கடந்த ஒரு வார காலமாக காயல்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணி செய்த, திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்திருக்கும் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், “தூய்மைப் பணியில் இளைஞர்கள் - YOUTH FOR CLEANLINESS“ என்ற முழக்கத்தை முன்வைத்து, 12.03.2012 முதல் 18.03.2012 வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
துவக்க நாளான 12.03.2012 அன்று காயல்பட்டினம் கோமான் தெருவில் நடைபெற்ற துவக்கவிழாவுடன் தூய்மைப் பணியைத் துவக்கிய இக்குழுவினர், கோமான் தெரு சுற்றுப்புறப் பகுதிகள், மகுதூம் பள்ளி மையவாடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில், தூய்மைப் பணியில் இறங்கி, அப்பகுதிகளிலுள்ள முட்புதர்கள், தேவையற்ற மணற்பரப்புகள், குப்பை - கூளங்களை அகற்றி, பல இடங்களில் மரங்களை நட்டு நீர் பாய்ச்சினர்.
மகுதூம் பள்ளி மையவாடியில் மாணவர்கள் தூய்மைப் பணியிலீடுபட்டிருந்த காட்சிகள்:-
காயல்பட்டினம் கடற்கரை வளாகத்தைத் தூய்மைப்படுத்தியமைக்காக, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில், முகாம் நிறைவு நாளான 18.03.2012 அன்று மாலை 05.00 மணியளவில், திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி மைய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களையும், அவர்களை நெறிப்படுத்திய திட்ட அலுவலர்களையும் பாராட்டும் நோக்குடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க தலைவர் ஓ.ஏ.சி.நஸீர் அஹ்மத் தலைமை தாங்கினார். அதன் துணைத்தலைவர்களான எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், பொருளாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் மற்றும் திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் க.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சித் தலைவர் ஓ.ஏ.சி.நஸீர் அஹ்மத் வரவேற்புரையாற்றினார். கடற்கரை பயனாளிகள் சங்கம் துவங்கப்பட்டதற்கான நோக்கம், அதன் செயல்திட்டங்கள், அண்மையில் அது செய்து வரும் பணிகளை அவர் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
பின்னர், திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ.எடின்பர்ட்டி ராயன் உரையாற்றினார்.
தம் பயிற்சி மையத்தின் முதல்வர் முருகன் ஒப்புதலின் பேரில், காயல்பட்டினத்தில் கடந்த ஒரு வார காலமாக தூய்மைப்பணி செய்யப்பட்டு வந்ததாகத் தெரிவித்த அவர், இடையில் சில தினங்கள் மழை பெய்த காரணத்தால், தூய்மைப்பணி செய்ய திட்டமிடப்பட்டிருந்த ரெட் ஸ்டார் சங்க வளாகம், தாயிம்பள்ளி மையவாடி, ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி மையவாடி, குருவித்துறைப் பள்ளி மையவாடி உள்ளிட்ட நகரின் இதர பகுதிகளில் தூய்மைப்பணி செய்யவியலாமற்போனதாக தெரிவித்தார்.
இந்த முகாமின்போது, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து தந்தமைக்காக காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான், கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் தூய்மைப் பணியின்போது ஒத்துழைப்பளித்த அந்தந்த பகுதி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அவர் தனதுரையில் நன்றி தெரிவித்தார்.
பின்னர், தூய்மைப்பணியிலீடுபட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் சான்றிதழ்களும், அன்பளிப்புப் பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா துவக்கமாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, நகரின் பொதுநல ஆர்வலர்களான லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கினர்.
பின்னர், திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான ஏ.என்பர்ட்டி ராயன், க.முருகேசன் ஆகியோருக்கு, கடற்கரை பயனாளிகள் சங்க தலைவர் ஓ.ஏ.சி.நஸீர் அஹ்மத் அன்பளிப்பு பொருட்களை வழங்கினார்.
பின்னர், கடற்கரையில் தூய்மைப் பணி செய்ததைப் பாராட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சால்வை அளித்து பாராட்டினார்.
நிறைவாக, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், ஏ.ஏ.அஜ்வாத், இ.எம்.சாமி மற்றும் நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ ஒருங்கிணைப்பில், நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், எல்.டி.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எல்.டி.சித்தீக் ஆகியோர் அன்பளிப்புப் பொருட்களுக்கு அனுசரணையளித்திருந்தனர். |