காயல்பட்டினம் எல்.எஃப். வீதியிலமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியின் பழைய கட்டிடம் புதுப்பித்துக் கட்டப்பட்டு, கடந்த 16.05.2011 அன்று திறப்பு விழா கண்டது.
இந்நிலையில், அக்கட்டிடத்தை பாதுகாப்பான முறையில் அமைத்திடும் பொருட்டு கம்பி வேலியமைக்க ரூ.60,000 நிதி தேவைப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் அலீ அக்பர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது செய்கு ஹுஸைன் பள்ளியின் பழைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, தொழுகையாளிகளுக்கு மனமகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இன்று காட்சியளித்துக் கொண்டிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
எனினும், இப்பள்ளி கட்டிடத்திற்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அடிக்கடி பொருட்கள் திருட்டு போய்க்கொண்டிருக்கிறது. தவிர, சில நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கும் இப்புனித தலத்தை பயன்படுத்திவிடுவார்களோ என்ற அச்சம் எமக்கு மேலோங்கியிருக்கிறது.
எனவே, பள்ளியைச் சுற்றிலும் இருப்பு வேலி (Grill Work) செய்து, பாதுகாப்பாக அமைத்திட நாடுகிறோம். இவ்வகைக்காக, ரூ.60,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொருளாதார சுமைகளைச் சந்திக்கும் நிலையில் இப்பள்ளி நிர்வாகம் இருந்து வருகிற காரணத்தால், இந்த வேலையைச் செய்து முடித்து, பள்ளியை பாதுகாப்பான கட்டிடமாக்கிட தங்கள் யாவரின் மேலான பொருளாதார ஒத்துழைப்பை பெரிதும் நாடுகிறோம். உங்களில் சிலர் நினைத்தாலும், இறையருளால் இக்காரியத்தை வெகு இலகுவாக செய்து முடித்துத் தர இயலும்.
எனவே, இதற்கான பொருளாதார ஒத்துழைப்பை கூட்டாகவோ அல்லது தனி நபரோ தந்துதவினால் அந்த வேலையை இறையருளால் பூர்த்தி செய்து, அதன் செலவறிக்கையை தங்களிடம் சமர்ப்பிக்க நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்.
பள்ளிவாசலின் புனிதத்துவத்தைப் பாதுகாக்கும் இம்முயற்சிக்கான தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
விருப்பமுள்ளோர், பள்ளி தலைவராகிய என்னை, +91 80563 06706 என்ற எண்ணிலோ அல்லது பொருளாளராகிய ஜனாப் இஸ்மத் அவர்களை +91 97903 08634 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு உங்கள் மேலான பங்களிப்பை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேவைப்படும் செலவுத்தொகை முழுமையாகக் கிடைக்கப் பெற்றுவிட்டால், அதுகுறித்து தகவல் தரப்படும் என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் தங்கள் யாவருக்கும் ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, செய்கு ஹுஸைன் பள்ளியின் தலைவர் அலீ அக்பர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|