காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், பயணியர் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்வதற்கென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கிளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக, இந்திய தொடர்வண்டித் துறையின் அன்றைய இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவருமான இ.அஹ்மத் காயல்பட்டினம் வந்தபோது, ரூ.70 லட்சம் செலவில், தொடர்வண்டி நிலையத்திற்குள் செல்வதற்கான சாலை, விளக்குகள், மழைக்கு ஒதுங்க மேற்கூரை, இருக்கைகள், நடைமேடை விரிவாக்கம் - உயர்த்தல் என மேம்பாட்டுப் பணிகள் செய்வதற்காக - தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் விளக்குகளே இல்லாத நிலையைப் போக்கி, தேவைக்கேற்ப இல்லாவிட்டாலும் ஓரளவுக்கேனும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், நடைமேடையையொட்டி மேற்கூரை அமைப்பதற்காக இரும்புச் சட்டங்கள் பல மாதங்களுக்கு முன் நிறுவப்பட்டு, இன்று வரையிலும் அதில் மேற்கூரைகள் அமைக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், நிலுவையிலுள்ள பணிகள் நிறைவேற்றம் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தம் கட்சி சார்பில் கேட்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது குறித்த விபரங்கள் பெறப்பட்டு, சாதகமான பதில்கள் பெறப்படாவிடில் - போராட்டம் நடத்தப் போவதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தெரிவித்துள்ளார். |