இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி, மாணவரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகிய அணிகளுக்கான தூத்துக்குடி மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் 09.03.2012 அன்று (நேற்று) மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர துணைத்தலைவர் ஹாஜி வாவு சித்தீக், நகர பொருளாளர் ஹாஜி எம்.அஹ்மத், நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், நகர துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாநகர கவுரவ தலைவர் ஹாஜி எம்.அப்துல் கனீ, தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் சகாப்தீன், மாவட்ட துணைச் செயலாளர் தூத்துக்குடி உவைஸ், மாவட்ட பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஹாஜி ஏ.ஷாஹுல் ஹமீத், தெற்கு ஆத்தூர் நகர தலைவர் லெ.அப்துல் காதிர், அதன் நகர செயலாளர் அப்பாஸ், சாத்தான்குளம் நகர தலைவர் மீராஸாஹிப், சாத்தான்குளம் நகர செயலாளர் இஸ்மாஈல், புறையூர் நகர செயலாளர் ஹனீஃபா, முத்தையாபுரம் ஜமாஅத் தலைவர் ஹாஜி முஸ்தஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரேஸ்புரம் மீராசா, சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் காயல்பட்டினம் ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் காயல்பட்டினம் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் ஆகியோர் அறிமுகவுரையாற்றினர்.
இளைஞரணி மாநில செயலாளர் பள்ளப்பட்டி எம்.கே.முஹம்மத் யூனுஸ், அதன் இணைச் செயலாளர் தென்காசி முஹம்மத் அலீ, மாணவரணி மாநில செயலாளர் பாம்புகோவில்சந்தை செய்யது பட்டாணி, தணிக்கைக் குழு மாநில உறுப்பினர் காயல்பட்டினம் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சுதந்திர தொழிலாளர் அணியின் மாநில அமைப்பாளர் ஹாஜி கே.எம்.நிஜாமுத்தீன், முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட இளைஞரணி, மாணவரணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் ஆகிய அணிகளுக்கான தூத்துக்குடி மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை மாநில பொதுச் செயலாளர் வாசித்து, மேடையில் அனைவருக்கும் அறிமுகம் செய்தார்.
நிறைவாக, கட்சியின் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூறி, துஆவுடன் கூட்டத்தை நிறைவு செய்தார்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அணிகளுக்கு அமைப்புக் குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அணிகளான இளைஞரணிக்கு (Youth League) திரேஸ்புரம் மீராசா அவர்களை அமைப்பாளராகக் கொண்டும், மாணவரணிக்கு (MSF) காயல்பட்டினம் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் அவர்களை அமைப்பாளராகக் கொண்டும், சுதந்திர தொழிலாளர் யூனியனுக்கு (STU) காயல்பட்டினம் ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் அவர்களை அமைப்பாளராகக் கொண்டும், தலா ஒவ்வோர் அணிக்கும் 11 அமைப்புக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீர்மானம் 2 - முஸ்லிம் லீக் நகர அலுவலகத்திற்கு பெயர் சூட்டல்:
காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீகுக்காக, சதுக்கைத் தெருவில் வாங்கப்பட்டுள்ள அலுவலக கட்டிடத்திற்கு, “தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில்” என்று பெயர் சூட்ட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - அலுவலக திறப்பு விழா மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்:
நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில் கட்டிட திறப்பு விழா மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை, வரும் மே மாதம் 23ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்திடவும், அப்பொதுக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளரும் - கேரள சட்டமன்ற உறுப்பினரும் - பன்மொழிப்புலவருமான அப்துஸ்ஸமது ஸமதானீ ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து உரையாற்றச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளை முறைப்படுத்திட,
ஹாஜி வாவு அபூபக்கர் சித்தீக் தலைமையில்,
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்,
எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன்,
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
ஹாஜி பெத்தப்பா சுல்தான்,
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
ஆகியோர் ஏற்பாட்டுக் குழுவினராக நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர், நகர அலுவலகத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்குண்டான பணிகளை மேற்கொள்ளல், அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும் பொறுப்பளிக்கப்பட்டனர்.
தீர்மானம் 4 - அலுவலக கட்டிடத்திற்கு நிதியளித்தோருக்கு நன்றி:
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் கட்சிக்காக வாங்கப்பட்டுள்ள “தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில்” கட்டிடத்திற்குத் தேவைப்படும் கூடுதல் தொகைக்கு, தலா ஐந்தாயிரம் ரூபாய் அனுசரணையளித்த மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், துணைத்தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 5 - நகர நிர்வாகிகள் தேர்தல்:
வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள், நகரில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணியை நிறைவு செய்து, அனைத்து வார்டுகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, மே முதல் வாரத்திற்குள் நகர நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6 - தொடர்வண்டி நிலைய நிலுவைப் பணிகள்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், ரூபாய் 70 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டு, செய்யப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகளில், செய்யப்படாமல் நிலுவையிலுள்ள பணிகளை நிறைவேற்றுவது குறித்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தொடர்வண்டித் துறையிடமிருந்து பதில் எதிர்பார்க்கப்படுவதாகவும், சாதகமான பதில் கிடைக்கப்பெறாவிடில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்து ஜமாஅத்துகளையும் திரட்டி, மே மாத முதல் வாரத்தில் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 7 - தொடர் மின்தடையை எதிர்த்து போராட்ட எச்சரிக்கை:
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மணி நேரம் முறையற்று மின்தடை செய்யப்பட்டு வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, கூடங்குளம் அணுமின் நிலையத்தை - பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி விரைந்து செயல்படுத்திட அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு பிரச்சினையை தமிழக அரசு விரைந்து தீர்க்காவிட்டால், தென் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளைக் கலந்தாலோசித்து, மிகப்பெரிய அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி வழங்கிடுமாறு மாநில தலைமையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 8 - கொடியேற்ற நிகழ்ச்சி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 65ஆம் ஆண்டு நிறுவன தின விழாவை முன்னிட்டு, மார்ச் 10ஆம் தேதியன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பிறைக்கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்சியின் கிளை நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். |