காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (Cancer Fact Finding Committee - CFFC) நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் நோக்குடன் புதிய அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கலந்தாலோசனைக் கூட்டம்:
காயல்பட்டினம் நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட, ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை வகுத்திடும் நோக்குடன், புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (Cancer Fact Finding Committee - CFFC) சார்பில், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள்;ஆர்வலர்கள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டம், 03.03.2012 சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு,காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த கூட்ட அறிக்கை:
ஹாஃபிழ் முஹம்மத் அபூபக்கர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். CFFC ஒருங்கிணைப்பாளர் சாளை நவாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். CFFC யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மது, சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து, விளக்கிப் பேசினார்.
நடப்பு கூட்டத்தின் நோக்கம்:
நடப்பு கூட்டத்தின் நோக்கம் குறித்து, எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார். கடந்த கூட்டத்தில் கலந்தாலோசனைக்காகவென்றே நீண்ட நேரம் சென்றுவிட்ட காரணத்தால்,அடுத்தடுத்த கூட்டப் பொருட்களை நிறைவேற்றவியலாமற் போனதாகவும், நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் நோக்குடன் - அதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செய்திடும் பொருட்டு புதிய அமைப்பை நிறுவி, அதற்கென நிர்வாகக் குழுவையும் தேர்ந்தெடுத்து, அமைப்பை அரசுப் பதிவு செய்வது குறித்தும், புதிய அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிப்பதற்காகவும் நடப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நகரில், மக்கள் நலப்பணிகளை செய்வதற்கு விரல் விட்டு எண்ணுமளவிலேயே மக்கள்ஆர்வப்படுவதாகவும், அதே நேரத்தில் பொதுமக்களைத் தாக்கும் உயிர்க்கொல்லி நோய்களோ எண்ணிலடங்காமல் நாள்தோறும் மக்களைப் பாதித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அவர்களின் குறிப்பிடத்தக்க ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர், “காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATON (KEPA)“ என்ற பெயரில் புதியதோர் அமைப்பைத் துவக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிர்வாகக் குழுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேலும், நகர பொதுமக்களின் உடல் நலனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் - காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் அமைந்திருக்கும் DCW தொழிற்சாலையின் உற்பத்திகளைப் பெருக்கவும், புதிய பொருட்களை உற்பத்தி செய்யவும் ஆலை நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி, அரசு சட்டவிதிகளின்படி ஆலை செயல்படாத வரை அதற்கு அரசு ஒப்புதலளிக்கக் கூடாது என்றும் அரசைக்கோரும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் தேதியன்று, நகரில் ஒருநாள் அடையாள கடையடைப்பை நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில:-
நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட புதிய அமைப்பு:
காயல்பட்டினம் நகர சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடுவதற்கான செயல்திட்டங்களை முறைப்படுத்தி செயல்படுத்திடும் பொருட்டு, “காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA“ என்ற பெயரில் புதிதாக அமைப்பைத் துவக்கவும், அதனை அரசுப் பதிவு செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
புதிய அமைப்பிற்கான நிர்வாகக் குழு:
“காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA“ அமைப்பிற்கு பின்வருமாறு நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்
துணைத் தலைவர்கள்:
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர்
ஹாஜி ஏ.கே.கலீல்
செயலாளர்:
பல்லாக் எஸ். அப்துல் காதிர் நெய்னா
துணைச்செயலாளர்கள்:
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ
கே.எம்.ஏ. முஹம்மது முஹிதீன் (AYWA)
பொருளாளர்:
ஹாஜி ஏ.ஆர்.இக்பால்
செயற்குழு உறுப்பினர்கள்:
ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது
ஏ.தர்வேஷ் முஹம்மது
பல்லாக் முஹம்மது சுலைமான்
எஸ்.ஏ.எஸ். ஃபாஸுல் கரீம்
சாளை ஷேக் ஸலீம்
எஸ்.அப்துல் வாஹித்
பொறியாளர் ஏ.பி.ஷேக்
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்
சாளை ஷேக் நவாஸ்
எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ்
எம்.ஏ.முஹம்மது இப்றாஹீம் (48)
ஜே.ஹைதர் அலி
உ.ம.ஷாஹுல் ஹமீது
கே.எம்.டி.சுலைமான்
ஏ.லெப்பை ஸாஹிப் (ஏ.எல்.எஸ்.)
