தமதினிய குரல்களால் திருமறை குர்ஆனை அவர்களது பாணியில் அழகுற ஓதினர்.
அனைத்து மழலையருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பழைப்பாளர்கள் பரிசுகளை வழங்கினர்.
ஜோடிப் பொருத்தம்:
பின்னர், சிறந்த ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரே மாதிரியான பத்து கேள்விகள் தயார் செய்யப்பட்டு, அவற்றை போட்டியில் பங்கேற்ற கணவன் - மனைவி ஜோடிகளிடம் தனித்தனியே வழங்கப்பட்டு, பத்து நிமிட கால அவகாசத்திற்குள் அவற்றுக்கான பதிலளிக்கக் கோரப்பட்டது.
இப்போட்டியில், திருமணமாகி 25 ஆண்டுகளான தம்பதியர் முதல் கடந்தாண்டு திருமணம் செய்த புதுமணத் தம்பதியர் வரை அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சிறப்பழைப்பாளர் கே.எம்.டி.சுலைமான் உரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க எங்களை அழைத்து, உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் துவக்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மன்றம் துவக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே அல்லாஹ்வின் பெருங்கருணையினால் உங்கள் யாவரின் மேலான நல்லாதரவுடன் ஏழை-எளியோருக்கு மருத்துவம், கல்வி, சிறுதொழில், அத்தியாவசிய சமையல் பொருளுதவி, வீடு புனரமைப்பு போன்ற பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு நிறைவாக உதவி செய்து வருகிறீர்கள்...
வேலை தேடி இங்கு வருவோருக்கு தகுந்த வேலை கிடைப்பதற்கு ஒத்துழைப்பளித்து, அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கும் உங்கள் பண்பு தன்னிகரற்றது...
இந்த ஆண்டு முதல், 4 ஆண்கள் மத்ரஸா, 3 பெண்கள் மத்ரஸா என மொத்தம் 7 மத்ரஸாக்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்து - ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இப்படி அனைத்து விஷயத்திலும் நம் மன்றம் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் நீங்களும், உங்களை வழிநடத்திச் செல்லும் திறமையான இம்மன்றத்தின் நிர்வாகமும்தான்.
ஏதோ இந்த உலகத்தில் வாழ்ந்தோம்... மறைந்தோம் என்று இராமல், நாம் வாழும் காலத்தில் நம்மாலியன்றளவுக்கு மனித குலத்திற்கு நன்மைகள் செய்வோம்...
வெறுமனே சந்தாக்களையும், நன்கொடைகளையும் கொடுத்துவிட்டோம்... நம் கடமை முடிந்துவிட்டது என்று sleeping member ஆக இருந்துவிடாமல், தலைவர் - செயலர் - பொருளர் மற்றும் செயற்குழுவினரோடிணைந்து, acting member ஆக அனைவரும் இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, கே.எம்.டி.சுலைமான் உரையாற்றினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பின்பு, 2010 - 2011ஆம் ஆண்டுகளில் மன்றத்தில் புதிதாக இணைந்த 8 உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
புதிய செயற்குழு:
அடுத்து, ஏப்ரல் 2012 முதல் செப்டம்பர் 2012 வரையுள்ள பருவத்திற்கான செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
ஜக்கரிய்யா
செய்யித் அப்துர்ரஹ்மான்
முஹம்மத் உமர் ரப்பானீ
அப்துல்லாஹ்
எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்
இதுவரை நகர்நலப் பணிகளாற்றி, தம் பொறுப்பை செவ்வனே செய்து முடித்துள்ள
கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய்
முஹம்மத் உமர் ரப்பானீ
ஹஸன் மவ்லானா
மஸாஹிர் அமீன்
காதிர் ஸாஹிப் அஸ்ஹர்
ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பரிசளிப்பு:
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையிலான ஐவர் கால்பந்துப் போட்டி வெற்றியாளரணி, முஹம்மத் உமர் ரப்பானீ தலைமையிலான வெற்றிக்கு முனைந்தோரணி, மழலையர் போட்டிகளில் வென்றோருக்கு துவக்கமாக பரிசுகள் வழங்கப்பட்டது.
அடுத்து, குச்சிகள் துணையுடன் உணவுண்ணும் ஆண்களுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற மஹ்மூத் ரிஃபாய், இரண்டாமிடம் பெற்ற ஜவஹர் இஸ்மாஈல் ஆகியோருக்கும், பெண்கள் பகுதியில் இதே போட்டியில் பங்கேற்று முதலிரண்டிடங்களைப் பெற்றோருக்கும் அவரவர் பகுதிகளில் பரிசுகள் வழங்கப்பட்டது.
