காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் இரண்டாம் கட்டப் பணி 11.03.2012 அன்று காலையில் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக 12.03.2012 அன்றும் (நேற்றும்) ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்தது.
காயல்பட்டினத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த, கடந்த ஜனவரி மாதம் 06ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 03ஆம் தேதியன்று, திருச்செந்தூர் சாலையிலிருந்து பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் வழியாக பேருந்து நிலையம் வரையிலும் ஒரு வழியாகவும், பேருந்து நிலையத்திலிருந்து ஹாஜியப்பா தைக்கா தெரு, பிரதான வீதி, கே.டி.எம். தெரு ஒரு வழியாகவும் என நகரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.
பேருந்து போக்குவரத்திற்காக வரையறுக்கப்பட்ட இவ்வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்தகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், பிப்ரவரி 26 அன்று, காயல்பட்டினம் தாயிம்பள்ளி திருப்பம் வழியாக பெரிய நெசவுத் தெருவிற்குள் திரும்பும் வளைவில், தென்புறமிருந்த வீடு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலிருந்த ஒரு வீடு உள்ளிட்டவை, ஆக்கிரமிப்புகள் என பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 11.03.2012 அன்று காலையில் துவங்கியது. அன்று முழுக்க, எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள எஸ்.எம்.காம்ப்ளக்ஸ் கட்டிடம் மட்டும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், 12.03.2012 அன்று (நேற்று) மீண்டும் தொடரப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில், வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கப்பால் கடைகளில் நீண்டுள்ள வெளிப்படிக்கட்டுகள், தொலைபேசி கம்பிகள், கடைகளின் பெயர்ப் பலகைகள் என அனைத்தும் இடித்தகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைக் கவனித்த சில கடைக்காரர்கள் தமது கடைக்களுக்கருகில் அகற்றப்பணி நடைபெறுவதற்கு முன்பாக - அவர்களே தம் பொருட்களைப் பாதுகாப்பான முறையில் கழற்றியகற்றியது குறிப்பிடத்தக்கது.
‘வழமை போல‘ பொதுமக்கள் திரண்டு நின்றவாறு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளைப் பார்வையிட்டனர்.
|