யு.முஹம்மது நவ்ஃபல்
எம்.ஏ.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (மம்னாகார்)
பாலப்பா ஜலாலீ
பி.ஏ.ஷேக்
ஹாஜி எம்.ஏ.கிதுரு முஹம்மது
ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (YUF)
கே.எம்.என்.மஹ்மூது (QYSS)
டாக்டர் டி.முஹம்மது கிஸார்
எல்.எம்.இ.கைலானீ
ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்
DCW ஆலை கழிவு நீரை கடலில் கலப்பதற்குக் கண்டனம்:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் கழிவு நீர், அரசு சட்ட விதிகளை மதியாமல், காயல்பட்டினம் கடலில் நேரடியாகக் கலக்கப்படுவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாத மேற்படி ஆலையின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
DCW ஆலை குறித்து ஆய்வு செய்ய சுயேட்சையான வல்லுனர் குழு:
காயல்பட்டினத்தில் அண்மைக் காலமாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெருகி வருவதும், அதனால் ஏற்படும் ஏராள மரணங்களும் அனைவரும் அறிந்ததே! இதற்கு முக்கிய காரணமாக காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையாக இருக்கலாம் என பல வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளதால், சுயேட்சையாக செயல்படத்தக்க வல்லுனர் குழுவொன்றை அமைத்து, அக்குழுவின் மூலம் - DCW ஆலை மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளைப்பேணுகிறதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை வெளியிட மத்திய -மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
DCW ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது:
மேற்படி வல்லுனர் குழுவால் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் புதியபொருட்கள் உற்பத்திக்கு, மக்கள் நலன் கருதி அரசு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய- மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கையெழுத்து சேகரிப்பு:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் புதியபொருட்கள் உற்பத்திக்கு, மக்கள் நலன் கருதி அரசு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக - முதற்கட்டமாக பொதுமக்களிடமிருந்து பெருவாரியான அளவில், கையெழுத்துக்களை சேகரித்து, மத்திய - மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கடையடைப்பு:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கம் மற்றும் புதியபொருட்கள் உற்பத்திக்கு, மக்கள் நலன் கருதி அரசு அனுமதியளிக்கக் கூடாது என மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக - இரண்டாம் கட்டமாக, நகரின் அனைத்து வணிகர்கள்- பொதுமக்களின் ஆதரவைப் பெற்று,எதிர்வரும் 07.04.2012 சனிக்கிழமை அன்று ஒருநாள் அடையாள கடையடைப்பை நகரளவில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
ஒத்துழைப்புக்கு நன்றி கூறி...
CFFC - சென்னை,அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்தின் உதவியுடன், புற்று நோய் குறித்த தகவல் சேகரிப்பை மேற்கொள்ளும் வகையில் ''KAYALPATNAM CANCER REGISTRY" ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் 'Cancer Screening Test " செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் செயல்பாட்டுக்காக தங்கள் மருத்துவமனையின் ஒரு அறையை (Room) CFFC-க்கு ஒதுக்கித் தந்துள்ள கே.எம்.டி.மருத்துவமனை நிர்வாகத்திற்கும், இந்த உபயோகத்திற்கு (Cancer Registry) தேவையான பொருட்கள் (Computer, Printer, Scanner, Tables, etc..) அனைத்தையும் வழங்கி உதவியுள்ள தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யது அஹமது அவர்களுக்கும், CFFC-யின் அன்பான வேண்டுகோளை ஏற்று, இரண்டு முறையும் ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் கூட்டம் நடத்திட அனுமதி தந்ததோடு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்து உதவிய மகுதூம் ஜும்ஆ பள்ளி மற்றும் ஃபாயிஸீன் சங்க நிர்வாகிகளுக்கும் இக்கூட்டம் மிகுந்த நன்றியை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.
மேற்கண்டவை உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, CFFC நிர்வாகி பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நன்றி கூற, ஹாஜி எம்.ஏ.கிதுரு முஹம்மது அவர்களின் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் மதியம் 12.30 மணியளவில் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நகரின் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அவற்றின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |