மே 2007 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளுக்கும் பொதுவான இணையதளமாக http://tnulbs.tn.gov.in இருந்தது. ஜூன் 1, 2007 முதல் மாநிலத்தில் உள்ள
அனைத்து நகராட்சிகளுக்கும் தனி முகவரியுடன் இணையதளங்கள் வழங்கப்பட்டது.
இது குறித்த ஜூன் 1, 2007 தேதியிட்ட சுற்றறிக்கையினை காண இங்கு அழுத்தவும்.
அவ்வேளையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு http://municipality.tn.gov.in/kayalpattinam என்ற இணையதள முகவரி வழங்கப்பட்டது.
மேலும் ஜூலை 10, 2007 தேதியிட்ட சுற்றறிக்கை மூலம் ஒவ்வொரு நகராட்சிக்கு என அரசு இணையதள முகவரியினை சார்ந்துள்ள ஈமெயில் முகவரியும் வழங்கப்பட்டது. அது வரை நகராட்சிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட ஈமெயில் முகவரியினை (hotmail.com, yahoo.com) பயன்படுத்தி வந்தனர். இது குறித்த சுற்றறிக்கையினை காண இங்கு அழுத்தவும்.
அவ்வேளையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு commr.kayalpattinam@tn.gov.in என்ற ஈமெயில் முகவரி வழங்கப்பட்டது.
மேலும் ஜூன் 28 - 30, 2007 - மண்டல மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் கணினி அலுவலர்களுக்கு - இணையதளத்தினை பராமரிப்பது குறித்தும், டெண்டர் விபரங்களை அரசு டெண்டர் இணையதளம், நகராட்சி நிர்வாகத்துறை டெண்டர் இணையதளம் மற்றும் நகராட்சிகளின் பிரத்தியேக இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்வது குறித்தும் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இது குறித்த சுற்றறிக்கையினை காண இங்கு அழுத்தவும்.
மத்திய அரசு டிசம்பர் 2006 இல் JAWAHARLAL NEHRU NATIONAL URBAN RENEWAL MISSION (JNNURM) என்ற திட்டத்தினை அறிவித்தது. அதன் மூலம் இந்தியாவில் உள்ள நகர்புற பகுதி வசதிகளை மேம்படுத்த - மாநிலங்களுக்கு பல ஆயிர கோடி ரூபாய் மதிப்பீடு திட்டங்களை - வழங்க முடிவுசெய்தது. அத்திட்டத்தின் முக்கிய அம்சமாக - நகராட்சிகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் மத்திய அரசினால் விதிக்கப்பட்டது.
மத்திய அரசின் இப்பரிந்துரையின் விளைவாக - தமிழக அரசு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இல் - இது குறித்த தனி பிரிவையே (357-A) 2009 இல் சட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஒரு நகராட்சியின் இணையதளத்தில் எந்தெந்த அம்சங்கள் இருக்கவேண்டும் என்று விரிவான சுற்றறிக்கையை செப்டம்பர் 14, 2007 அன்று நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டது. அச்சுற்றரிக்கையை காண இங்கு அழுத்தவும்.
அச்சுற்றரிக்கையில் 12 முக்கிய அம்சங்கள் இணையதளத்தில் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தின் தற்போதைய நிலை? பல - அடிப்படை மற்றும் சிறு தகவல்கள் கூட சரியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.
மார்ச் 16, 2012 தேதிப்படி காயல்பட்டின நகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் ...
உதாரணமாக - காயல்பட்டினம் நகராட்சி - கடந்த நகர்மன்ற பதவி காலத்திலேயே இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது (ஆகஸ்ட் 2010). ஆனால் இன்று வரை – காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் மூன்றாம் நிலை நகராட்சி என்றே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உலக வரைப்படத்தில் காயல்பட்டினத்தின் அகலக்கோடு (Latitude) 8o 34' வடக்கு. ஆனால் காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளம்படி - 35o 6' வடக்கு. இது உண்மையெனில் காயல்பட்டினம் - தூத்துக்குடி மாவட்டத்தில் அல்ல, ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் வட பகுதியில் உள்ளது!
ஊழியர் தகவல் பக்கத்தில் - இடமாற்றம் பெற்று வேறு நகராட்சிகளுக்கு சென்றுள்ள அதிகாரிகள் பெயரும் பல மாதங்கள் ஆகியும் - இன்னும் நீக்கப்படாமல் உள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்களில் இப்பிரச்சனையெனில் - சுற்றறிக்கை வலியுறித்தியுள்ள பல தகவல்கள் - காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதே இல்லை.
உதாரணமாக - நகராட்சியின் மூன்று மாதக்கணக்கு (QUARTERLY STATEMENT) - காலாண்டு நிறைவுற்று, இரண்டு மாதங்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எக்காலமும் - காயல்பட்டினம் நகராட்சி இணையதளத்தில் இத்தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதில்லை.
நகராட்சியின் கொள்முதல்கள் உட்பட அனைத்து பணிகள் குறித்த விபரம், அவைகளின் மதிப்பு, நிறைவு செய்யப்பட்ட நாள் போன்ற தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். எக்காலமும் - காயல்பட்டினம் நகராட்சி இணையதளத்தில் இத்தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதில்லை.
நகராட்சியின் ஆண்டு வரவு செலவு (ANNUAL BUDGET) கணக்கு? அதுவும் எக்காலமும் - காயல்பட்டினம் நகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில்லை.
10 லட்ச ரூபாய் மதிப்புக்கு மேலான அனைத்து டெண்டர் விபரங்களும் - தமிழக அரசின் டெண்டர் இணையதளத்திலும் (http://tenders.tn.gov.in) - டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே - பதிவேற்றம் செய்யப்படவேண்டும். ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான டெண்டர்கள் விபரம் - நகராட்சி நிர்வாகத்துறை டெண்டர்
இணையதளத்திலும் (http://municipality.tn.gov.in/tenders), ஒரு நகராட்சியின் சொந்த/பிரத்தியேக இணையதளத்திலும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும். அதுமட்டுமன்றி, டெண்டர் ஒப்பந்தபுள்ளிகள் குறித்த ஆய்வறிக்கை (BID EVALUATION STATEMENT) மற்றும் டெண்டர் வெற்றி பெற்றவர் (SUCCESSFUL BIDDER) விபரமும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆனால் காயல்பட்டினம் நகராட்சி இணையதளத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி 2012) நடைபெற்ற டெண்டர் விபரங்கள் உட்பட எந்த டெண்டர் விபரங்களும் இது காலம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டதில்லை. இதற்கான பொறுப்பு யாருடையது?
நகராட்சி நிர்வாகத்துறையின் ஜூன் 30, 2007 சுற்றறிக்கை - டெண்டர் குறித்த விபரங்களை, கணினி பொறியாளர்கள் (ASSISTANT PROGRAMMERS/SYSTEM ADMINISTRATORS) பதிவேற்றம் செய்ய நகராட்சியின் ஆணையர் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் பணிக்கவேண்டும்; அவ்வாறு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றால் – அவர்களும் (ஆணையர் மற்றும் நகராட்சி பொறியாளர்), கணினி பொறியாளர்களும் இத்தவறுக்கு பொறுப்பு என்று நிர்ணயிக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கூறுகிறது. (The Commissioners of the ULBs and the MEs/CEs should personally ensure that the tender documents are uploaded in the systems by the Assistant Programmers/System Administrators on the day of floating the tender documents. If it is not done, they along with the Assistant Programmers/System Administrators will be held responsible for the lapse and dealt severely).
ஒரு நகராட்சி வெளிப்படையான நிர்வாகத்தினை வழங்க சட்டங்கள், சுற்றறிக்கைகள் தெளிவாக உள்ளன. ஆனால் அதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, பொது மக்கள், மக்களின் பிரதிநிதிகள் இது குறித்த கேள்விகள் எழுப்பும் வரை மெத்தன போக்கினையே கடைப்பிடிப்பர் என்பதே - காயல்பட்டின நகராட்சியின் நிலைமட்டும் அல்ல, தமிழகத்தின் ஏனைய நகராட்சிகளின் நிலையும் கூட! |