காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா மற்றும் உறுப்பினர்கள் ஞாயிறு (ஏப்ரல் 1) அன்று காலை சென்னை வந்தடைந்தனர். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - முதல் நாளான ஞாயிறு அன்று பிரசித்தி பெற்ற சுற்றுப்புற சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் EXNORA வின் நிறுவனர் M.B. நிர்மலை நேரில் சந்தித்தனர்.
இரண்டாம் நாளான திங்கள் (ஏப்ரல் 2) அன்று - நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியை அவரது தலைமைச் செயலக அலுவலகத்தில் சந்தித்து - நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்த கோரிக்கை மனுவினை சமர்ப்பித்தனர். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதிக்கூறிய அமைச்சர் - தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் போது, கண்டிப்பாக காயல்பட்டினம் நகராட்சியை பார்வையிட வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் விபரம் வருமாறு:-
(1) தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ள காயல்பட்டினம் நகராட்சியில் காலியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை (COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION) மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களை துரிதமாக நிரப்ப ஆவனம் செய்யும்படி தங்களை கேட்டுகொள்கிறோம்.
(2) காயல்பட்டினம் நகராட்சியின் பணிக்குழு (APPOINTMENT COMMITTEE) மூலம் நிரப்பவேண்டிய காலியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியினை துரிதமாக வழங்கும்படி கேட்டுகொள்கிறோம்.
(3) காயல்பட்டினம் மக்களின் நீண்டு நாள் கனவான இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் (ADMINISTRATIVE SANCTION) கிடைக்கப்பெற்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது. இத்திட்டத்தினை - சிறந்த முறையிலும், துரிதமாகவும் நிறைவேற்ற - தகுதி வாய்ந்த வல்லுனர்கள்/பொறியாளர்கள் குழுவினை அமைத்து, இத்திட்டத்தினை வழி நடத்தும்ப்படி தங்களை கேட்டுகொள்கிறோம்.
(4) TWAD மூலம் காயல்பட்டின நகராட்சிக்கு தற்போது அமலில் உள்ள குடிநீர் திட்டம்மூலம் தினமும் - 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதனை நகரில் உள்ள 8100 குடிநீர் இணைப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்கலாம் என குடிநீர் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் நகரில் விநியோகிக்கப்படுகிறது.
இதற்கான காரணத்தை அறிந்து, மக்களுக்கு தற்போது வழங்கப்படும் குடிநீரை குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது எப்படி விநியோகிக்கலாம் என கண்டறிந்து, அதனை அமல்படுத்த TWAD வல்லுநர்கள் குழுவினை அமைக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
(5) மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 உடைய பிரிவு 357 A படி, நகராட்சியின் ஆவணங்கள் - குறியிடப்பட்டு (indexed), பகுதி வாரியாக (catalogued) பாதுகாக்கப்பட வேண்டும். காயல்பட்டினம் நகராட்சியின் ஆவணங்கள் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆகவே - காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அவைகளை எவ்வாறு முறையாக பராமரிக்க வேண்டும் என பயிற்சி வழங்கவும் - வல்லுனர்களை நகராட்சிக்கு அனுப்பித்தரும்படி கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. |