திருச்செந்தூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் (ஐ.டி.ஐ.) நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவார காலம் முகாமிட்டு, கோமான் தெரு, கடற்கரை பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபரம் பின்வருமாறு:-
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்திருக்கும் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், “தூய்மைப் பணியில் இளைஞர்கள் - YOUTH FOR CLEANLINESS“ என்ற முழக்கத்தை முன்வைத்து, 12.03.2012 முதல் 18.03.2012 வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
முகாம் துவக்க நிகழ்ச்சி, 12.03.2012 அன்று காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் கோமான் நற்பணி மன்ற ஏற்பாட்டில், கோமான் தெருவில் நடைபெற்றது.
கோமான் ஜமாஅத் தலைவர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் தலைமை தாங்கினார். அதன் செயலாளர் என்.எம்.முஹம்மத் இப்றாஹீம், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, நகர பிரமுகர்களான முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜே.அந்தோணி, ஏ.ஏ.அஜ்வாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், ஐடிஐ நிறுவனத்தின் திட்ட அலுவலர் ஏ.எடின்பர்ட்டி ராயன் அனைவரையும் வரவேற்றுப் பேசி, நாட்டு நலப்பணித்திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.
காயல்பட்டினம் கடையக்குடி தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்பணியாளர் விக்டர் லோபோ, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.ஹைரிய்யா, இ.எம்.சாமி, திருச்செந்தூர் அரசு ஐடிஐ நிறுவனத்தின் முதல்வர் சி.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், மேடையில் தலைமையேற்றிருந்த - முன்னிலை வகித்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிறைவாக, கோமான் நற்பணி மன்றத்தைச் சார்ந்த ஹாஜி ஏ.லுக்மான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இவ்விழாவில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கோமான் ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய, முகாம் துவக்க நிகழ்ச்சி மேடையில் வீற்றிருந்தோரால் அவ்விடத்தில் மரங்கள் நட்டப்பட்டது.
|