தமிழக அரசின் தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) மூலம் காயல்பட்டினத்தில் அமைந்துள்ள மாவட்ட நூலகத்தினை விரிவாக்க அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக ஆர்வலர்களின் உதவியினை - நூலக வாசகர் வட்ட தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாவட்ட நூலகம் இயங்கி வருகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்குத் தேவையான தகவல்களடங்கிய நூல்கள் உட்பட பல அரிய நூல்களைக் கொண்டுள்ள இந்நூலகத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக - புத்தகங்களை பார்வைக்கு வைக்க போதிய இட வசதி இல்லை. மேலும் பெண்களும் இந்நூலகத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த போதிய இடவசதி இல்லை.
இக்கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்படவேண்டிய அவசியம் உள்ளது என இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இது போன்ற - பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய பணிகளுக்கு - அரசின் தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) மூலம் உதவி பெற அனுமதி உள்ளது. தன்னிறைவு திட்டத்தின் விதிகள் படி - திட்ட மதிப்பீட்டில், பொது மக்கள் மூன்றில் ஒரு பங்கு வழங்கினால், தமிழக அரசு இரண்டு பங்கு வழங்கும். ஆனால் கட்டிடப் பணியை அரசு ஒப்பந்தக்காரர்களே செய்வர். ஆனால், 50% பொதுமக்கள் செலுத்தினால் கட்டிடப் பணியை - ஆர்வலரே தரமான முறையில் கட்டலாம் என்பது விதிமுறை.
இதனைக் கருத்திற்கொண்டு நகர்மன்றத் தலைவரும், நூலக வாசகர் வட்டத்தின் புரவலர்களில் ஒருவருமான ஐ.ஆபிதா - நூலக விரிவாக்கம் குறித்து நகரில் உள்ள சில சமூக ஆர்வலர்களிடம் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 50 சதவீத பங்கு பொதுமக்கள் வழங்குவர் என்றும், மீதி பங்கினை அரசு தன்னிறைவு திட்டம் மூலம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 50 சதவீத பங்குத் தொகையை சமூக ஆர்வலர்கள் வழங்குவதால் - இப்பணிகள், பங்களிக்கும் சமூக ஆர்வலர்கள் மூலமே மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்திற்கான ஒப்புதல் சில நாட்களுக்கு முன்னர் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவ/மாணவியர் சமுதாயத்தின் அறிவு பெட்டகமான காயல்பட்டின நூலகத்தை விரிவாக்க, ஆர்வலர்கள் - பொதுமக்களின் பங்களிப்பான 7 லட்ச ரூபாயில் - தங்கள் பங்கினை வழங்க கேட்டுகொள்கிறோம்.
அரசு விதிகளின் படி, உதவி செய்யும் ஆர்வலர்களின் பெயர்கள் நூலக கட்டிடத்தில் அறிவிப்பு பலகையில் பதிவு செய்யலாம். எதிர்வரும் காலங்களில் விரிவாக்கப்படும் நூலகத்தை பயன்படுத்தும் அனைவரும் இப்பணிக்கு உதவிபுரிந்த அனைத்து ஆர்வலர்களுக்கும் - நூலகம் பயன்தரும் காலங்கள் வரை - பிரார்த்தனை செய்வர்.
ஆகவே நகர ஆர்வலர்கள் இத்திட்டத்தில் இணைந்து தங்கள் பங்கினை நல்கிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து மேலதிக விபரங்களைப் பெற தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி / தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி :
டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்
+91 99650 14744
noolagamproject@gmail.com
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|