இலங்கை கஹட்டோவிட்ட நகரில், காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியின் கிளை நிறுவனம் இயங்கி வருகிறது. அதன் பட்டமளிப்பு விழா, கடந்த பிப்ரவரி மாதம் 11, 12 தேதிகளில் நடைபெற்றுள்ளது.
விழா நிகழ்வுகள் குறித்து, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அருட்சுடர் அண்ணல் நபியின் அவதார திருவிழா!
ஆலிமா முஅஸ்கரிய்யா முதலாம் பட்டமளிப்பு விழா!!
கஹடோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு துவக்க விழா!!!
புண்ணிய புர்தா ஷரீப் குறுந்தகடு வெளியீட்டு விழா!!!!
எம் முத்தான முஅஸ்கரின் மலர் வெளியீட்டு விழா!!!!!
ஆகிய இவ்வைந்து விழாக்கள் கடந்த பிப்ரவரி மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவினை சிறப்பிக்க காயல்பட்டினத்திலிருந்து பலர் சிறப்பு பிரமுகர்களாக அழைக்கப்பட்திருந்தனர்.
காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் ரகீபா ஹாஜ்ஜா எம்.எஸ்.சித்தி கதீஜா விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில், பெண்களுக்கான சட்ட விளக்கம், புர்தா மஜ்லிஸ், கண்மணி நாயகத்தின் மௌலித் மஜ்லிஸ், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மாணவிகளால் நடத்தப்பட்டது.
மேலும், இலங்கை கஹடோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் பகுதி நேர ஹிஃப்ளு பிரிவு மாணவியர் பங்கேற்ற “பாடலும், பல்சுவையும்” நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஆசிரியை ஹாஃபிழா நஹ்வீ ராபிஅத்துல் பஸரிய்யா அமீர் ஆலிமா முஅஸ்கரிய்யா இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, குர்ஆன் கூறும் வாழ்வியல் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, புர்தா போட்டி, கவிதைப் போட்டி, திறனாய்வு எனப்படும் வினாடி-வினா போட்டி ஆகியன நடைபெற்றன. வினாடி-வினா போட்டியை, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவி ஹாஜ்ஜா ஏ.ஏ.சி.தாஹா முஃப்லிஹா (முஅஸ்கரிய்யா) வழிநடத்தினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் தலைமையாசிரியை அஃப்ழலுள் உலமான எம்.ஐ.கதீஜத்துல் குப்ரா மஹ்ழரீ ஆலிமா முஅஸ்கரிய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, கஹடோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வர் எம்.யு.எஸ்.எஃப்.ஃபாத்திமா முஷ்ஃபிக்கா ஆலிமா முஅஸ்கரிய்யா, கல்லூரியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
ஆண்களுக்கான அமர்வில் காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபிக் கல்லூரியின் ஆசிரியரும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் அஸ்செய்யித் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் பாக்கவீ ஃபாழில் அஹ்ஸனீ சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கி, பட்டம் பெறும் மாணவியருக்கு ஸனது - சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை விளக்கக் கூட்டம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் புதிதாக ஸனது பெற்ற மாணவியரும், எம்.யு.எஸ்.எஃப்.ஃபாத்திமா முஷ்ஃபிக்கா ஆலிமா முஅஸ்கரிய்யா, அஃப்லலுள் உலமா MI.கதீஜத்துள் குப்ரா மஹ்ழரீ ஆலிமா முஅஸ்கரிய்யா, ஹாஜ்ஜா AAC.தாஹா முஃப்லிஹா (முஅஸ்கரிய்யா) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இவ்வாறு, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |