காயல்பட்டினத்திலிருந்து திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது - மஹான் ஷஹீத் முத்து மொகுதூம் வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலமான காட்டு மொகுதூம் பள்ளி.
இம்மஹான் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா 05.04.2012 அன்று (நேற்று) நடைபெற்றது. 25.03.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 06.30 மணிக்கு கொடியேற்றத்துடன் கந்தூரி நிகழ்ச்சிகள் துவங்கின. ஜமாதியுல் அவ்வல் பிறை 01 (25.03.2012) ஞாயிற்றுக்கிழமை முதல் பிறை 11 (04.04.2012) புதன்கிழமை வரை தினமும் மாலை 04.30 மணிக்கு, மஹான் அவர்கள் மீது மர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மவ்லித் ஓதப்பட்டது.
ஏப்ரல் 01 முதல் 03ஆம் தேதி வரை இரவு 08.30 மணிக்கு காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலமைந்துள்ள பெரிய சதுக்கையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ - “நாயகத்தின் நற்பண்புகள்” என்ற தலைப்பிலும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், தூத்துககுடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ - “வலிமார்களின் உன்னத சேவை” என்ற தலைப்பிலும், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - “வாழ்வின் வழிகாட்டி இஸ்லாம்” என்ற தலைப்பிலும், முறையே இம்மூன்று தினங்களிலும் மார்க்க சொற்பொழிவாற்றினர்.
கந்தூரி நாள் நிகழ்ச்சிகள் மஹான் அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ள காட்டு மகுதூம் பள்ளியில் 05.04.2012 அன்று (நேற்று) நடைபெற்றது. அன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. பின்னர், கலீஃபா எஸ்.இ.ஷெய்கு நூருத்தீன் தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காட்டு மகுதூம் பள்ளி மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.ஆர்.அஹ்மத் பஷீர் ஸிராஜீ தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
மாலை 04.30 மணிக்கு, ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதி நிறைவு நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று சொற்பொழிவையும், “வலிய்யுல்லாக்களின் உயர்பண்புகள்” என்ற தலைப்பிலும் - மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ உரை நிகழ்த்தினார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிகழ்ச்சிகளனைத்திலும், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிடவசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் தபர்ருக் - நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
கந்தூரி வைபவ ஏற்பாடுகளை, காட்டு மொகுதூம் பள்ளியின் நிர்வாக அதிகாரியான நெல்லை வக்ஃப் கண்காணிப்பாளர் தலைமையில், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ஹாஜி பிரபு எம்.ஏ.சுல்தான், ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா ஆகியோரடங்கிய பொறுப்புக் குழுவினரும், கந்தூரி விழாக்குழுவினரும் செய்திருந்தனர். |