அடுத்து, சிறந்த ஜோடிப் பொருத்த தம்பதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தம்பதி முதற்பரிசையும், ஏ.எம்.உதுமான் தம்பதி இரண்டாம் பரிசையும், மொகுதூம் முஹம்மத் தம்பதி மூன்றாமிடத்தையும், மஸாஹிர் அமீன் தம்பதி நான்காமிடத்தையும் பெற்றனர்.
பின்னர், கடந்த 24.03.2012 அன்று சிங்கப்பூர் Khalasa Association மைதானத்தில், மன்ற உறுப்பினர் சாளை நவாஸ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் வென்ற உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
படக்காட்சி - மலரும் நினைவுகள்...
பின்னர், கடந்த 2011ஆம் ஆண்டில் மன்றத்தால் செய்யப்பட்ட நகர்நலப் பணிகளின் காட்சிப் படங்கள் விரிதிரையில் அனைத்துறுப்பினர்களுக்கும் காண்பிக்கப்பட்டது.
அவற்றைக் காணுகையில் மன்ற உறுப்பினர்கள் - மலர்ந்த தமது நினைவுகளை அசை போட்டனர்.
கூட்ட நிறைவு:
நிறைவாக, கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துறுப்பினர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் உறுப்பினர் வி.எம்.எம்.அப்துல்லாஹ் நன்றி தெரிவித்தார். 22.00 மணிக்கு ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இரவுணவு:
பின்னர் இஷா தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. பின்னர் காயல்பட்டினம் பாரம்பரிய உணவு வகைகளுள் ஒன்றான அஹனி கறி பதார்த்தத்துடன் இரவு உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மகளிர் அரட்டை:
பின்னர், மகளிர் தம் பகுயிலிருந்தவாறு - நகரின் நடப்பு நிகழ்வுகள், செய்திகள் குறித்து தமக்குள் கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.
ஒருநாள் ஊதிய நன்கொடை ரூ.1,65,000!
பின்னர், “உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை” திட்டத்தின் கீழ் - கூட்டம் துவங்குமுன் உறுப்பினர்களால் சிறப்புப் பெட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட நன்கொடைத் தொகைகள் மன்றப் பொருளாளர், உள்ளூர் பிரதிநிதி மற்றும் உறுப்பினர் மஹ்மூத் ரிஃபாய் ஆகியோரால் எண்ணப்பட்டு, இந்திய ரூபாய் 1,65,000 சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனைக் கேள்வியுற்றதும் அனைத்துறுப்பினர்களும் இறைவனைப் புகழ்ந்தவாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வரும் ஆண்டுகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சூட்டுக்கறி:
01.04.2012 நள்ளிரவு 01.00 மணிக்கு, சிக்கன், நண்டு அயிட்டங்களுடன் சூட்டுக்கறி (BBQ) தயாரிக்கப்பட்டது. உறுப்பினர்களனைவரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்று உண்டு மகிழ்ந்தனர். இதற்காக சிறப்புப் பொருட்களுடன் நண்டு மசாலா தயாரித்த மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமானுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
உறுப்பினர்கள் இரவின் நீண்ட பொழுதை சூட்டுக்கறியில் கழித்தனர். வெகு காலத்திற்குப் பிறகு இதுபோன்று நீண்ட நேரம் அரட்டையிலும், மகிழ்வூட்டும் பொழுதுபோக்கிலும் கழித்ததையெண்ணி உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருக்குர்ஆன் மனனப் போட்டி:
ஒருபுறம் சூட்டுக்கறி நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ்கள் மற்றும் ஹாஃபிழ் அல்லாதோர் பங்கேற்ற திருக்குர்ஆன் மனனப் போட்டியை மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ நடத்தினார்.
நடைப்பயிற்சி:
காலை 08.00 மணிக்கு உறுப்பினர்கள், சிங்கப்பூர் Changi Beach Clubஇல் அரட்டையுடன் நடைப்பயிற்சி செய்தனர். பின்னர் அனைவருக்கும் தேனீருடன் காலையுணவு பரிமாறப்பட்டது.
மறக்கவியலாத நினைவுகளுடன் மன்ற உறுப்பினர்கள் 10.00 மணிக்கு பேருந்தில் தமதிடம் திரும்பினர்.
மன்றத்தின் மனப்பூர்வமான நன்றி:
இந்த வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், குடும்ப சங்கமம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடந்தேற அனைத்தேற்பாடுகளையும் சிறப்புற செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு மன்ற நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து நிகழ்வுகளும் குறிப்பிட்ட கால அளவுப்படி நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது. வருங்காலங்களில் இன்னும் சிறப்புற இந்நிகழ்வுகளை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள், குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், கேளிக்கைகள் உள்ளிட்ட அனைத்து காட்சிகளடங்கிய படத்தொகுப்பு அனைத்தையும் முழுமையாகக் காண இங்கே சொடுக்குக!
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |