சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றி, சுற்றுச்சூழலைப் பாதித்தமைக்காக, மீன் எண்ணெய் மற்றும் மீன் உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை மூடி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் - பட்டினமருதூர் மற்றும் கட்டாளங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் மீன் எண்ணெய் மற்றும் மீன் உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீரை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் செயல்பட்டு வந்ததாலும், இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரு தொழிற்சாலைகளை மூடுவதற்கும், அதன் மின் இணைப்பைத் துண்டிப்பதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்விரு தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைகள் தொழிற்கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. |