சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியை விமரிசையாக நடத்திடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதன் செயற்குழுக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 16.03.2012 அன்று 20.00 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மழலையின் மறையோதல்:
மன்றத்தின் துணைத்தலைவர் ஏ.எம்.உதுமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். துவக்கமாக மன்ற துணைத்தலைவர் ஏ.எம்.உதுமான் அவர்களின் மகளான - 4 வயது நிரம்பிய ஃபவ்ஸுல் ஹினாயா, இறைமறை வசனங்களை தனதினிய மழலைக் குரலால் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கடந்த கூட்ட அறிக்கை:
அடுத்து, கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்து, மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
வீடு புனர்நிர்மாணம்:
மன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் - ஏழை ஒருவரின் பழுதடைந்த வீட்டைப் புதுப்பித்துக் கட்டும் பணி, இன்ஷாஅல்லாஹ் இன்னும் ஒரு மாத காலத்தில் நிறைவுறும் என்று அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
பொருளாதாரத்தில் நலிவுற்ற - நிராதரவான - உழைக்கவியலாத குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவியின் அடுத்த வழங்கல் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் நிறைவேற்றப்படும் என்றார். இதற்காக தமது அனுசரணைகளை வழங்கிட, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துறுப்பினர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை:
பல்வேறு தேவைகளுக்காக உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து, மன்ற உறுப்பினர்களான வி.எம்.எம்.அப்துல்லாஹ், பி.எஸ்.எம்.அப்துல் காதிர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கு முன்பாக அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அடுத்து, மன்றத்தின் இன்று வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
உறுப்பினர்கள் தமது முதல் காலாண்டிற்கான சந்தா தொகைகளை குறித்த நேரத்தில் வழங்கியொத்துழைத்தமைக்காக அவர் நன்றி தெரிவித்தார்.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் (AGM) இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 31ஆம் தேதி, சிங்கப்பூர் Fairy Point Chalet 5 என்ற முகவரியில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து, இச்செயற்குழுவில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திடுவதற்காக - சிறப்பு ஏற்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள்:
குழந்தைகள், ஆண்கள் - பெண்களுக்காக ஆர்வமூட்டும் விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்படவுள்ளதாகவும், உறுப்பினர்கள் தமது அன்றைய இரவுப் பொழுதை கூட்ட நிகழ்விடமான Fairy Point Chalet 5இலேயே கழித்து, மறுநாள் காலையில் தமதிடம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து உறுப்பினர்களும் - இரவு தங்கும் ஏற்பாட்டுடன் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறும் இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கால்பந்து போட்டி அறிவிப்பு:
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் Khalasa Association 5’s Groundஇல், இம்மாதம் 24ஆம் தேதியன்று, மன்றத்தால் மின்னொளியில் கால்பந்து போட்டி நடத்தப்படும் என்றும், இப்போட்டியில் கலந்துகொள்ள ஆர்வப்படும் உறுப்பினர்கள், மன்ற உறுப்பினர் முஹம்மத் உமர் ரப்பானீ அவர்களை அவரது 84680948 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தமது பெயர்களை உடனடியாக பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இப்போட்டியில் வெல்வோருக்கு, வரும் பொதுக்குழுக் கூட்டத்தின்போது பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டம் குறித்த விரிவான தகவலறிக்கை அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டறிக்கை பரிசீலனை:
எதிர்வரும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய - மன்றத்தின் 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, அது குறித்து விவாதிக்கப்பட்டது. மன்ற உறுப்பினர்கள், முழுமையாகவும் - பொறுமையாகவும் படித்தறிந்து வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் பொருட்டு, இவ்வறிக்கையை - அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
இவ்வறிக்கை குறித்த குறுக்கு விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி நடைபெறவுள்ள மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்கலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடப்பு நிர்வாகக் குழுவிற்கு பாராட்டு:
மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் தலைமையில் செயல்பட்டு வரும் மன்றத்தின் நடப்பு நிர்வாகக் குழுவின் செம்மையான செயல்பாடுகளையும், அதற்கு, 2011ஆம் ஆண்டில் அனைத்துறுப்பினர்களும் வழங்கிய மனப்பூர்வமான ஒத்துழைப்புகளையும், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
இதைப்போன்றோ அல்லது இதை விட சிறப்பாகவோ - வரும் 2013ஆம் ஆண்டு முதல் செயல்படுவதற்கான புதிய நிர்வாகக் குழுவிற்கு உறுப்பினர்கள் இப்போதே தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய காயலர் அறிமுகம்:
தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றிடுவதற்காக சிங்கப்பூருக்கு வந்துள்ள காயலரான செய்யித் அப்துர்ரஹ்மான் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். வேலை தேடி சிங்கப்பூர் வந்துள்ள அனைத்து காயலர்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திட - அனைத்துறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பளிப்பர் என்றும், வெகுவிரைவில், காயலர் சமுதாயம் ஒன்றையே சிங்கப்பூரில் உருவாக்கிடும் நோக்குடன், தகுதியான காயலர்களை அதிகளவில் வரவழைக்கலாம் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ தொடர்புகளுக்கென தனி ஒருங்கிணைப்பாளர்:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்துடன், நகர கல்விச் சேவைக்கான துரித தொடர்பை தாமதமின்றி கடைப்பிடிக்கும் நோக்குடன் சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கான இக்ராஃ ஒருங்கிணைப்பாளராக எஸ்.எச்.உதுமான் நியமிக்கப்பட்டார்.
இவர், இக்ராஃவிலிருந்து பெறப்படும் தகவல்களை மன்றத்திற்கும், இக்ராஃவிற்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்களை மன்றத்திலிருந்தும் உடனுக்குடன் செய்து தர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ரியாத் கா.ந.மன்ற புதிய நிர்வாகக் குழுவிற்கு வாழ்த்து:
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு, தன் பருவ காலத்தில் நிறைவான நகர்நல சேவைப்பணிகள் பல செய்திடவும், நகர்நல மன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்புகளை இன்னும் மெருகேற்றியமைத்திடவும் எதிர்பார்க்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறம்சங்களெதுவுமில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீயின் துஆவுடன் 21.30 மணிக்கு இறையருளால் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இரவு உணவுக்குப் பின், உறுப்பினர்கள் தமதிடம் திரும்பினர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |