கடந்த 10.03.2012 அன்று நடைபெற்ற - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டம், இறையருளால் கடந்த 10.03.2012 சனிக்கிழமையன்று மாலை 05.00 மணியளவில், செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத் இல்லத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் தலைமையில் நடைபெற்றது.
பேரவை பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசிய பேரவை தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ், கடந்த செயற்குழுக் கூட்டம் முதல் இன்று வரையிலான பேரவையின் செயல்பாடுகள், ஆற்றிய - ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கிப் பேசியதுடன், பேரவையில் குறைந்த எண்ணிக்கையிலேயே காயலர்கள் உறுப்பினர்களாக இருப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, துணைத்தலைவர் எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், கடந்த செயற்குழுக் கூட்ட அறிக்கையை வாசித்து விளக்கமளித்தார்.
CFFC ஆய்வறிக்கை:
அடுத்து, காயல்பட்டினத்தில் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFCயால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, ஹாங்காங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்தமை குறித்த விபரங்களை, கூட்டத் தலைவரும், பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரையைத் தொடர்ந்து, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள புற்றுநோய் பாதிப்புகள் குறித்த விபரங்களை சேகரிப்பதற்காக CFFC மேற்கொண்ட முயற்சிகளை அனைத்து உறுப்பினர்களும் பாராட்டினர்.
KEPA அமைப்பிற்கு முழு ஆதரவு:
மேலும், நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன், CFFCயால் அண்மையில் துவக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA என்ற புதிய அமைப்பிற்கு, பேரவை முழு ஆதரவையும் வழங்கும் என்றும், அவ்வமைப்பின் மூலம் - அனைத்து நகர்நல மன்றங்கள், சமூக இயக்கங்கள் மூலம் இது விஷயமாக மேலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
நமதூருக்கருகாமையிலுள்ள தொழிற்சாலையால் ஏற்பட்டு வரும் ஆபத்துகள் குறித்து அரசுக்கு உரிய முறையில் எடுத்து வைப்பதுடன், சட்ட ஒழுங்கும் மேற்கொள்ள வலியுறுத்துவதென ஆலோசிக்கப்பட்டது.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
இன்பச் சிற்றுலா ஏற்பாடுகள்:
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பேரவை சார்பில் சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சிறுதொழில் உதவி:
வழமையாக பேரவையால் வழங்கப்பட்டு வரும் சிறுதொழில் உபகரணங்கள் உதவித் திட்டத்தின் கீழ் - பேரவையின் பிரதிநிதி அமைப்புகளான காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐஐஎம்) ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதோடு, இதன் மூலம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளமைக்காக கூட்டத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.
புற்றுநோய், நீரழிவு நோய் விழிப்புணர்வு முகாம்:
கடந்த ஆண்டுகளைப் போல, இவ்வாண்டும், எதிர்வரும் மே மாதத்தில், கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து Cancer Awareness Camp - புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்துவதென்றும், கூடுதலாக நீரழிவு நோய் விழிப்புணர்வு முகாம் (Diabates Awareness Camp) நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு / பொதுக்குழுக் கூட்டம்:
பேரவையின் நடப்பு நிர்வாகக் குழுவின் கடைசி செயற்குழுக் கூட்டத்தை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் மே மாதம் 26ஆம் தேதியன்று நடத்துவதென்றும், ஜூன் மாதத்தில் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மறைந்த சேவகருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான - நம் இதயமெல்லாம் நிறைந்த பண்பாளர், கண்ணியமிகு ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா அவர்களின் பொதுச்சேவை மற்றும் நம் பேரவை துவங்கப்பட்ட நாள் முதல், தன் வாழ்வின் இறுதி வரையிலும் அனைத்திலும் துணை நின்றதை நினைவுகூர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அன்னாரின் மஃபிரத் - பாவப் பிழை பொறுப்பிற்காக பிரார்த்திக்கப்பட்டது.
ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ துஆவுடன் இறையருளால் கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில், பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இக்கூட்ட ஏற்பாடுகளுக்கு, பேரவைத் தலைவர் மற்றும் எஸ்.எச்.ரியாஸ் அஹ்மத் ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர்.
,இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங். |