காயல்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை சுமார் 07.40 மணியிலிருந்து துவங்கி, சிற்சிறு இடைவெளிகளுடன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
காயல்பட்டினத்தில் போக்குவரத்து நெரிசலைப் போக்குவதற்காக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டதன் அடுத்த கட்டமாக, பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி, மார்ச் 11, 12 தேதிகளில், காயல்பட்டினம் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டது.
எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள எல்.கே. துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரும் ஆக்கிரமிப்புப் பகுதியில் வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கோட்டைச் சுவர் உடனடியாக அகற்றப்பட்டது. இதனால் தாழ்வான அவ்விடங்களில் தடுப்புகள் இல்லாமற்போனது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று காலையில் எல்.கே.துவக்கப் பள்ளியின் முன்புறமும், வகுப்பறைகளுக்குள்ளும், பள்ளி வெளி வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது.
கல்வி பயில பள்ளிக்கு வந்த மாணவர்கள், மழை நீர் தேக்கத்தால் வகுப்பறைகளுக்குள் அமர இயலாத சூழலைப் பார்த்துவிட்டு, வீடு திரும்பிவிட்டனர். ஆசிரியர்கள் மட்டும் பள்ளியைத் திறந்து வைத்தவாறு வகுப்புகளில் அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி பணியாளர்கள் மூலம் - தேங்கிய மழை நீரை சாலையோரத்தில் வழிந்தோடுமாறு வெட்டி விட்டார்.
நகர்மன்ற உறுப்பினர்களான ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
1949இல் துவக்கப்பள்ளியாக துவங்கப்பட்ட இந்த எல்.கே.துவக்கப்பள்ளி, 1962இல் உயர் நிலைப்பள்ளியாகவும், 1978 முதல் மேனிலைப்பள்ளியாகவும் இதே இடத்தில் செயல்பட்டு வந்தது. இப்பள்ளி மேனிலைப்பள்ளியாக இயங்கி வந்த காலத்தில், காயல்பட்டினம் வண்ணாக்குடி கடைத் தெருவில் உள்ள தாமரை பள்ளியில், எல்.கே.துவக்கப்பள்ளி பிரிவு இயங்கியது. 1999ஆம் ஆண்டில், துவக்கப்பள்ளி இங்கும், இங்கு இயங்கி வந்த மேனிலைப்பள்ளி - தாமரைப் பள்ளிக்கும் மாற்றப்பட்டது.
இடைக்காலத்தில், நகரில் மெட்ரிகுலேஷன் மோகம் பொதுமக்களிடையே மிகுந்ததையடுத்து, அரசு துவக்கப்பள்ளிகளில், விரல் விட்டு எண்ணுமளவில் ஏழை மாணவ-மாணவியர் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியும் அதற்கு விதிவிலக்கல்ல.
மாணவர்கள் வெகுவாகக் குறைந்துவிட்ட பின்பும், மிகுந்த சிரமங்களுக்கிடையில் பள்ளி நிர்வாகம் இப்பள்ளியை நிர்வகித்து வருகையில், இந்த ஏழை மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டேனும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பள்ளிக்கு விதிவிலக்களித்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று பெய்த கனமழையால், மழை நீர் தேங்கியுள்ள சாலைகள் சிலவற்றின் காட்சிகள் பின்வருமாறு:-
|