திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்திருக்கும் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், “தூய்மைப் பணியில் இளைஞர்கள் - YOUTH FOR CLEANLINESS“ என்ற முழக்கத்தை முன்வைத்து, 12.03.2012 முதல் 18.03.2012 வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் கடற்கரை வளாகத்தைத் தூய்மைப் படுத்தும் பணியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
12.03.2012 அன்று மாலையில் கடற்கரையில் தூய்மைப் பணி செய்வதற்காக வந்த நாட்டு நலப்பணித்திட்ட குழுவினரை, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர பிரமுகர் ஹாஜி ஏ.லுக்மான் ஆகியோர் வரவேற்றனர்.
துவக்கமாக, கடற்கரை முன்புறமுள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதி, நுழைவாயிலில் உள்ள நடைபாதைகளில் தேங்கியிருந்த குப்பை - கூளங்களையும், மணலையும் அவர்கள் அப்புறப்படுத்தினர்.
கடற்கரைக்கு வாகனங்களில் வருவோர், தமது வாகனங்களை அதற்குரிய இடங்களில் நிறுத்த அவர்கள் கேட்டுக்கொண்டனர். பொதுமக்களும் அதற்கு ஒத்துழைப்பளித்தனர்.
கடற்கரை தூய்மைப் பணியின் தொடர்ச்சியாக, 13.03.2012 அன்று (நேற்று) மாலையில், அவர்கள் கடற்கரை மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள வளைவுக் கட்டிடம் (ரவுண்டானா) மற்றும் அதற்கு முன்புள்ள வளைவுக் கட்டிடம் ஆகியவற்றுக்குள்ளிருந்த குப்பை - கூளங்களை அப்புறப்படுத்தி, பொதுமக்கள் அதிலும் அமரலாம் எனுமளவுக்கு அவற்றை சுத்தம் செய்தனர்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த தூய்மை ஆர்வலர்கள் பலர் இம்மாணவர்களை வாயார பாராட்டினர். |